தமிழில் குறும்பா எனப் பெயரிடப்பட்ட “லிமரிக்ஸ்” என்ற கவிதை வடிவம்

EDWARD LEAR இன் LIMERICK கவிதை வடிவத்தைத் தமிழுக்குத் கொண்டு வந்தவர் மஹாகவிது. உருத்திரமூர்த்தி அவர்கள்.

 தமிழில் குறும்பா எனப் பெயரிடப்பட்ட “லிமரிக்ஸ்” என்ற கவிதை வடிவம் 5 அடிகளைக் கொண்டது. இதற்கு இலக்கணம் வகுத்த போது,

காய் காய் தேமா
காய் காய் தேமா
காய் காய்
காய் காய்
காய் காய் தேமா - என்று வகுத்துள்ளனர்.


LIMERICK அயர்லாந்துக்குரிய ஆங்கிலக் கவிதை வடிவம். ஆகையினால், தமிழில் அதனை மேற்குறித்த விதிகளுக்கப்பாலும் விரிவுபடுத்திப் பார்க்கும் நோக்கில், சில கவிதைகளைக் காய் காய் புளிமா விலும் படைத்துப் பார்த்திருக்கின்றோம்.

அவற்றில் 2 கவிதைகள் இங்கே தரப்படுகின்றன. வித்தகர்கள், நடுவர் என்ற அக் கவிதைகளைப் பாத்திரம் 1ல் பார்க்கலாம்.

தமிழில் குறும்பா புதிய வடிவமல்ல. ஏற்கனவே உள்ள காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து என்பன அதற்கு நெருங்கிய வடிவங்கள் என்பர் சிலர்.

ஆதாரமாக –
தெள்ளுதமிழுக் குதவுசீலன்-துதி
செப்பண்ணா மலைக்கும் அனுகூலன்
செழியப் புகழ் விளைந்த
கழுகுமலை வளத்தை
தேனே சொல்லுவேனே - என்ற சிந்து எடுத்துக் காட்டப்படுவதுண்டு.

அண்மையில் “ஒயிற்கும்மி” என்ற வடிவத்தை பார்க்கக் கிடைத்தது. ஒயிற்கும்மி குறும்பாவைப் போலவே 5 அடிகளைக் கொண்டது. குறும்பாவில் 1ம், 2ம், 5ம் அடிகள் 3,3,3 என்ற சீர்களைக் கொண்டிருக்கும். 3ம்,4ம் அடிகள் 2,2 சீர்களைக் கொண்டிருக்கும். ஒயிற்கும்மியில் 1ம் அடி மாத்திரம் 4 சீர்களைக் கொண்டிருக்கும். மற்றையவை குறும்பாவிற்குரிய அதே சீர்அளவுகளைக் கொண்டதாகவே இருக்கும். ஆயினும், ஒயிற்கும்மிக்குரிய இலக்கணத்துக்குள் 5 அடிகளின் முதற்சீ்ர்களும் மோனை பெற்றிருத்தல், 3ம் 4ம் வரிகளைத் தவிர மற்ற வரிகள் ஈரசை, மூவசைச் சீர்களைக் கொண்டு வெண்டளை விரவி வருதல் 3ம் 4ம் வரிகள் எதுகை பெற்று, முடுகியலைக் கொண்டிருத்தல் என்பன சொல்லப்படுகின்றன.

இங்கே நாம் பாத்திரம் 2ல் அவற்றையொத்த பாக்களை சில மீறல்களோடு செய்து பார்த்திருக்கின்றோம். வித்தகர்கள் தவிர்ந்த நடுவர், வல்லவர்கள், தோது என்ற கவிதைகள் 1ம் 2ம் 5ம் அடிகளில் வெண்டளை விரவிவந்தவை 1ம் அடிக்குரிய எதுகை 3ம் 5ம் அடிகளில் பெரும்பாலும் பேணப்பட்டிருப்பதையும் 1ம் அடிக்கு 2ம் அடியில் மோனையும், 3ம் அடிக்கு 4ம் அடியில் மோனையும் அமைந்திருப்பதையும் அவதானிக்கலாம்.



இதற்கொரு விதி அமைப்பதாயின் –
காய் காய் காய் காய்
காய் காய் தேமா/புளிமா
காய் காய்
காய் காய்
காய் காய் தேமா/புளிமா - என்று அமைக்கலாம்.


நவீன குறும்பாவாக இதனைப் பார்க்க முடியும். கவிதைகளைப் பாருங்கள் உங்கள் கருத்துக்கள் எம்மைச் செம்மைப் படுத்தும்.

 - பாலமுனை பாறூக் -


பானம் – வித்தகர்கள்

பாத்திரம் -01

வித்தகர்க்கு விழாவெடுத்து விருதாம்

வேண்டுவதோ ஆறுபத்து வயதாம்

எத்தனைதான் வருடங்கள்

இவரிருந்தார் எழுதாமல்

எனப்பார்த்தும் சிலசபைகள் தருதாம் !



பாத்திரம் -02

வித்தகர்க்கு விழாவெடுத்து விருதுதரச் சபையினர்கள்

வேண்டுவதோ ஆறுபத்து வயது

எத்தனைதான் வருடங்கள்

இவரிருந்தார் எழுதாமல்

எனப்பார்த்தும் தருகிறது விருது !



பானம் – நடுவர்



பாத்திரம் – 01

சங்கீதப் போட்டிக்கும் நடுவர்

சரிதானோ? வநதவரில் ஒருவர்

வந்தவர்க்குத் தெரிந்ததுவோ

வாள்வீச்சு விளையாட்டு,

நின்றுவிட்டார், அனைத்துக்கும் நடுவர் !



பாத்திரம் – 02

சங்கீதப் போட்டிக்கும் மத்தியஸ்தம் தானவராம்

சத்தியமாய் … பார்க்கவந்த ஆளாம்

வந்தவர்க்குத் தெரிந்ததுவோ

வாள்வீச்சு விளையாட்டாம்

நின்றுவிட்டார் போட்டியெலாம் தானாம் !



பானம் – வல்லவர்கள்




பாத்திரம் – 01

நலனாய வல்லவர்கள் உள்ளார்

நல்லவர்கள் குறையெதுவும் சொல்லார்

மொழிஇரண்டும் தெரியாமல்

முதல்நூலைக் காணாமல்

மொழிமாற்று நூலினையும் சொல்வார் !



பாத்திரம் – 02

நலனாய நல்லவர்கள் நம்மிடத்தே உள்ளார்கள்,

நல்லவர்கள் மாசெதுவும் சொல்லார்,

மொழிஇரண்டும் தெரியாமல்

முதல்நூலைக் காணாமல்

மொழிமாற்று நூலினையும் சொல்வார்.



பானம் – தோது



பாத்திரம் – 01

நண்பனுக்காய் வந்தவனாம் தூது !

நன்றிமலர் தூவினனிப் போது

வந்ததனால் கண்டவனாம்

வஞ்சியவள் தங்கையினை;

தங்கமயில் அவனுக்காம் தோது !


பாத்திரம் – 02

நன்றிமலர் தூவினனாம் நண்பனுக்காய் தூதுவந்து

நங்கையினைக் கண்டஒரு நண்பன்,

வந்ததனால் கண்டவனாம்

வஞ்சியவள் தங்கையினை;

தங்கமயில் தூதனுக்கே தோதாம். !

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :