குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு: சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் உத்தியோகபூர்வ சட்டப் பிரதிநிதியாக நியமனம்!



பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விசேட சந்திப்பு

35 குடும்பங்கள் சத்தியவோலை மூலம் சட்டத்தரணிக்கு அதிகாரமளிப்பு


பாறுக் ஷிஹான்-
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் முன்னெடுப்பதற்காகச் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் உத்தியோகபூர்வ சட்டப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கின் முறைப்பாட்டாளரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவருமான அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் (J.P.) தலைமையில், பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுடனான விசேட கலந்துரையாடல் காத்தான்குடி சம்மேளனத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, வழக்கின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள், தற்போதைய நிலைமை, இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால சட்ட முன்னெடுப்புகள் தொடர்பாகச் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் விரிவாக விளக்கமளித்தார்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், வழக்கு நடவடிக்கைகளில் குடும்ப உறவினர்கள் வழங்க வேண்டிய பங்களிப்புகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்து, சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் (ஹாபிழ், ஜமாலி) தெளிவுபடுத்தினார்.

பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த இவ்வழக்கை மீண்டும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களிடமிருந்து எவ்விதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தன்னார்வ அடிப்படையில் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், இச்சந்திப்பில் முக்கிய உரையாற்றினார்.

இதன்போது, வழக்கின் ஆரம்பகட்ட நகர்வுகள், தற்போதைய சட்ட நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விரிவாக விளக்கமளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களை வழங்கினார்.

இந்நிலையில், குறித்த வழக்குடன் சத்தியக்கடதாசிகள் மூலம் தொடர்புபட்டுள்ள 35 பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், நீதிமன்றத்தில் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், தமது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்து வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமுக்கு அதிகாரமளிக்கத் தீர்மானித்தனர்.

இதற்கமைய, தமது சுய விருப்பத்தின் அடிப்படையில், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமுக்கு சட்டரீதியான அதிகாரங்களை வழங்கும் சத்தியவோலைகளைச் சமாதான நீதவான் முன்னிலையில் அவர்கள் நிறைவேற்றி வழங்கினர்.

இதனடிப்படையில், குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகளைச் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமும், அவருடன் இணைந்து அவர் பெயர்குறித்து நியமிக்கும் சட்டத்தரணிகளும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உரிமைகளைப் பாதுகாத்து, இவ்வழக்கின் ஊடாக உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :