மாகாண சபைகளுக்குரிய முழு உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும் என்ற சூழ்நிலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஏற்படுமானால் அதனை ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி சபை மண்டபத்துக்குள்ளேயே பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அண்மையில் மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தைப் பலப்படுத்துவதற்கான விவாதத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு பற்றி ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள சில சமூக விரோத சக்திகள் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கெதிரான குரோதப் போக்குகளை விடாப்பிடியாக பின்பற்றி வருகின்றனர். 30 வருட யுத்த சூழ்நிலைகளுக்கு பின்னர் அமைதியாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட சகல சமூகங்களும் விருப்பம் கொண்டிருக்கையில் சிலர் மக்கள் மத்தியில் விஷமத்தனம் செய்கின்றனர்.
13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின்படி காணி அதிகாரம் இல்லை என்றால் மாகாண அமைச்சுகளுக்கு காணி அமைச்சு என்ற பதவி ஏன்? எதற்காக வழங்கப்பட வேண்டும்.அதிகாரம் இல்லாத பிரிவிற்கு அமைச்சுப்பதவி என்ற பெயர் நாமமும் ஆளணியும் எதற்கு என்பதற்கான விடையை காணி அதிகாரம் இல்லை என்று சொல்பவர்கள்தான் கூற வேண்டும்.
25 வருடங்களுக்கு பின்னர் மாகாண சபைக்கு 13 ஆவது திருத்தத்தின் மூலம் காணி அதிகாரம் வழங்கப்பட வில்லை என்ற புதிய கண்டு பிடிப்பு ஆசியாவின் ஆச்சரியமுள்ள நாடாக மலர இருக்கும் இலங்கையில்தான் நடந்திருக்கிறது.
வட மாகாண சபையை தமிழர்கள் கைப்பற்றியதன் விளைவாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் சிலர் மனநோயாளியாக மாறி வருகின்றனர்.

0 comments :
Post a Comment