முஸ்லிம்களின் சவால்களை கையாள்கின்ற தளமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் மாற வேண்டும் -ஜெமீல்



அஸ்லம் எஸ்.மௌலானா-

நாட்டில் ஏற்பட்டுள்ள இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களை கையாள்கின்ற தளமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருதில் அமைந்துள்ள கொம்டெக் நிறுவன மண்டபத்தில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் அவசர அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேலும் பேசுகையில் தெரிவித்ததாவது;

"தென்கிழக்கு பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட வரலாற்றை பொறுப்புள்ள தலைமைகளும் புத்திஜீவிகளும் மீட்டிப் பார்ப்பது அவசியமாகும். அது பற்றி எமது இளம் சந்ததியினருக்கும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

இப்பல்கலைக்கழகம் வெறுமனே பட்டதாரிகளை உருவாக்கி வெளியேற்றுகின்ற வேலையைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அவ்வாறு உயர் கல்வியை மாத்திரம் நோக்காகக் கொண்டிருந்தால் நாம் பெரும் போராட்டங்களை செய்து-
பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் இப்படியொரு பல்கலைக்கழகத்தை
உருவாக்கியிருக்கத் தேவையில்லை.

1994 ஆம் ஆண்டு அன்றைய யுத்த சூழ்நிலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கு எம்மால் போக முடியாது என்று கூறி எனது தலைமையில் மாணவர்களை அணி திரட்டி போராட்டத்தை ஆரம்பித்த போது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள், எமது 32 மாணவர்களுக்கும் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றத்தை பெற்றுத் தந்து விட்டு- அதில் வெற்றியடைந்திருப்பது குறித்து, தான் இன்று பெரும் சந்தோசத்தில் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.

ஆனால் நான் சொன்னேன், சேர் உங்களுக்கு வேண்டுமானால் சந்தோசமாக
இருக்கலாம், ஆனால் எனக்கு அப்படியொரு சந்தோசமோ திருப்தியோ ஏற்படவில்லை.

நமது சமூகத்திற்கென ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கிக் கொள்வதே நிரந்தரத் தீர்வாகவும் அது நமது சமூக விடுதலைக்கான களமாக அமையும் எனவும் வலியுறுத்தினேன்.

தற்போது அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியாகவும் பலம் வாய்ந்த ஒரு அமைச்சராகவும் நீங்கள் இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தை கை நழுவ விட்டால் ஒருபோதும் நமது சமூகத்திற்கான பல்கலைக்கழகத்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் தலைவரிடம் மன்றாடினேன்.

அதனை அவர் ஏற்றுக் கொண்டே எமது மாணவர் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியதுடன் முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தியையும் தனது அமைச்சு அதிகாரத்தையும் ஜனாதிபதி சந்திரிகாவிடம் இருந்த தனிப்பட்ட செல்வாக்கையும் பயன்படுத்தி 1995ஆம் ஆண்டு நமக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்கித் தந்தார். 

இதன் மூலம் நமது சமூக விடுதலைப் போராட்டம் பலப்படுத்தப்பட வேண்டும் என தலைவர் அன்று பிரகடனம் செய்தார்.

இக்காலப் பகுதியில் எமது போராட்டம் பாராளுமன்றம் வரை விஸ்தரிக்கப்பட்டு-
நாங்கள் எம்மை அர்ப்பணித்து பெரும் தியாகங்களை செய்தே இந்த இலட்சியத்தை
அடைந்து கொண்டோம். சம்மாந்துறையில் வெறும் வறண்ட காடாகக் கிடந்த இடத்தில்
பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்விக் கூடத்தை, கட்டிடங்கள்
உள்ளிட்ட அனைத்து வளங்களையும் ஏற்படுத்தி ஒரு தேசிய பல்கலைக்கழகமாக
மாற்றியமைப்பதற்கு நாம் செய்த தியாகங்களை பட்டியலிட முடியாது. அக்காலப்
பகுதிகளில் இரவு பகலாக ஊன் உறக்கமின்றி அங்கும் இங்கும் அலைந்து பெரும்
பாடுபட்டோம்.

இப்படி ஒரு தேசிய பலகல்க்கழகத்தை ஸ்தாபிக்கப்படுவதற்கு காரணகர்த்தாவாக
இருக்கும் பாக்கியத்தை இறைவன் எனக்குத் தந்திருந்தான். இதன்போது என்னுடன்
தோள்கொடுத்து பாடுபட்ட எனது சக மாணவ நண்பர்களான ஆஹிர், தௌபீக், மஜீத்,
சதாத், மர்ஹூம் அஸீஸ் ஆகியோரையும் விரிவுரையாளர்களான இஸ்ஹாக், கலீல்,
ஜலால்தீன், ஆலிப், றபீக், மர்ஹூம் மௌலவி அப்துர் ரஸ்ஸாக் ஆகியோரையும்
நாம் மறந்து விட முடியாது.,

அதேவேளை சம்மாந்துறையில் அமைந்திருந்த இணைந்த பல்கலைக்கழக கல்லூரியின்
(AUC) பணிப்பாளர் எம்.வை.சித்தீக்கின் அயராத உழைப்பையும் பங்களிப்பையும்
இந்த சந்தர்ப்பத்தில் நான் இங்கு ஞாபகமூட்டுகின்றேன்.

இப்படி பெரும் போராட்டம்- தியாகங்கள் செய்து உருவாக்கப்பட்ட தென்கிழக்கு
பல்கலைக்கழகத்தின் நோக்கமும் கோட்பாடும் இன்று மழுங்கடிக்கப்பட்டு-
தடம்புரண்டு திசைமாறிச் செல்வதாகவே நான் உணர்கின்றேன். இந்நிலையில்
இப்பல்கலைக்கழகத்தின் பிதா மகன்களுள் ஒருவன் என்ற வகையில் என்னால்
அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடியாது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை உரிய இலட்சியத்துடன் நெறிப்படுத்த வேண்டிய
பொறுப்பும் கடமையும் எனக்கு உண்டு என்கின்ற வகையிலேயே
அப்பல்கலைக்கழகத்தின் புத்திஜீவிகளான உங்களுடன் இவ்விடயத்தை பகிர்ந்து
கொள்கின்றேன். இதில் உங்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது என்பதை மறந்து
விடாதீர்கள்.

நமது சமூகத்திற்கான இப்பல்கலைக்கழகத்தை எங்கோ உள்ள ஒரு சக்தி இயக்கிக்
கொண்டிருப்பதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. முஸ்லிம் சமூகத்தின்
பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கும் தீர்வுகளை முன்வைப்பதற்கும் களமாக அமைய
வேண்டிய நமது பல்கலைக்கழகம் இன்று எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை
நாம் அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த
நோக்கில் பயணிப்பதற்கு தயார்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள்
உடனடியாக எடுக்கப்பட வேண்டும். அன்று ஒலுவில் பிரகடனத்தை வெளியிட்டு
சர்வதேச மட்டத்தில் வரலாறு படைத்த இப்பல்கலைக்கழகம் முஸ்லிம் சமூகம்
எதிர்கொண்டிருக்கின்ற பொதுபல சேனா போன்ற பேரினவாத சக்திகளின் பாரிய
சூழ்ச்சிகளையும் திட்டங்களையும் முறியடிப்பதற்காக நமது சமூகத்தின்
அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற தளமாக மீண்டும்
மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க
முடியாது.

இந்த விடயம் தொடர்பில் பேசுவதற்கு இன்று முன்வந்துள்ள புத்திஜீவிகள் ஒரு
அமைப்பு ரீதியாக பலமான சக்தியாக உருவெடுக்க வேண்டும். அதன் மூலம் அனைத்து
முஸ்லிம் தலைமைகளையும் சந்தித்து ஒரே மேசையில் இருந்து பேசுகின்ற
சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த உயரிய முயற்சியில் ஈடுபடுவதற்கு
புத்திஜீவிகள் இதயசுத்தியுடன் முன்வருவார்களாயின் அதற்கு முழுமையான
ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நான் என்றும் தயாராகவுள்ளேன்.

அது மாத்திரமல்லாமல் இப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கம் முடக்கி
வைக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்களினதும் விரிவுரையாளர்களினதும்
கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் பல தகுதியான
விரிவுரையாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர்களது உரிமைகள்
மறுக்கப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இவை தொடர்பில் நீதி
அமைச்சர் ரவூப் ஹக்கீம், உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க,
ஆகியோரிடம் மட்டுமல்லாமல் ஜனாதிபதி அவர்களையும் சந்தித்து தீர்வுகளைப்
பெற்றுத் தருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் நான் தயாராக
இருக்கிறேன்" என்று ஜெமீல் தனது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதியும் தற்போதைய
சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் உட்பட மற்றும்
பல விரிவுரையாளர்களும் உரையாற்றியதுடன் கருத்துப் பரிமாறல்களும்
இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :