திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மற்றும் மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டு பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சட்டமா அதிபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோவை நேற்று திங்கட்கிழமை சந்தித்தபோதே மேற்கண்ட விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரையும் நேற்று சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அதுமட்டுமன்றி தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவையும் நவீபிள்ளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சட்டமா அதிபருடனான சந்திப்பின் போது இந்த இரண்டு கொலைச்சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அவர் விசாரித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி கொல்லப்பட்ட தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் 5 மாணவர்களின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடர்பில் அவர் கேட்டபோது, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டதாக சட்டமா அதிபர் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்களை சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அந்த 12 பேரையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
'பட்டினிக்கு எதிரான நடவடிக்கை' எனும் பிரெஞ்சு நிறுவனத்தை சேர்ந்த 17 தொண்டு சேவையாளர்கள் கொலை தொடர்பான விசாரணைகள் இன்னும் நடைபெறுவதாக சட்டமா அதிபர் எடுத்துரைத்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்பு சபையும், மனித உரிமைகள் கண்காணிப்பகமும் அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment