இங்கிலாந்து வீரர் டூவர்ட் பிராட்டின் வேகத்தில் உருகுலைந்து போன இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்களில் சுருண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 3 டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒன்று வீதம் வென்றதால் தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் ஆடுகளத்தில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீர் (4 ஓட்டங்கள்), முரளிவிஜய் (0), புஜாரா (0), விராட் கோஹ்லி (0) ஆகியோர் வெறும் 8 ஓட்டங்களுக்குள் இந்திய அணியை நெருக்கடியில் சிக்க வைத்து விட்டு வெளியேறினர்.
இதனையடுத்து இந்திய அணியை மீட்க அணித்தலைவர் டோனியும், ரஹானேவும் போராடினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக ரஹானே (24ஓட்டங்கள்) ஆட்டமிழக்க இந்திய அணி மீண்டும் தடம் புரண்டது.
அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா (0), அவரது புதிய எதிரி ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த அஸ்வின் அதிரடி காட்ட இந்திய அணி ஒரு வழியாக 100 ஓட்டங்களை கடந்தது. அணித்தலைவர் டோனியும் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
ஓட்டங்கள் 129 ஆக உயர்ந்த போது, அஸ்வின் (40 ஓட்டங்கள்) ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து புவனேஷ்வர்குமார் டக்–அவுட் ஆக, அணித்தலைவர் டோனியின் போராட்டமும் 71 ஓட்டங்களில் (133 பந்து, 15 பவுண்டரி) முடிவுக்கு வந்தது.
இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 46.4 ஓவர்களில் 152 ஓட்டங்களில் அடங்கி போனது. இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட் மேல் கைப்பற்றுவது இது 12வது முறையாகும்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடியது. தனது முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்கள் குவித்துள்ளது.






0 comments :
Post a Comment