சென்னையை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்ட தீவிரவாதிகள் - பரபரப்பு வாக்குமூலம்

சென்னையை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டதாக தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் புத்தூரில் அவர் தங்கியிருந்த வீட்டில் கைதுப்பாக்கி மற்றும் பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைபற்றினார்கள்.

தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் ஆந்திர மாநிலம் புத்தூரில் தங்கியிருந்த வீட்டை நேற்று மாலை தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் திடீரென்று சோதனை போட்டனர். அப்போது போலீஸ் பக்ருதீனையும், பிலால் மாலிக்கையும் முகத்தை மூடி போலீசார் அழைத்து வந்தனர். அவர்களோடு வழக்கு தொடர்பான சாட்சி ஒருவரையும் போலீசார் முகத்தை மூடி அழைத்து வந்தனர்.

போலீஸ் பக்ருதீனை பார்த்து உங்களது பெயர் என்ன? என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். நான் தான் போலீஸ் பக்ருதீன் என்று ஆவேசமாக சத்தம் போட்டுக்கொண்டு பதில் அளித்தார்.

அவரது முன்னிலையில் வீட்டில் நடந்த சோதனையில், கைதுப்பாக்கி ஒன்றும், முழுவதுமாக செய்து முடிக்கப்படாத ஏராளமான பைப் வெடிகுண்டுகளையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் இல்லை. ஆனால், அது செயல்படும் வகையில் நல்ல நிலையில் இருந்தது.

இந்த துப்பாக்கியை தற்காப்புக்காக வடமாநிலத்தில் இருந்து வாங்கி வந்ததாகவும் போலீஸ் பக்ருதீன் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட பைப் வெடிகுண்டுகள் முழுமையடையாமல் இருந்தன. அவற்றையெல்லாம் போலீசார் மூட்டைகட்டி அள்ளிச்சென்றனர்.

போலீஸ் பக்ருதீன், போலீஸ் விசாரணையில் மிகவும் தெளிவாக தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் என்னென்ன நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்தார் என்பதையும் போலீஸ் பக்ருதீன் விளக்கமாக கூறிவிட்டாராம்.

அவரது வாக்குமூலம் விவரம் வருமாறு:-

மதுரை நெல்பேட்டை நான் பிறந்து வளர்ந்த இடமாகும். எனது தந்தை பெயர் சிக்கந்தர் அலி. தாயார் பெயர் சையது மீரா, எனக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். எனது தந்தை போலீஸ் துறையில் ஏட்டாக பணியாற்றியவர். இதனால் எனது பெயரை போலீஸ் பக்ருதீன் என்று மாற்றி வைத்துக்கொண்டேன்.

தீவிரவாதி இமாம் அலி எனது பிரிவைச் சேர்ந்தவர். அவர்தான் எனக்கு தீவிரவாதம் பற்றி பயிற்சி கொடுத்தார். அவரோடு காஷ்மீர் மாநிலத்துக்கு சென்று வெடிகுண்டு செய்வதற்கான பயிற்சி பெற்று வந்தேன். காஷ்மீரில் தீவிரவாதிகளிடமும் நான் பாடம் பயின்றுள்ளேன்.

குடும்ப வாழ்க்கையில் எனக்கு நாட்டமில்லை. எனது பெற்றோர் விருப்பத்துக்காக திருமணம் செய்துகொண்டேன். ஆனால், எனது மனைவியோடு நீண்டநாள் வாழாமல் திரும்பி வந்துவிட்டேன்.

எனது ஆசான் இமாம் அலியை 2002-ம் ஆண்டு பெங்களூரில் போலீசார் அநியாயமாக சுட்டுக்கொன்றுவிட்டார்கள். அப்போது தான் போலீஸ் துறையை பழிவாங்க வேண்டும் என்றும், போலீஸ் துறைக்கு ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்றும் எனது மனதில் ஒரு சபதம் உதித்தது.

பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை கொலை செய்யவும், எனது ஆசான் இமாம் அலியை கொன்ற போலீஸ் துறையை சேர்ந்த 5 அதிகாரிகளையாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற இலக்கோடுதான் நாங்கள் இப்போது செயல்பட்டோம்.

கோவையில் ஏற்கனவே நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ச்சியின் மூலம் எங்களது பலம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாக சென்னையில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி, மேலும் எங்களது பலத்தை நிரூபிக்க முடிவு செய்திருந்தோம்.

எனது ஆசான் இமாம் அலியின் நினைவு நாள் செப்டம்பர் 29-ந்தேதி ஆகும். கடந்த செப்டம்பர் 29-ந் தேதி அன்று சென்னையில் நாசவேலைகளில் நிகழ்த்த முதலில் திட்டமிட்டோம். அதற்காகவே நான் சென்னை வந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் எங்கள் திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தோம்.

சென்னையில் நடைபெற இருந்த திருப்பதி குடை ஊர்வலத்தில் அதன் முக்கிய அமைப்பாளர்களை கொலை செய்ய எங்கள் திட்டத்தை மாற்றினோம். எங்கள் நோக்கம் அப்பாவி மக்களை கொல்வது அல்ல. குண்டு வைத்தால் அப்பாவி மக்கள் நிறையபேர் பலியாகிவிடுகிறார்கள். இதனால் தற்போது எங்கள் இலக்கில் உள்ளவர்களை அரிவாளால் வெட்டியே கொலை செய்து வருகிறோம்.

கொலை செய்யும் நோக்குடன்தான் சென்னை சூளை பகுதியில் நான் நின்றுகொண்டிருந்தேன். தற்போதைய எனது செல்போன் நம்பர் போலீசாருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. செல்போனை நம்பரை வைத்து கண்காணித்து என்னை பிடித்துவிட்டனர். புத்தூரில் எனது தோழர்கள் தங்கியிருந்த இடத்தை காட்டிக்கொடுக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

ஆனால் எனது செல்போன் பேச்சை ஆய்வு செய்து எனது தோழர்கள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். இமாம் அலியை இழந்தது எனது வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவம் ஆகும்.

இவ்வாறு போலீஸ் பக்ருதீன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் ரூ.20 லட்சம் பரிசு அறிவித்த 4 தீவிரவாதிகளில் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்து சாதனை படைத்துவிட்டனர். இன்னொரு தீவிரவாதி அபுபக்கர் சித்திக் மட்டும் போலீஸ் கையில் நீண்டகாலமாக சிக்காமல் இருக்கிறார். அவரையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :