ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீரா சாகிப் இன்று அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் எனத் தெரிகின்றது.
(முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாகிப் தலமையில் அமைச்சர் அதாஉல்லா பிரதம அதிதியாய் கலந்து கொள்ளும்
சாய்ந்தமருதுக்கான பிரதேசசபை பிரகடனம் இன்று மாலை 7 மணிக்கு இம்போட் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பைக் காணத்தவறாதீர்கள்.)
கல்முனை மாநகரசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு முதன் முதலாக அரசியலில் புகுந்த - சாய்ந்தமருதைச் சேர்ந்த - கலாநிதி சிராஸ் மீரா சாகிப் அத்தேர்தலில் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று கல்முனை மாநகர மேயரானார்.
ஆனால் இரு வருடங்களில் மேயர் பதவியை இராஜிநாமாச் செய்து பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு மேயர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என கனவான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, முஸ்லிம் காங்கிரஸும் குறிப்பாக அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் விடாப்பிடியாக நின்றமையால் இறுதிநேரத்தில் வேறு வழியின்றி அப்பதவியை சிராஸ் மீரா சாகிப் இராஜிநாமாச் செய்து விட்டுக் கொடுத்தார்.
பெரும் சர்ச்சைக்கும் வாதப் பிரதிவாதஙகளுக்கும் உள்ளான மேயர் பதவி விலகல் விவகாரத்தினால் முஸ்லிம் காங்கிரஸுடன் முன்னாள் மேயர் சிராஸ் பெரும் அதிருப்தி கொண்டவராக இருந்து வந்தார்.இந்தநிலையில்தான் தற்சமயம் கலாநிதி சிராஸ் தேசிய காங்கிரஸில் இணையும் முடிவை எடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
இதற்கு ஏதுவாக தற்பொழுது கல்முனை மாநகரசயைின் கீழ் கூடிய வாக்காளர்களையும் சனத்தொகையையும் (சுமார் 30 ஆயிரம் பேர்) கொண்டிருக்கும் தனது சொந்த ஊரான சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கு எனத் தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை முன்வைக்கும் கூட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை நடத்துவதற்கு முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீரா சாகிப் ஏற்பாடு செய்துள்ளார்.
சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இக்ககூட்டத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
கூட்டத்தில் அமைச்சரிடம் சாய்ந்தமருதுவுக்குத் தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கை முன்வைக்கப்படும் அதேவேளை கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் முன்னாள் மேயர் சிராஸ் மீரா சாகிப் உத்தியோகபூர்வமாகத் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வார் என்றும் அறிய வருகின்றது.

0 comments :
Post a Comment