இலங்கையில் இன்று அனைத்து மக்களும் நிராகரிக்கும் அரசமைப்பே நடைமுறையில் உள்ளது. 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த அரசமைப்புக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட இந்த அரசமைப்பை நிராகரிக்கிறார். எனவே, அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு தலைமையேற்க வேண்டும் என்று கோட்டே ரஜமஹா விகாராதிபதி வண மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம்' என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சோபித்த தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "இலங்கையில் இன்று சட்டத்தின் ஆட்சி இல்லை. சட்டவாக்க சபையும், நீதித்துறையும் ஜனாதிபதியின் கைகளில் இருக்கின்றன. நீதித்துறைக்கு மேல் ஜனாதிபதி இருக்கிறார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் தலைமை தாங்க வேண்டும்.
ஆளும், எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, முழு நாடே எதிர்த்து, நிராகரிக்கும் அரசமைப்புதான் இலங்கையில் நடைமுறையில் இருக்கிறது. 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த அரசமைப்புக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகூட இந்த அரசமைப்பை நிராகரிக்கிறார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு ஜே.வி.பியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். அப்படியாயின், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் தலைமை தாங்க வேண்டும். இன்று எமது நாடு போதைப்பொருளால் தன்னிறைவடைந்துள்ளது. இதனை நாம் மாற்ற வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். அத்துடன், அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்த வேண்டும். நீதி நிலைநாட்டப்பட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம், பீதியின்றி வாழ அனைத்து அரசியல் கட்சிகளும் பேதங்களைக் கடந்து ஒரே மேடையில் ஓரணியில் ஒன்றுதிரள வேண்டும்" என்றுள்ளார்.

0 comments :
Post a Comment