மன்னார் - முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை கடற்கரையில்; இருந்து மன்னார் தென்கடல் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை கணவாய் பிடிப்பதற்காக படகு ஒன்றில் சென்று காணாமல் போன இரு மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் பேசாலை நடுக்குடா கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கண்ணாடியிழைப்படகு ஒன்றில் சவேரியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களான முத்தாண்டி லோரன்ஸ் (வயது-40) அவரின் மகன் லோரன்ஸ் லடிஸ் (வயது-22) மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த லிங்கத்துறை சுரேஸ் (வயது-20) ஆகியோர் சென்றிருந்தனர்.
இவர்கள் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் மறு நாள் சனிக்கிழமை காலை மன்னார் பணங்கட்டுக்கொட்டு பகுதியில் இருந்து தொழிலுக்கு மீனவர்கள் சென்ற போது மன்னார் கடல் சல்லிப்பகுயில் முத்தாண்டி லோரன்ஸ் (வயது-40) என்ற மீனவர் கடலில் தத்தளித்துக்கொண்டு இருப்பதைக் கண்டு அவரை குற்றுயிரான நிலையில் காப்பாற்றி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
ஆனாலும் ஏனைய இளைஞர்களான இரு மீனவர்களை மீட்கும் பொருட்டு சிலாவத்துறை அரிப்பு பகுதியில் இருந்து சுமார் 50 படகுகளில் கடந்த 3 தினங்களாக அப்பகுதி மீனவர்கள் கடலில் தேடுதலில் ஈடுபட்டனர்.
இத்தேடுதலின் போது நேற்று திங்கட்கிழமை மாலை பேசாலை நடுக்குடா கடற்கரையில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள கடற்பரப்பில் இருந்து இவ் இரு மீனவர்களின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டன.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் சிலாவத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.AD

0 comments :
Post a Comment