கணனியின் வரலாறும், கற்றல் கற்பித்தல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும்!

எஸ்.எல். மன்சூர்-

ன்றைய உலகில் அதிமுக்கிய சாதனம் எதுவென்று கேட்டால் அது கணினி என்றே கூறுவர். கணினியின்றி உலகமே இயங்காது என்று கூறும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் அதன் பங்கு மகத்தானது. 

ஆரம்ப காலத்தில் கணினி பெரிய பெரிய ஆய்வுகூடங்கள், பல்கலைகழகங்கள், உயர் தொழில்நுட்ப கூடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இவ்வாறாக காணப்படுகின்ற இன்றைய கணினியின் வரலாற்றை அதன் ஆரம்பத்திலிருந்து சற்றுப் புரட்டிப் பார்ப்போம்.

கற்காலத்தில் தனித்தனியாக திரிந்த ஆதிமனிதன் நாகரிகம் தோன்றியதன் காரணமாக கூட்டமாக ஒரே இடத்தில் வாழத்தொடங்கினான். அப்போது அவனுக்கு தன் வளர்ப்பு பிராணிகளை எண்ணுவதற்கு, உணவு தானியங்களை அளவிடுவதற்கு, பங்கிடுவதற்காக எண்களைக் கண்டுபிடித்தான். முதலில் எண்களை கூட்டுவதற்கும், கழிப்பதற்கும் மற்றும் பெருக்குவதற்கும் என்று தன்னுடைய விரல்களை பயன்படுத்தினான். 

அதன்பிறகு சிறிய சிறிய கற்களையும், விதைகள் தானியங்கள் போன்ற பொருட்கள் மட்டுமன்றி பிராணிகளின் எழும்பு போன்றவைகளையும் பயற்படுத்தினான் பின்னர் பணம் என்கிற பொதுவான பண்டம் வந்தன் பின்னர் காசுகளை பயன்படுத்தினான். நாகரீகம் வளர்ச்சியடைந்தது. கண்டுபிடிப்புக்களும் வெளியாகத் தொடங்கின.

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட காலத்தி;லிருந்தே சீனர்கள், ஜப்பானியர்கள், பெரிய எண்;களைக் கூட்டவும், பெருக்கவும் 'அபாக்கஸ்' என்கிற மணிச்சட்டத்தை பயன்படுத்த தொடங்கினர். இதுதான் கணித செயல்முறைகளை இயக்க உதவும் முதல் சாதனமாக கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கி.பி.1619ல் ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த 'ஜான் நேப்பியர்' என்கிற அறிஞர் சில எலும்புத் துண்டுகளை குடைந்து ஒரு கருவியை உருவாக்கினார். அதை 'நேப்பியர் போன்ஸ்' என்று அழைத்தனர். இதன் மூலம் பெருக்கல், வகுத்தல் போன்ற செயல்முறைகளை எளிதாக செய்ய முடிந்திருக்கிறது. இவர் பிற்காலத்தில் லொகிர்தமின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

கி.பி.1622-ல் வில்லியம் ஆல்ட்ரெட் என்பவர் 'ஸ்லைட்ரூல்' என்கிற கருவியை கண்டுபிடித்திருந்தார். கால்குலேட்டர் கண்டுபிடிப்பதற்கு முன்னர் இந்த கருவியேதான் கணித பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டதாகவும், பெருக்கல் குறியீட்டுக்கு முதன் முதலில் 'ஒ' -ஐ பயன்படுத்தியதும் இவர்தான் எனவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். 

இவ்வாறாக தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து தமது நண்பர்களுடன் விவாதித்து கொண்டிருக்கும்போது சக்கரத்திலிருந்து ஆரம்பித்த விவாதம் முடிவில் கணனியகம் வரை சென்று முடிந்திருக்கிறது. சக்கரம் கண்டுபிடித்த பிறகுதான் மனித நாகரிகம் மிக வேகமாக வளர்ந்ததாகவும் கூறப்படுகின்றது. உண்மைதான்! உலகினை ஆட்டிப்படைக்கும் மனிதனது கண்டு பிடிப்புக்களில் மிகவும் அசாத்தியமிக்கதான கண்டுபிடிப்பு என்றால் அது கணனியேதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது.

