விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஆளும் கட்சியிலிருந்து விலகுவது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளது.
ஏற்கனவே தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகிய உதய குமார என்ற ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட அரசாங்கம் வாய்ப்பளிக்க உள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திற்கும் தேசிய சுதந்திர முன்னணிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகிய உதய குமாரவிற்கு மொனராகல் மாவட்டத்தில் ஆளும் கட்சியில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க சிறீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு தேசிய சுதந்திர முன்னணி கடுமையான தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது இணக்கப்பாட்டை மீறி, உதய குமாரவிற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முசாம்மில் தெரிவித்துள்ளார்.
எனவே அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா இல்லையா என்பதனை இன்று தீர்மானிக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியில் இருந்து விலகிச் சென்றால் காற்றுப் போன பலூனாக மாற நேரிடும் என்பதனை உணர்ந்துள்ள விமல் வீரவன்ச, பல தடவைகள் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக எச்சரிக்கை விடுப்பதும் பின் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பதும் வழமையாகிப் போன நிகழ்வாக மாறியுள்ளதாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment