இந்தியாவும் சீனாவும் நல்ல நண்பர்களாகிவிட்டன எனவே வாய்ப்பை நழுவவிட்டுவிடாது தமிழ்த் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும் தமது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றியமைத்து முக்கியமான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான தக்கதருணம் இதுவாகும் என ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு செயற்பாட்டின் மூலமே இந்தியாவின் ஒத்துழைப்புடன் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை பெறமுடியும் என்பதுடன் உத்தியோகப் பூர்மற்ற முறையில் பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்து கருத்து வௌியிட்டிருந்தாலும் அவர்களது கருத்துக்கள் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டிலேயே இருந்தன. சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமியைத் தவிர்த்து பார்த்தாலும் ஏனையவர்கள் மத்தியில் அதிகாரத்திலுள்ள அரசின் முக்கிய தீர்மானங்களையும் நகர்வுகளில் அதிக செல்வாக்குச் செலுத்துபவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச கற் கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் ஏற்பாட்டில் பிராந்தியம் மற்றும் உலகுக்கு பொருத்தப்பாடான பிரதமர் நரேந்திர மோடியின் கீழான இந்தியா எனும் தலைப்பில் விசேட கலந்துரையாடலொன்று் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழுவறையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பாரதீய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான பேராசிரியர் மாதவ் நலபாட், முன்னாள் மத்திய அமைச்சர் காலாநிதி சுரேஷ் பிரபு ,பா.ஜ.கா.வின் தேசிய வௌியுறவுக் கொள்கை ஏற்பாட்டாளர் கலாநிதி, ஸ்வப்ன் தாஸ்குப்தா, பா.ஜ.காவின் தேசிய செயற்குழு உறுப்பினர் கலாநிதி.சேஷாத்ரி சாரி ஆகியோர் கலந்து கொண்டு இலங்கை இந்திய உறவு, சார்க்வலயம், 13ஆம் திருத்தம், அரசில் தீர்வுக்கான விடயங்கள், மோடியின் எதிர்கால திட்டங்கள் உட்பட முக்கிய விடங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வௌியிட்டிருந்தனர்.
அக்கருத்துக்கள் தொடர்பில் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தவரும், அரசில் விமர்சனகரும், ஐ.நாவுக்கான முன்னாள் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுமான தயான் ஜயதிலக்க கருத்து வௌியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
குறித்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த பாரதீய ஜனதாக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அரசாங்க ரீதியான உத்தியோக பூர்வவிஜயமொன்றை மேற்கொண்டிருக்கவில்லை என்பது உண்மைதான். அதற்காக அவர்களின் கருத்துக்களை அப்படியே முழுமையாக கருத்திலெடுக்காது விட்டுவிடமுடியாது. இதில் சுப்பிரமணிய சுவாமியின் கடுமையான கருத்துக்களை தவிர்த்துப்பார்த்தாலும் ஏனைய அனைவரும் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டிலியேயே கருத்துக்களை முன்வைத்திருந்தனர். மேலும் சேஷாத்திரி, முன்னாள் மத்திய அமைச்சர் காலாநிதி சுரேஷ் பிரபு(சிவசேனா கட்சி, தேசிய வௌியுறவுக் கொள்கை ஏற்பாட்டாளர் கலாநிதி. ஸ்வப்ன் தாஸ்குப்தா போன்றவர்கள் தற்போதைய அதிகாரத்திலிருக்கும் மத்திய அரசில் மிகமிகச் செல்வாக்கு உள்ளவர்களாக காணப்படுகின்றனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
நல்ல நண்பர்கள்
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இணைந்து பிரிக்ஸ் வங்கியை அமைக்க முடிவெடுத்தன. இந்த ஐந்து நாடுகளும் இணைந்து 1000 கோடி டொலர் முதலீட்டில் இந்த வங்கியை தமது நாடுகளின் வளர்ச்சிக்காக உருவாக்கவுள்ளன. இந்த வங்கியின் தலைமையம் சீனாவில் அமைந்துள்ளது. பூச்சியத்திலிருந்த இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மோடியின் முதற் செயற்திட்டமானது பிரிக்ஸ் வங்கியால் முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே இதனை மையமாகக் கொண்டு ஆசியாவில் முக்கிய பொருளதார நிலையமாக காணப்படும் சீனாவுடன் இந்தியா சிறந்த நட்பை பேண முடிவு செய்துள்ளது. மேலும் ஆசிய நாடுகளின் மீதான உலக வங்கியின் தலையீட்டை இந்தியாவும் சீனாவும் இணைந்து குறைப்பதையே இலக்காக கொண்டுள்ளன. மேலும் இந்தியாவில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை பிரிக்ஸ் வங்கி கடன் அளிக்கவுள்ளது. இதனால் சீனாவுக்கும் இந்தியாவுக்குமான நட்பு மேலும் வலுடைவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.
மாற்றம் வேண்டும்
தமிழ்த்தலைமைகளைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு, புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட சர்வதேச நாடுகளையே அடியொற்றி தமது அரசியல் நிலைப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலைமையானது தற்போது மாற்றப்படு மிகவும் அவசியமாகின்றது. அதேபோன்று ஆட்சியில் உள்ளிட்ட சிங்களத் தலைமைகள் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளை முன்னிலைப்படுத்தி மேற்குல நாடுளுக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றது. இவ்வாறான நிலைமையும் மாறவேண்டியது அவசியமாகின்றது.
இந்தியாவின் புதிய மத்திய அரசானது அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குல நாடுகளோ அல்லது அமைப்புக்களோ இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்வதை முற்றுமுழுதாக எதிர்க்கின்றது. அதற்கு எப்போதுமே துணைபோகப்போவதில்லை. எனவே தமிழ்த்தலைமைகளும் சிங்களத்தலைமைகளும் தமது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியதொரு முக்கிய தருமாணக இது காணப்படுகின்றது. இந்தியாவைத் தாண்டி எவ்விதமான முடிவுகளையும் எடுக்கமுடியதிருக்கும் தற்போதைய நிலைமையில், அவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தி முழுமையாக புதுடில்லியுடன் நேரடிப்பேச்சுவார்த்தைகள் குறித்து கலந்துரையாடுவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை எட்டுவதற்கான வாய்புக்கள் உள்ளன. அவ்வாறு இரு தரப்பினரும் மாற்றமொன்றை ஏற்படுத்தும் தீர்மானமொன்றை எட்டாத வரையில் இழுபறியான நிலைமை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
13ஆவது திருத்தம்
இங்கு வருகை தந்திர முக்கியஸ்தர்கள் 13ஆவது திருத்தம் போதுமான அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டிருந்தாக கூறியிருந்தனர். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்திவிட்டோம். 13ஐ தாண்டிச் செல்லப்போகின்றோம், 13 நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்றே இந்திய தரப்பினரிடம் தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருக்கின்றனர். அதேநேரம் தமிழ்த்தேசியக் கூட்மைப்பினர் 13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகள் எவையுமே நடைமுறைப்படுத்தப்படவில்லையென்றே தொடர்ச்சியாக கூறிவருகின்றனர். இதனை இந்திய ஆட்சியாளர்கள் கருத்திலெடுக்க வேண்டும். அதேநேரம் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்திய தரப்பினரின் மாறுபட்ட கருத்துக்களும் முற்றாக மாற்றமடையவேண்டும்.
அவ்வாறிருக்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முதற்கட்டமாக 13ஆவது திருத்தச்சட்டத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். அதனை பகுதியாக அமுலாக்குதல், ஏற்பாடுகளை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளைக் களைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் முகமாக இரு தரப்பினரும் நேரடியாக மேசையில் அமர்ந்து ஐயப்பாடுகளை களையும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியமாகும். இதன் மூலமே கூட்டமைப்பின் ஐயப்பாடுகளைக் களைந்து 13ஆவது திருத்தம் தொடர்பில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
தொடரமுடியாது
அரசாங்கமானது இந்தியாவுக்குச் செல்லும்போது ஒருவிதமான கருத்தையும் பின்னர் வேறுவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு சீனா தனக்கு பக்கத்துணையாக இருக்கின்றது என்ற நம்பிக்கையே முக்கிய காரணமாக இருக்கின்றது. சீனா இலங்கையில் பாரிய முதலீடுகளைச் செய்து, இலங்கையின் அபிவிருத்திக்கு பல கைகொடுப்புக்களைச் செய்தாலும் தொடர்ந்தும் சீனாவின் பின்னால் மறைந்து கொண்டு போலி வாக்குறுதிகளை அரசாங்கத்தால் வழங்க முடியாது. காரணம் இந்தியாவும் சீனாவும் நண்பர்களாகிவிட்டனர். அவ்வாறான நிலைமை தொடர்வதனால் எமக்கே பின்விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. ஆகவே அதனைக் கவனத்தில் கொண்டு மாறுபட்ட கருத்துக்களை வௌிப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடு முழுமையாக நிறுத்தப்படுவது சிறந்தவொரு செயற்பாடாகவே இருக்கும்.
பொருளாதார வளச்சியே இலக்கு
பொருளதார வளர்ச்சியையே இலக்காகக் கொண்டள்ள புதிய இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சிப் பணிகளுக்காக, உலக வங்கி, சர்வதேச நிதியத்தை அணுகும் போது, வளரும் நாடுகளுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவை விதிக்கும் நிபந்தனைகள் ஆசிய மற்றும் சார்க் நாடுகளுக்கு சுமையாக மாறுவதுமுண்டு. ஆகவே வளர்ந்து வரும் நாடுகள் ஐக்கியத்துடன் தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்பது அவசியம் என்பதில் கண்ணும் கருத்துமாகவுள்ளார். மேலும், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய, மூன்று நாடுகளின் மக்கள் தொகை, உலக நாடுகளின் மொத்த மக்கள் தொகையில், சரிபாதிக்கு அதிகம் என்பதால், இம்முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளார். ஆகவே இலங்கை உட்பட சார்க் வலய நாடுகள் உள்ளிட்ட ஆசியாவின் அனைத்து நாடுகளினதும் உட்கட்டமைப்பு வளர்ச்சியையே பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட மோடி தலைமையிலான அரசு விரும்புகின்றது.
வாய்ப்பை நழுவ விடக்கூடாது
இவ்வராறன கருகோள்களுடனும் இலக்குகளுடனும் இந்தியாவின் புதிய மத்திய அரசு செயற்பட்டு வருகின்ற நிலையல் தமிழ்த் தலைமைகளும், சிங்களத்தலைமைகளும் தாம் தொடர்ச்சியாக வாக்குவங்கிக்காக கடைப்பிடித்துவரும் அரசியல் நிலைப்பாடுகளிந்து வௌியே வரவேண்டும். அதுமட்டுமன்றி இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு நேரடியாக புதுடில்லுடன் தமது உறவுகளை மேம்படுத்துவது மட்டுமின்றி நிலைப்பாடுகளையும் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். அதற்குரிய சரியான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை நழுவ விடாது தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதே அவசியமானதாகும். இதனை உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இருதரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

0 comments :
Post a Comment