பெண்களின் உரிமைகள், அவர்களது மாண்புகளை நிலைநிறுத்திடும் வகையில் சர்வதேச பெண்கள் தினத்தை அனுஷ்டிப்போம்.(அட்டளைச்சேனை கல்விமாணி : எஸ்.எல். மன்சூர்)பெண்களை வீட்டின் கண்கள் என்பார். அந்த அடிப்படையில் இன்று பெண்கள் ஒவ்வொரு வீட்டிலும் கண்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தியாக சிந்தனை வெளிப்பாடுகள் காரணமாக நாடாளும்  நிலைக்கும் உயர்ந்திருக்கின்றார்கள். காரணம் பெண்கள் வெறுமனே போதைப் பொருள் என்கிற நிலையிலிருந்து மாற்றம்பெற்று நவீன சிந்தனைகளும், புதிய சித்தாத்தங்களும் பெண்க விடுதலைநோக்கிய பயணத்தில் ஆண்களுக்கு நிகரமாக பெண்ணும் உயர்ந்திருக்கின்றாள்.

அன்று இஸ்லாத்தை உலகிற்கு போதித்த அண்ணல் நபி (ஸல்)அவர்கள் பெண்னைப்பற்றியும் பெண் விடுதலைபற்றியும் தெரிவித்த கருத்துக்கள் உலகப் புகழ்பெற்றவையாகும். அந்த அடிப்படையில் பெண் சுதந்திரம் பற்றிய ஒரு அறிவிப்பில் 'ஒரு பெண் தன் கணவனுடைய இல்லத்தின் அரசியாவாள். ஒரு பெண்ணுக்கு தன் கணவன்மீது வெறுப்பு ஏற்படும்படி அவளுடைய மனதைக் கெடுப்பவர்கள் நம்மைச்சேர்ந்தவர்கள் அல்லர்' என்று கூறியுள்ளார்கள்.

இவ்வாறு பெண் ஒரு அடிமையல்ல அவளும் சரிநிகரான போக்குடையவள் இல்லத்தின் அரசி என்று வர்ணித்துள்ளார்கள். அப்படிப்பட்ட பெண்கள் இன்று பல்வேறு போராட்டங்களுக்குள் தன்னை உட்படுத்தி வெளியேற முடியாது சிக்கித்தவிக்கின்ற ஒரு நிலைமையும் இன்றைய காலகட்டங்களில் ஏற்பட்டுள்ளதை காண்கின்றபோது ஆண் வர்க்கத்தின் மேலாதிக்க வெறித்தனம் இன்னும் முடியவில்லை என்கிற வாதங்களும் பெண்களின் விடுதலைநோக்கிய பயணத்தில் தடைக்கற்களாக வந்தவண்ணமே உள்ளன என்பதற்கான காரணத்தை ஆண்வர்க்கம் கண்டறிந்து அவர்களுக்கே உரித்தான சமூக அந்தஸ்த்தை முழுமையாக வழங்க வேண்டிய காலகட்டத்தில் இன்றைய சர்வதேச பெண்கள் தினம் முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது.

மாதா பிதா குரு தெய்வம் என்கிற சம்பிரதாயங்களில் திளைத்திருக்கும் நாம் பெண்களை மனிதப் பிறவியின் உருவாக்கத்திற்கான பிறவியாகவே ஒவ்வொருவரும் பார்க்கின்றோம். அன்பு, கருணை போன்றவற்றின் வெளிப்பாடுகள் பெண்மையிலிருந்தே பிறக்கின்றன. அப்படிப்பட்ட பெண்களுக்கான உரிமைகளையும், மாண்புகளையும் மதிக்கவேண்டியது ஆண்களின்மீதுள்ள கடமைப்பாடாகும்.

சர்வதேச ரீதியாக பெண்களின் அடக்குமுறைக்கு எதிராகவும், பெண்களின்மீது கட்டவிழ்த்ப்படுகின்ற துஷ்பிரயோகங்கள் காரணமாகவும் ஒவ்வொரு ஆணும் வெட்கப்பட வேண்டி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நாம் தினமும் ஊடகங்கள் வழியாகவும், நேரிலும் காண்கின்றோம், கேட்கின்றோம். அவதானிக்கின்றோம். திருமண பந்தத்தில் நுழையவேண்டிய பெண் சீதனம் என்கிற அரக்கத்தனத்தை ஆண்வர்க்கத்திடம் தாரைவார்க்க றிசானாநபீக் போன்றோர்களின் தலைகள் கொய்யப்படுகின்ற நிலைமைக்கு சில ஆண்களும் காரணமாக அமைகின்றார்கள் என்கிற வேதனைகளும் எம் மத்தியில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். அண்மையில் இந்தியாவில் ஓடும் பஸ் வண்டியில் ஆறு காமுகர்களினால் பஞ்சாக்கப்பட்டு தூக்கிவீசப்பட்ட பெண்னின் கதையை என்னவென்று சொல்வது.

இவ்வாறு சிலரின் சபலத்தனங்களுக்கு மதுவெறியும் காரணமாக அமைகின்றது. இலங்கையில் நாளாந்தம் எங்கோ ஒரு மூலையில் பெண் கற்பழிக்கப்படுவதும், ஆண் மேலாதிக்க வெறியினால் கொல்லப்படுவதும், பெண் தூக்கில் தொங்கி இறப்பதும் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. பெண்கள் ஆண்களுக்குச் சமமாக தொழில் புரியும் இன்றைய நவீன யுகத்தில்கூட பெண்கள் மீது வரம்புமீறும் ஆண்களது செயல்களுக்கு சில பெண்களது நடத்தைகளும் அதேவேளை  சில ஊடகங்களில் வெளிக்காட்டப்படுகின்ற விரசமான காட்சிகளும் காரணமாக அமைகின்றன என்கிற வாதங்களும் மேலோங்கியுள்ளதையும் மறுக்கமுடியாது.

பெண்கள் பற்றிய நவீனசிந்தனைகளும், பெண்களுக்கு எதிரான குரல்களும், பெண்கள் சமுதாயத்தின் முக்கிய பங்காளிகள் என்கிற தத்துவார்த்தங்களும் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த சம்பவங்கள் இக்கால கட்டங்களில் நினைவுகூறவேண்டிய ஒன்றாகும். பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த காலகட்டமான 1789 ஜூன் 14ஆந்திகதி பெண்களுக்கும் ஆண்களைப்போல சுதந்திரம், சமத்துவம், அரசியலில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பாரிஸ் நகரில் உள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆணுக்குச் சமனான உரிமைகளும், வேலைக்கேற்ற ஊதியமும், எட்டு மணிநேர வேலை மற்றும் பெண்களுக்கு வாக்குரிமை, பெண்ணடிமைத் தழையிலிருந்து விடுதலை போன்றவற்றை கோரி பாரிஸிலுள்ள அரசமாளிகைக்குள் நுழைந்ததை கண்ணுற்று திகைத்தபோது அவர்களது கோரிக்கை ஏற்பதாக அரசர் கூறியதையடுத்து உலகெங்குமுள்ள பெண்கள் தங்களது உரிமை கோரிய ஆக்கிரமைப்பை உயர்த்தத் தொடங்கினர்.

ஒருகாலகட்டத்தில் கடுமையான போராட்டத்தின் விளைவாக பிரான்சில் புறுஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் தன்னுடைய அரசசபையிலே பெண்களை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்து பெண்களுக்கான வாக்குரிமைக்கான ஒப்புதலையும் அளித்தான் இது நடைபெற்ற தினம் 1848ம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆந் திகதியாகும். இத்தினத்தை நினைவுகூறவே சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8க்கு நிலை நிறுத்தப்பட்டது. இருப்பினும் 1910ம் ஆண்டில் கோபன்ஹேனில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில் பெண்களது நிலையை நிலைநிறுத்தும் நோக்குடன் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக 1913ம் ஆண்டில் மேற்கத்தேய ஐரோப்பிய நாடுகள் மார்ச் 8ல் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாட முடிவுறுத்தின. கடந்த 1975ம் ஆண்டை ஐ.நா.சபை பெண்களுக்கான உயர்வை மேம்படுத்தும் நோக்குடன் பெண்கள் ஆண்டாக அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், பெண்களது நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு பெண்களது உரிமைகள் காலத்திற்குக்காலம் புதுப்பிக்கப்பட்டு வந்தாலும் யுத்தம், பயங்கரவாதம், தனிமை, தொழில்சார் விடயங்கள் போன்றன காரணமாக ஆண்வர்க்கத்தினால் பெண்கள் இழி;நிலைக்குள் தள்ளப்பட்டே வந்திருக்கின்றனனர். பாடசாலையிலும்சரி, வேலைத்தளத்திலும்சரி, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களிலும்சரி பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் எல்லைமீறிக் கொண்டே செல்கின்ற ஒருநிலைமை தொடர்ச்சியாக வெளிக்காட்டப்பட்டே வருகின்றன. வறுமை, கணவன் இறந்து போதல், அடக்குமுறை போன்றனவும் பெண்களின் கற்பை இழப்பதற்கு சாதகமான காரணங்களாகின்றன. அரசியல் அமைப்புக்களில், மனித உரிமைகளில் பெண்களுக்கான பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டிருந்தாலும் சிலவேளைகளில் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் காரணமாக குற்றம் செய்கின்ற ஆண்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.