கணனியானது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 40 ஆண்டுகளில் அசுர வளர்ச்சிகண்டுள்ளது. இப்போது மனிதன் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்ற, ஏலவே கண்டுபிடித்த அத்தனைக்கும் கணினியின் பங்கு ஏதோர் வகையில் பயன்பட்டுகொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மனிதனது தோற்றுவாய், உலகின்தோற்றுவாய், நாகரிகத்தின் தோற்றுவாய், எதிர்காலத்தின் தோற்றப்பாடுகள், ஆகாயத்தின் அத்தனை ஆய்வுகளுக்கும், கடலின் ஆழம் தொடக்கம் பூமியின் உள்ளே வரையிலான அத்தனை பரப்புகளிலும் கணனி புகுந்து விளையாடுகிறது. 

அப்படியானால் இன்று இருக்கின்ற, எதிர்காலத்தில் ஏற்படவிருக்கின்ற அத்தனை விடயங்களுக்கும், அதாவது உணவு சமைப்பதிலிருந்து வாய்க்குள் உணவைக் கொண்டு செல்லும் வரையிலான சகலவிதமான தொழிற்பாட்டையும் இன்று ரோபோக்கள் இந்த கணனியின் ஊடாக செயற்படுத்த முடியுமாக இருந்தால் கணனியுகம் மனிதனது சிந்தனையை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என்பதில் எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமிருக்காது. அந்தவகையில் கணனி முக்கியமிக்க கண்டுபிடிப்பு என்பதுதான் அனைவரினதும் ஏகோபித்த முடிவு.

கணனி தொழில்நுட்பத்தின் ஆரம்பமாக 'அபாக்கஸ்' – எனப்படும் மணிச்சட்டம் கொண்ட ஒரு சிலேட். கணிதத்தை எளியமுறையில் கணிப்பிடுவதற்கும், எளிதாக பயன்படுத்துவதற்க்கும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது என்பதை மேலே பார்த்தோம். அதன் பிறகு கணிதத்தை மேலும் எளிதாக்குவதற்கு ஒரு இயந்திரத்தை கண்டுபிடிப்பதில் பலர் முயற்சியில் இறங்கினர். அவர்களுள் 'நேப்பியர், ஆர்த்ரெட், பாஸ்கல், சார்லஸ் பபேஜ்' போன்றோரைக் குறிப்பிடலாம். அவர்களது ஆய்வுகளும், முடிவுகளும் பின்னராக காலகட்டங்களில் இந்த கணனியின் வருகைக்கு ஆதாரமாகவும் அமைந்திருந்தன. அதன் பின்னர் ஹெர்மன் ஹோலரித் என்பவர் மக்கள் தொகையினைக் கணக்கெடுப்பதற்காக டேபுலட்டிங் என்கிற இயந்திரப்பொறி ஒன்றை உருவாக்கியிருந்தார். பின்நாளில் இவர்தான் (ஐ.பி.எம்) நிறுவனத்தை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உண்மையில் இன்றிருக்கின்ற கணனிக்கும் அன்றைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கணனிக்கும் நிறையவே வித்தியாசம் காணப்பட்டது. அப்போதிருந்த கணனிகள் வெற்றிட குழாய்கள் (vaccum tube) கொண்டு வடிவமைக்கப்பட்டன. இதனால் உருவத்தில் மிகப் பெரிதாகவும், எடையில் பல நூறு கிலோவும் காணப்படலாயிற்று. இதன் காரணமாக இதனை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதும் கஷ்டமான காரியமாக இருந்தன.

இந்த நிலைமையில் டிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டதன் பிற்பாடு கணனி தொழில்நுட்பத்தின் சாகசத்திற்கு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. வெற்றிட குழாய்கள் நீக்கப்பட்டு, டிரான்ஸ்சிஸ்டர் பயன்படுத்தப்பட்டதால் கணினியின் அளவும், எடையும் சிறியதாக மாறியன. டிரான்ஸ்சிஸ்டர்-ஐ இன்னும் எவ்வாறு சுருக்கலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது ஐ.சி கண்டுபிடிக்கபட்டது. பல ஐ.சி சேர்க்கியூட்களை ஒரே சில்லுக்குள் நுழைக்கலாமா? என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது இன்டெல் நிறுவனத்தின் ராபர்ட் நைஸ் என்பவர் மைக்ரோப்பிரசரை கண்டுபிடித்தார். இக்; கண்டுபிடிப்பிற்குப் பிறகு கணனியின் அளவு மிகவும் சிறியதாக காணப்படலாயிற்று. அதன் காரணமாக இன்று மேசை கணனி, மடிக்கணனி, கைக்கணனி என்று அளவில் சுருங்கிக் கொண்டே செல்கின்றது. இன்று கணனியின் வளர்ச்சி வேகம் நாளொரு பொழுதும் வண்ணமுமாக வடிவங்களிலும், அளவுகளிலும், வேகத்திலும், தரத்திலும் மாறிக்கொண்டே செல்கின்றது. இத்தகைய கணனியின் பரிணாம வளர்ச்சி கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்துதல் அவசியமாகும்.

கணனி ஊடாக கல்வியிலும், கற்றலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

மேலும், இன்று கணனி முக்கியமான ஒரு சாதனமாகவே பார்க்கப்படுகின்றது. எந்தவொரு விடயத்தைப் பார்த்தாலும் அது கணனியின் ஊடாகவே பார்க்கப்படுகின்றது. காரியாலயம் என்ன, தொழிற்சாலை என்ன எங்கும் எதிலும் கணனியின் முக்கியத்துவம் காணப்படுவதை நாம் அறிவோம். இன்று வீட்டில் இருந்தபடி உலகையே வலம் வரும் மனிதனது செயற்பாடுகள் நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டே செல்கின்றது. இருப்பினும் இன்றைய பாடசாலைகளில் மாத்திரம் இந்தக் கணனி வருகை தந்ததன்பின்னரும் ஆசிரியர்கள் கரும்பலகையும், வெண்கட்டியுடனும் காணப்படுகின்;றமை மாற்றம் பாடசாலைக்குள் இன்னும் முழுமையாக வந்தடையவில்லை என்றே கூறப்படுகின்றது. காரணம் ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொண்டாலும் தன்னுடைய கற்றலையும், கற்றற் செயற்பாடுகளையும் மாற்றம் செய்யவில்லை என்பதுதான் உண்மையான விடயமாகும்.

அண்மையில் ஒரு பாடசாலைக்குச் சென்றிருந்தபோது ஆசிரியர் ஒருவர் தரம் 2 வகுப்பில் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். அவர் வெண்கட்டி கொண்டு கரும்பலகையில் கற்பிக்கவில்லை. அவர் மல்டிமீடியாவில் கணனியில் புறோகிராம் தயாரித்து அன்றைய பாடத்தைக் கற்பித்துக் கொண்டிருந்தார். மாணவர்களும் ஆசிரியரின் கற்பித்தலில் முழுமையாக மூழ்கியிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கணனியின் ஊடாக பாடத்தைத் தயாரித்து இலகுவான முறையில் மாணவர்களுக்கு விளங்கும் வகையில் எளிதான உதாரணங்களுடன் உண்மையான பொருட்களையும், உபகரணங்களையும் திரையில் காண்பித்துக் கொண்டு கற்பித்தமையானது, மாணவர்களினது கற்கும் ஆவலைத் தூண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது. 

அந்தவகையில் இன்றைய அறிவுப்பிரவாகம் பிரகாசித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழும் நாம் உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாறிக் கொண்டு செல்லவேண்டியது நமது கட்டாயமாகும். அனைத்துத் துறைகளிலும் தொழிற்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி வேகத்துடன் சென்று உடனடியான பெறுபேற்றைத் தந்து கொண்டிருக்கும் அறிவுப்புரட்சியினை உள்வாங்கிக் கொண்டு பாடசாலைகளும் மாணவர்களின் கற்றலுக்குத் துணையாக இந்த கணனியின் ஊடாக கற்றலை மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்த வேண்டியும் உள்ளது. நவீன தொழிற்நுட்பத்தின் வளர்ச்சி வேகத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய மாணவர்களைக் கொண்டுள்ள இன்றைய பாடசாலைகளில் அதற்கேற்றவாறு கற்பித்தல் முறைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவந்து கற்பிப்பதற்கு தங்களைத் தயார்படுத்த வேண்டியும் உள்ளது. 

அந்தவகையில் பார்க்கின்றபோது அரசும் இன்றைய அசுரவேகத்தின் அடிப்படையில் மாணவர்களது மேம்பாட்டிற்குரிய சகலவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது, போட்டிகரமான கல்வி முறைமையில் புத்தகங்களினால் பெறும் கல்வி மாத்திரம் தனிநபர் முன்னேற்றத்துக்கு காரணமாக அமையாது என்பதனை புரிந்துகொண்டு ஆக்கதிறனுக்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடிய வகையில் பிரயோக கற்றல் முறையினை பயன்படுத்தி பிள்ளைகளை அதில் ஈடுபடுத்தக் கூடிய மஹிந்தோதய 1000 இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் அடிப்படை உள்ளீடான மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை நிர்மானித்தல் மற்றும் அதற்கு தேவையான நவீன உபகரணங்களை வழங்குதலும் ஆசிரியர் வளத்தை வலுவூட்டுவதும் கடந்த 2013ம் ஆண்டில் கல்வி அமைச்சினால் எட்டப்பட்ட செயற்சாதனைகளின் முக்கிய அம்சங்களாகும். இதனை வெற்றிகரமான முறையில் அடைந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த வசதிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

அதேவேளை பிள்ளைகளின் உயர்ந்தபட்ச இயலுமைகளை விருத்தி செய்து உயரிய வாழ்க்கை முறைக்கு ஈடுபடுத்தவும், சமூகத்துக்கு பயன்மிக்க வழிகாட்டல்களை வழங்கவும், மற்றும் அதற்கு தேவையான அடித்தளத்தை இடுவது தொடர்பாகவும் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை தொடர்ந்தும் வலுவூட்டி தேசிய தொழில்சார் தகைமையுடன் இணைந்த க.பொ.த (உ.த) தொழில்நுட்ப பாடவிதானம் 250 பாடசாலைகள் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது இந்நாட்டின் கல்வியில் திருப்பு முனையாக அமைந்துள்ளமை முக்கிய அம்சமாகும். மேலும், நவீன அறிவு மற்றும் திறமைகளைப் போன்று அறிவு பண்பினை போசிக்க கூடியவாறு இளம் சந்ததியினரை உருவாக்கவும், இது தொடர்பாக ஆர்வத்துடன் சகல பக்கத்தோற்றங்கள் ஊடாகவும் கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து சிறந்த சமூகத்தை உருவாக்க பங்களிப்பு செய்வதில் கல்வி அமைச்சு தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை முக்கியமாகும்.

ஆதலால்தான் மகிந்த சிந்தனையின் செயல்வடிவம் இந்நாட்டின் கல்வித்துறையிலும் அதிசயிக்கத்ததாக அமைய வேண்டும் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் 'இலவசக் கல்விக்காக எமது பிள்ளைகளுக்குள்ள உரிமையை எந்த வகையிலும் இல்லாதொழிக்கமாட்டேன். நாடு பூராவுமுள்ள சகல மகா வித்தியாலயங்கள் மற்றும் மத்திய மகா வித்தியாலயங்களுக்குத் தேவையான உயர்தர விஞ்ஞானக்கூடம், சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் கற்கும் அமைப்பைக் கொண்ட மொழிநிலையம், கணனி நிலையம், நூலகம், விளையாட்டரங்கம் உட்பட்டதாகச் சகல வசதிகளையும் பெற்றுக் கொண்டு பூரணமான பாடசாலைகளாக அவற்றை உயர்நிலைக்கு கொண்டு வருவேன் (மகிந்த சிந்தனை- 2005 - பக்கம் 72)

பாடசாலைக் கல்வி முறையானது எதிர்வரும் அபிவிருத்தித் தசாப்தத்தின் பொருட்டாகவன்றி பல நூற்றாண்டுகள் தொலைதூரம் செல்லக்கூடியவாறே நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும். தற்போது கல்விக்காக ஒரு சிறுவர் செலவழிக்கின்ற காலம் எவ்வளவு தூரத்திற்கு எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாக இருக்கின்றது என்பது பற்றி ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். சிறுவர்கள் தமது எதிர்காலத்தினுள் வழிதவறாதவாறு பாடசாலை வகுப்புகளின் அளவையும் பரீட்சை முறையையும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் (மஹிந்த சிந்தனை 2010- பக்கம் 78)' என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று ஒவ்வொரு கல்வி வலயத்திலும் ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு கணனியின் ஊடாக கற்பிக்கின்ற மென்பொருளை தயாரித்து வழங்கிவரும் கல்வியமைச்சு குறிப்பாக ஆரம்பக்கல்வியில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்காக் கொண்டு ஆசிரியர்களுக்கும், ஆசிரிய ஆலோசகர்களுக்கும் பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது எதிர்காலத்தில் கணனியில் கற்பதற்கான வசதிகளை மேலும் வலுப்படுத்துவதற்குதவும் என்றே கூறலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :