ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகள் இரண்டு உள்ளூராட்சித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் தேசிய சுதந்திர முன்னணி, புதிய இடதுசாரி முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகள் உள்ளடங்கியுள்ளன.
இவற்றில் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான தொழிலாளர் காங்கிரசும், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டு விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளன.
இவற்றில் அதாவுல்லாவின் கட்சி நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாது, ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளது.
முன்னைய மஹிந்த அரசில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், அநியாயங்களை நியாயப்படுத்திய ஏ.எச்.எம். அஸ்வரும் தற்போது ரிசாத் பதியுதீன் கட்சியின் முக்கிய பிரமுகராக மாறியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்தவுக்கு வாக்களிக்க நினைத்த முஸ்லிம்கள் கூட அஸ்வரின் பேச்சுக்கள் மீதான வெறுப்புணர்வு காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்திருந்தனர். மஹிந்தவை விடவும் அவரின் அடாவடித்தனங்களை நியாயப்படுத்திய அஸ்வர் மீதே முஸ்லிம்களுக்கு அதிகம் வெறுப்பு இருந்தது.
உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் இவ்வாறாக ஐக்கிய தேசியக் கட்சி புதிய கட்சிகளை உள்வாங்கும் அதேவேளை, சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தலைமையிலான தற்போதைய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி அமைத்து உள்ளூராட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளன.