மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களுக்கான கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் பிரசார நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 26 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்ய வேண்டும். தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து தகவல்கள் தொடர்பாகவும் நன்கு சிந்தித்து பொருத்தமான தீர்மானமொன்றை எடுப்பதற்காகவே இவ்வாறு தேர்தலுக்கு முன்னரே பிரசார பணிகளை நிறைவடைய செய்யப்படுகின்றது.
மேலும் தேர்தலுக்காக நிறுவப்பட்ட கட்சி அலுவலங்கள் அனைத்தும் 27 ஆம் திகதி கட்டாயம் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அலுவலங்கள் அகற்றப்படாவிடின் நாங்கள் அவற்றை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்வோம் என்றார்.
இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
14 ஆயிரம் பொலிஸார் கடமையில்
வாக்களிப்பு நிலையங்களில் 8ஆயிரத்து 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு எண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு கடமைகளுக்காக 3 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை 1500 கலகம் அடக்கும் பொலிஸாரை தயார் நிலையில் வைக்குமாறும் கேட்டுள்ளேன். தேவையெனின் விசேட அதிரடிப் படையினர் உதவி நாடப்படும். எனினும் இராணுவத்தினரின் உதவி பெறப்படமாட்டாது.
75 ஆயிரம் அரச ஊழியர்கள் கடமையில்
தேர்தல் கடமைகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்களிப்பு நிலையங்களில் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு எண்ணும் பணிகளில் 2500 முதல் 2750 வரையான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வன்முறைகள்
கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இத் தேர்தலில் வன்முறைகள் குறைவாகவே பதிவாகியுள்ளன. பல மனித உயிர்கள் பலியானால் தான் தேர்தல் நடைபெற்று முடிந்தாக இருக்கும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. இத் தேர்தலில் இதுவரை ஒரு மனித உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர்களை கிழித்தல், தீ வைத்தல், மது போதையில் வன்முறைகளில் ஈடுபடுதல் போன்ற வன்முறை சம்பவங்களே பதிவாகியுள்ளன.
இதேவேளை தேர்தல் காலத்தில் போதைப் பொருள் விநியோகித்தல் மற்றும் அரச வளங்களை பாவித்தல் என தேர்தல் சட்டங்களை மீறும் வகையிலான நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது. அவ்வாறு யாரும் தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்படுவார்களாயின் உடனடியாக எமக்கு அறிவிக்கலாம்.
சொத்துப் பிரகடனம்
ஆறு மாவட்டங்களில் போட்டியிடுகின்ற பெரும்பாலான வேட்பாளர்கள் தமது சொத்து பிரகடனத்தை செய்துள்ளனர். மேலும் சிலர் சொத்து பிரகணம் செய்து வருகின்றனர். இதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
வாக்களிப்பது உங்கள் உரிமை
வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற அணைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். காரணம் வாக்களிப்பது உங்களது உரிமையாகும். வாக்களிப்பதனால் நமக்கு என்ன கிடைக்கப் போகின்றது என சிலர் எண்ணுகின்றனர். சிலர் தேர்தல் நாளன்று சுற்றுலா செல்கின்றனர் வாக்களிப்பதற்கு அஞ்சுகின்றனர். தேர்தலன்று இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றிலும் தவறான விடயமாகும். வாக்களிப்பது உங்கள் உரிமை என்பதால் கட்டாயம் அணைவரும் வாக்களிக்க வேண்டும்.
வாக்களிக்கும் முறை
வாக்களிப்பு முறைமையை பொறுத்தவரை இன்னமும் அதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. வாக்களார்கள் முதலில் கட்சிக்கு வாக்களித்து பின் மூன்று வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டும். கட்சிக்கு வாக்களிக்காமல் விருப்பு வாக்குகளை மாத்திரம் அளிப்பது பயனற்று போய்விடும். மேலும் வாக்களிக்கும் போது கட்டத்தினுள்ள புள்ளடியிட வேண்டுமே தவி 'சரி" அடையாளம் இடுவது தவறாகும். சில வாக்கு எண்ணும் நிலையங்களில் ஏற்றுகொள்ளப்பட்டாலும் கூட சில வாக்கெண்ணும் நிலையங்களில் இவ்வாறான வாக்குகள் நிராகரிக்கப்படுகின்றன. எனவே புள்ளடியிடுவது சிறப்பானதாகும்.
இதேவேளை விசேட தேவையுடையோர் நம்பிக்கையான ஒருவரின் உதவியுடன் அல்லது எமது அதிகாரி ஒருவரின் உதவியுடன் வாக்களிக்க முடியும்.
தேர்தல் முடிவுகள்
வாக்கு எண்ணும் பணிகளில் முதலாவதாக தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.15க்கு ஆரம்பிக்கப்படும். இதேவேளை இரவு 8 மணிக்கு முன்னர் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும் இரவு 11 மணிக்கு பின்னர் தேர்தல் பெறுபேறுகள் அறிவிக்கப்படும்.
வாக்கெடுப்பு நிலையத்தினுள் அனுமதி வழங்கப்பட்டிருப்பது
வாக்காளர்கள்
வாக்கெடுப்பு நிலைய பணியாட் குழுவினர்
போட்டியிடும் அரசியற் கட்சிகளின் செயலாளர்கள்
வேட்பாளர்கள்
வாக்கெடுப்பு நிலைய முகவர்களும் கண்காணிப்பாளர்களும்
வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அலுவலர்கள்
தெரிவத்தாட்சி அலுவலரின் அனுமதியைப் பெற்றுள்ள ஏனையவர்கள்
வாக்கெடுப்பு நிலைய வளவிற்குள்
கையடக்க தொலைபேசிகளைப் பாவித்தல்
புகைப்படங்களை எடுத்தல்
வீடியோ பண்ணுதல்
சுடுகலன்களை கைவசம் வைத்திருத்தல்
புதைப்பிடித்தல், மதுபானம், வேறு போதைவஸ்து பிரயோகம் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
வாக்களிப்புக்கு அடையாள அட்டை அவசியம்
வாக்களிப்பதற்காக வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாய தேவைப்பாடொன்றாகும்.
வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை நிருபிப்பதற்காக ஒவ்வொரு வாக்காளரினாலும் கீழ்காணும் அடையாள அட்டைகளுள் ஒன்றை வாக்கெடுப்பு நிலைய அலுவலர்களுக்கு சமர்ப்பித்தல் கட்டாயமானதாகும்.
தேசிய அடையாள அட்டை
செல்லுபடியான வெளிநாட்டுக் கடவுச்சீட்டு
செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்
அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை
முதியோர் அடையாள அட்டை( பிரதேச செயலாளரினால் விநியோகிக்கப்பட்டது)
மதகுருமார்களுக்கான அடையான அட்டை (ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டது)
தற்காலிக அடையாள அட்டை (தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டது)
மேற்குறிப்பிட்ட அடையாள அட்டைகளுள் ஏதேனுமொன்றை சமர்ப்பிக்காவிடின் வாக்கெடுப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டு வழங்கப்படமாட்டாது.
இதேவேளை தெளிவில்லாத அடையாள அட்டைகள், புகைப்பட்டத்தின் மூலம் ஆளை அடையாளம் காண முடியாது, பெயர் வாசிக்க முடியாதவாறு அழிந்திருப்பின் அமைச்சுக்களினால் அல்லது திணைக்களங்களினால் மற்றும் அரச நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கின்ற போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற புகைப்படத்துடன் கூடிய அல்லது புகைப்படம் இல்லாத வேறெந்த ஆவணமும் வாக்கெடுப்பு நிலையத்தினால் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

0 comments :
Post a Comment