இலங்கையைப் பொறுத்தளவில் சனத்தொகையில் சரிபாதியளவு பெண்களாக இருக்கின்ற ஒருநிலைமையில் ஆண்களுக்கு சரிநிகராக எத்தொழிலிலும் பெண்களும் ஈடுபடுகின்ற ஒருபோக்கு ஏற்பட்டுள்ளது. வீட்டில் அடுப்பூதும் பெண்களுக்கு எதற்குப் படிப்பு என்கிற காலம்போய் ஆண்களைப்போல பெண்களும் உழைக்கத் தொடங்கியுள்ளனர். இருந்தாலும் பெண்களுக்கே உரித்தான பெண்மையை எம்மில் எத்னைபேர் மதிக்கின்றனர்.

 நள்ளிரவில் ஒரு பெண் தனிமையாக அவளது கழுத்தில் நிறையத் தங்கத்தை அணிந்துகொண்டு வீதியால் சென்று அவள் வீட்டை அடைகின்றாள் என்றால் அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று அண்ணல் காந்தி கூறியபோல நமது நாட்டில் இச்சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும்? அது எப்போது என்றால் ஒவ்வொரு ஆணும் பெண்களை கண்களாக நினைக்கும்போது இது நடைபெறும். பெண்கள் விடுதலை என்று வாய்கிழிய கத்தினாலும் சிலரது போக்குகளில் மாற்றங்களே ஏற்படாது. தாயும் பெண்னே, தாரமும் பெண்னே. தாயின் மடியில் சுவர்க்கம் உண்டு என்று பெண்களைப் போற்றுகின்ற சமயரீதியான அடிப்படையில் வாழ்வோமாக இருந்தால் அவர்களது அந்தஸ்த்தை உயர்த்தியே பார்க்கலாம் என்பது திண்ணம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் முகம்மூடப்பட்ட நிலையில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற சம்பவங்களை ஒளிப்பரப்பி வருகின்றனர். இதனைப் பார்க்கின்றவர்களில் எத்தனை வீதமான ஆண்கள் தவறுகளை நினைத்து கவலைப்படுகின்றனர். அதேவேளை திரைப்படங்களிலும், நாடகங்களிலும் பெண்களுக்கு ஏற்படுகின்ற வாழ்வியல் துன்பங்களையே காண்பிக்கின்றனர். இவைகள் அனைத்தும் ஆண்களுக்கு பாலியல் ரீதியான தூண்டுதலுக்கு வழிகோலுகின்றன என்கின்றனர் சமயவாதிகள்.

பெண்களுக்கு சார்பாக சட்டங்கள் இருந்தாலும் சட்டத்தின்பிடியிலிருந்து இலகுவாகத் தப்பிக்கின்ற ஆண்களுக்கு முழுமையான தண்டணை வழங்கப்படாமல் இருக்கும் வரை பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அந்தவகையில் சட்டங்களிலுள்ள இறுக்கங்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கத்தை இன்றைய பெண்கள் தினத்தில் மேற்கொள்ளவேண்டியதும் அவசியமாகும்.

அந்தவகையில் ஆண், பெண் இருபாலாருக்கும் எவ்விதமான பாரபட்சமுமின்றி சமமாக சட்டத்தின் முன் நடாத்தப்படவேண்டும். என்பதுடன் சமமான பாதுகாப்பு, சட்டத்தால் வழங்கப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையினால் 1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் மீதான பிரகடனத்தின் (ருniஎநசளயட னுநஉடயசயவழைn ழக ர்ரயஅய சுiபாவள) உறுப்புரை 7இன்படி சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் அத்துடன் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டத்தின் பாதுகாப்பிற்கும் அவர்கள் உரித்துடையவர்கள்.

இதே வாசகத்தை குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச பொருத்தனையும் எடுத்துக் கூறுகின்றது. அதற்கும் மேலதிகமாக 1979ம் ஆண்டு டிசம்பர் 18ஆந்திகதி பெண்களுக்கு எதிரான எல்லாவிதமான பாரபட்சங்களையும் இல்லாதொழித்தல் சமவாயம்(ஊழnஎநவெழைn ழn நுடiஅiயெவழைn ழக னுளைஉசiஅiயெவழைn யுபயiளெவ றுழஅயn) சேர்த்துக் கொள்ளப்பட்டு 1981ஆம் ஆண்டு செப்டெம்பர் 3ஆம் திகதி வலுவிற்கு வந்தது. இச் சமவாயத்தில் இலங்கை அரசு 1981ம் ஆண்டு ஒக்டோபர் 5ஆந்திகதி பின்னுறுதிப்படுத்தியது.

இவ்வாறாக சட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் அதிகளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் இலங்கையைப் போன்ற நாடுகளில் பெண்களின் மதிப்பீடுகள்கூட பாராமுகமாகவே தென்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் முன்னாhள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்த கருத்துக்கள் சிந்தையில் கொள்ள வேண்டியது ஆண்களின் முன்னுள்ள கடப்பாடகும். 'போரின்போது வெற்றி கொள்வதற்குரிய தந்திரோபாயங்களில் ஒன்றாக பலாத்காரமான முறையில் பாலியில் வல்லுறவை பிரயோகிப்பதாகும். ஹொங்கோ, சூடான், பர்மா, பொஸ்னியா போன்ற நாடுகளில் மட்டுமல்லாது இலங்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும், போரினை காரணம் காட்டி குற்றம் இழைப்பவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர் என்றும் கூறியபோது அவ்வாறான சம்பவங்கள் நமது நாட்டில் இழைக்கப்படவில்லை என்றும் அமெரிக்காவும், ஐரோப்பாவின் சில ஊடகங்களும் தேவையற்ற குற்றச் சாட்டுக்களை சுமத்துகின்றன என்று இலங்கை அரசு ஹிலாரியின் குற்றச் சாட்டை மறுதளித்தன.

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்திலும், யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் அதிகளவான பெண்கள்மீதான வன்முறைகள் நடைபெற்று வருகின்;றமை  தொடர்கதையாக இருப்பதும் கவலைதரும் விடயங்களாகும்.

1996ல் கிருஷாந்தி எனும் பாடசாலை மாணவியின் கொடூரக் கொலை, கோணேஸ்வரி கொலை போன்றனவும் மிகவும் பேசப்பட்ட வன்முறைக் கொலைகளாகும். பெண்களுக்கு பாதுகாப்பு என்று ஒவ்வொரு ஆண்களினாலும், சட்டத்தினாலும் மேற்கொள்ளப்படவேண்டிய நிலையில் பெண்களின் பாதுகாப்பு உறுதிப் படுத்துகின்ற காலச்சூழ்நிலைகள் தோற்றம் பெறுகின்றபோதுதான் உண்மையான பெண்மைத்துவம் தலைத் தோங்கும். அந்தவகையில் இன்று அறிவியல் ரீதியாக பெண்கள் எழுச்சிபெற்று வருகின்றனர். கிராமத்திலிருந்து நாட்டின் தலைமைத்துவம் தொடக்கம் விண்ணிலும் வலம்வருகின்ற பெண்களின் எழுச்சிப் பிரவாகம் கல்வியிலும் கொடிகட்டிப் பறப்பதையும் நாம் காண்கின்றோம். அரசியல் தலைமை, நீதித்துறையில் தலைமை, உயர்பதவிகளில் தலைமை என்று எத்தனையோ பெண் தலைமைகளைப் பார்த்திருக்கின்றோம்.

அரசியலில் உலகிற்கே முதன்மை வகித்த பெண் பிரதமரைப் பெற்ற நாடு என்று நம்மை உலகமே போற்றுகின்றது. அதன் வழியில் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவிவகித்த அம்மையாரான சந்திரிக்கா அம்மையார் அண்மையில் கண்டியில்;வைத்து நமது நாட்டில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்கின்றன என்கிற கருத்தினை வெளியிட்டிருந்தார். இவ்வாறாக பெண்கள் மீது அதிகரித்துச் செல்கின்ற காடைத்தனங்களுக்கு முடிவு கட்டுவதற்குரிய ஏற்பாடுகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளல் அவசியமாகும்.

கல்வித்துறைக்குள் இன்றைய பாடசாலைகளில் இனரீதியாகவும், பால்ரீதியாகவும் பாடசாலைகள் பிரிக்கப்பட்டு வந்தாலும் இணைந்து கற்கின்ற பாடசாலைகளின் தோற்றப்பாடு அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பிள்ளைநேயப் பாடசாலைகள் என்கிற கருத்திட்டத்தில் காணப்படும் ஆண், பெண் சமூகவியல்புகளில் கவனம் செலுத்துதல் எனும் பண்புக்கமைய இலங்கையில் சகல பிள்ளைகளுக்கும் ஆண்பெண் என்கிற பேதமின்றி சமவாய்ப்பு கல்வியில் வழங்கப்படுதல் அவசியமாகும் என்பதை வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு ஆண் பெண் உரிமைகள் கல்வியிலும் தாக்கம் செலுத்திவருகின்றமை நோக்கத்தக்கதாகும்.

இந்தவகையில் உயர்பதவிகள் தொடக்கம் அடிமட்ட வேலைகள் வரை பெண்கள் தங்களை ஈடுபடுத்தி வந்தாலும் அவர்களது அரசியல் பிரவேசம் போதுமானதாக இல்லை என்பதுதான் இன்றைய பெண்கள் மத்தியில் இருக்கின்ற பெரியதோர் பிரச்சினையாகும். சமவுரிமை வழங்கப்பட்டாலும் அரசியலில் ஈடுபாடுகள் காட்டப்படுவது மிகமிகக் குறைவாகும்.

நாட்டை ஆளும் மன்றத்தில் பெண்களின் நிலைகள் அதிகளாவாக இருக்கின்றபோது பெண்கள் மீதான வக்கிரப்புத்திகளை பிரயோகிக்கின்ற ஆண்களுக்கு எதிராக சட்டங்கள் முன்நிலைப்படுத்தப்படுகின்றபோது யதார்த்தத்தை உணரும்படியாக அமையும். கோடிப்பெண்களை இணைக்கும் திட்டங்கள் பெண்விடுதலைநோக்கிய பயணத்தில் சில பெண் சமூக ஆர்வலர்கள் இதில் இணைத்துக் கொண்டாலும் கிராமத்திலுள்ள பெண்களில் இந்;தப்பயணம் எவ்வளவு தூரம் வேரூண்டியுள்ளன என்பது கேள்விக்குறியாகும்.

இந்நிலை முடிவுறத்தப்பட்டு நாட்டின் சகல பெண்களும் தங்களுடைய உரிமைகளுக்கான போராட்டத்திலும், இருக்கின்ற உரிமைகளை நிலைநிறுத்துவதிலும் பெண்கள் வெற்றிபெறுவதற்குரிய ஆர்வத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். 'தையலை உயர்வு செய்' என்று பாரதி சும்மாவா பாடினான். ஆதலால்தான் பெண்களை உயர்வுக்கு இட்டுச் செல்லாத குடும்பமோ, நாடோ, கட்சியோ, ஆண்களோ உருப்படவே மாட்டார்கள். பெண் பாவம் பொல்லாதது என்பதை சில ஆண்கள் அறிந்து கொண்டாலே பெண்கள் நிலை தளைத்தோங்கும். எதுவரை என்றால் பெண்கள் பெண்களாக நடக்கும்வரை.(அட்டாளைச்சேனை கல்விமாணி : எஸ்.எல். மன்சூர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :