1988ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்த பின்னர், வடக்கு–கிழக்கில் அதன் எழுச்சிக்கான முதல் அத்திவாரம் இடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக கல்முனை முஹைய்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அமைந்தது.
1988.11.19 அன்று வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டபோது, அந்தத் தேர்தலில் எவரும் போட்டியிடக் கூடாது என்றும், அதை மீறி போட்டியிடும் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் விடுதலைப் புலிகள் பகிரங்கமாக அறிவித்திருந்தனர். இதனால் அந்தக் காலகட்டம் முழுவதும் மரண அச்சமும் யுத்த அச்சுறுத்தல்களும் சூழ்ந்த மிக ஆபத்தான காலமாகக் காணப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையிலும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், முஸ்லிம் சமூகத்தின் விடுதலைப் போராட்டத்தை மக்கள் செல்வாக்கு மிக்க மக்களெழுச்சி இயக்கமாக மாற்ற வேண்டுமெனில் வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டார்.
அவருக்கு துணையாக முன்னாள் தவிசாளர் மர்ஹூம் சேகு இஸ்ஸதீன், மர்ஹூம் “முஸ்லிம் முழக்கம்” ஏ.எம். மஜீட், எம்.ரீ. ஹசன் அலி, சட்டத்தரணி சரூக் காரியப்பர், மருதமுனையைச் சேர்ந்த மருதூர் கனி, எம்.எஸ்.எம். சத்தார், நிஸார் லோயர், ஜவாத், பீ.ஆர். ரஷீத் (இஃபால் கழகம்), மர்ஹூம் சமீம் (சனிமௌன்ட் கழகம்), முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஸீஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சமட் ஹாஜியார், ஏ.எம். நசீர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் உறுதுணையாக இருந்தனர்.
ஆனால் வேட்பாளர்களைத் தேடியபோது, விடுதலைப் புலிகளின் மரண அச்சுறுத்தலால் கிழக்கு மாகாணத்தில் யாரும் பகிரங்கமாக வேட்பாளர்களாக முன்வரத் தயங்கினர்.
தலைவர் சட்டத்தரணியாக இருந்ததனால் சமயோசிதமாகச் சிந்தித்து, கொழும்பைச் சேர்ந்த சிலரை வேட்புமனுக்களில் கையொப்பமிடச் செய்து, அவர்களுக்குப் பதிலாக கிழக்கைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்களை செயற்பாட்டு வேட்பாளர்களாக களமிறக்கியிருந்தார். வேட்புமனுக்களைத் தரைவழியாக எடுத்துச் சென்று தாக்கல் செய்ய முடியாதளவுக்கு அச்சுறுத்தல் நிலவியதால், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வேட்புமனுக்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.
அந்தக் காலத்தில் தலைவர் அஷ்ரப் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் விடுதலைப் புலிகளால் கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. இருந்தபோதிலும், அவர் தைரியமாகத் தேர்தலை எதிர்கொண்டு மக்களிடம் கட்சியின் கொள்கைகளையும் செய்தியையும் எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பான சூழ்நிலை எங்கும் காணப்படவில்லை. மரண அச்சமும் இருளும் மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்திருந்தன.
இன்று இருப்பது போன்று பொதுக்கூட்டங்களையோ கருத்தரங்குகளையோ நடத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. அந்நாளில் Facebook இல்லை, Instagram இல்லை. தனியார் தொலைக்காட்சிகளும் இல்லை. அரச தொலைக்காட்சியிலும் சுதந்திரமாகப் பேச முடியாத கட்டுப்பாடுகள் இருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்களிடம் தனது செய்தியை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்று தலைவர் சிந்தித்தபோது அவருக்கு நினைவுக்கு வந்தவர் எனது தந்தை மர்ஹூம் ஹபீப் முகம்மது ஹாஜியார் (பெரிய தம்பி முதலாளி) ஆவார்.
பல பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தொடர்புகொண்டு பள்ளிவாசல்களில் உரையாற்ற அனுமதி கோரியிருந்தாலும், அன்றைய ஆளும் கட்சியின் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவருக்கு எங்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இறுதியில் அவர் எடுத்த தொலைபேசி அழைப்பு என் தந்தைக்கே.
அப்போது கைத்தொலைபேசிகள் இல்லாத காலம். நிலைத்தொலைபேசியிலேயே உரையாடல் நடைபெற்றது.
“காக்கா, நான் அஷ்ரப் பேசுகிறேன். இன்று நமக்குள்ள ஒரே ஆயுதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். இந்தச் சமூகத்தின் அடிமை விலங்கை உடைக்க வேண்டும். 1987ஆம் ஆண்டு வடகிழக்கு இணைப்புக்குப் பின்னர் எமது அரசியல் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதை மாற்ற வேண்டுமெனில் முஸ்லிம் காங்கிரஸுக்கு மக்கள் ஆணை தேவை. எனக்கு எங்கும் கூட்டம் நடத்த முடியவில்லை. ஏனைய பள்ளிவாசல்களும் மறுத்துவிட்டன. எனக்குள்ள கடைசி நம்பிக்கை கல்முனை முஹைய்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மட்டுமே. எனவே இந்தச் சமூகத்தின் எதிர்காலத்திற்காக அங்கே பேச அனுமதி தர வேண்டும்” என்று தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
எனது தந்தை குழப்பமடைந்தார். ஏனெனில் பள்ளிவாசலில் அரசியல் பேசுவது என்பது அன்றைய காலத்தில் வழக்கமல்ல. அது அவருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. பள்ளிவாசலுக்கென நம்பிக்கையாளர் சபை இருந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களது அனுமதி அவசியமாக இருந்தது.
அதனால் அவர், “தம்பி, எனக்கு ஒரு நாள் அவகாசம் தாருங்கள். சபையைக் கூட்டி முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.
அதற்கு தலைவர், “காக்கா, எனக்கு நேரமில்லை. நான் கல்முனைக்கு வருவதா இல்லையா என்பதை இந்திய அதிகாரிகளுக்கு உடனே தெரிவிக்க வேண்டும். ஹெலிகொப்டர் ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். நாளை இஷா தொழுகைக்குப் பிறகு மட்டுமே எனக்குள்ள இறுதி வாய்ப்பு. எனவே இரண்டு மணித்தியாலங்களுக்குள் பதில் தருங்கள்” என்றார்.
தொலைபேசியை வைத்துவிட்டு, என் சகோதரர் அமீர் அலியுடனும் என்னுடனும் (அப்போது நான் உயர்தர முதலாம் ஆண்டு மாணவன்) தந்தை ஆலோசனை நடத்தினார்.
அப்போது இளமைக் கொதிப்புடன் நான் கூறினேன்:
“வாப்பா, தைரியமாக அனுமதி கொடுங்கள். தமிழ் மக்கள் தங்களது விடுதலைக்காக பல இயக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இது வெறும் அரசியல் கட்சி அல்ல; முஸ்லிம் சமூகத்தின் விடுதலை இயக்கம். எங்கள் அடிமைச்சாசனத்தை உடைக்க வந்த இயக்கம். எது நடந்தாலும் எதிர்கொள்வோம். இடம் கொடுங்கள்.”
எனது சகோதரர் அமீர் அலியும் அதே கருத்தை வலியுறுத்தினார்.
பின்னர் தந்தை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடன் அவசரமாகத் தொடர்புகொண்டு ஆலோசித்தார். சிலர் ஆதரித்தனர். பலர் எதிர்த்தனர்.
“நமது ஊரில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவர் கோபமடைவார். நம்பிக்கையாளர் சபையை கலைத்துவிடலாம். முஸ்லிம் காங்கிரஸ் ஆளுங்கட்சிக்கு எதிரான கட்சி. எனவே அனுமதி வழங்க வேண்டாம்” என்று பெரும்பாலானோர் வலியுறுத்தினர்.
குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவாக இருந்தனர்.
இது அன்றைய உண்மை வரலாறு.
இரண்டு மணித்தியாலங்கள் கழித்து தலைவர் மீண்டும் தொலைபேசி எடுத்தார்.
“காக்கா, என்ன முடிவு?” என்று நேரடியாகக் கேட்டார்.
தந்தை நடந்த அனைத்தையும் கூறினார். அதற்கு தலைவர்,
“காக்கா, எதற்கும் அஞ்ச வேண்டாம். நான் ஒரு சட்டத்தரணி. எது வந்தாலும் நான் எதிர்கொள்வேன். உங்கள் கௌரவத்தைப் பாதுகாப்பேன்” என்று உறுதியளித்தார்.
அதன்பின் தந்தை கூறினார்:
“தம்பி, நீ ஒரு சமூகத்திற்காகப் போராடுகிறாய். உன் போராட்டத்திற்காக என் கௌரவம் மட்டுமல்ல, என் பதவியையே இழக்க வேண்டியிருந்தாலும் நான் தயார். நீ இந்த பள்ளிவாசலுக்கு வந்து உரையாற்று. நான் மக்களைத் திரட்டிவைக்கிறேன்.”
அவ்வாறு வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நிகழ்வு உறுதிப்படுத்தப்பட்டது.
அந்தக் காலத்தில் சுமார் இரண்டு மாதங்களாக மின்சாரம் இல்லாத இருள் சூழ்ந்த நிலைமை நிலவியது. எந்த மூலையில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாத அச்சநிலை. ஆயுததாரிகள் நகரங்களிலும் கிராமங்களிலும் சுதந்திரமாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.
இன்றைய இளைஞர்கள் அந்தச் சூழ்நிலையை கற்பனை செய்துப் பார்க்க வேண்டும். அது உண்மையிலேயே திகிலும் பதற்றமும் நிறைந்த காலம்.
அந்த இருள்மயமான காலத்தில் எங்களுக்கு நம்பிக்கையின் ஒளிக்கீற்றாகத் தெரிந்தவர் அஷ்ரப் மட்டுமே.
அடுத்த நாள் மாலை சுமார் ஐந்து மணியளவில் தலைவர் அஷ்ரப் ஹெலிகொப்டரில் கல்முனை வாடிவீட்டு விடுதி முகாமில் வந்து இறங்கினார். இந்திய இராணுவம் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கியது.
எனது சகோதரர் அமீர் அலியும் தலைவரின் உறவினரான மர்சூக் காரியப்பரும் அவரை வரவேற்று முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து இந்திய இராணுவ கவச வாகனங்களும் பல பாதுகாப்பு வாகனங்களும் புடைசூழ, தலைவர் இஷா தொழுகைக்காக கல்முனை முஹைய்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலை நோக்கிப் புறப்பட்டார்.
அந்த இருள் சூழ்ந்த இரவில், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பள்ளிவாசலில் திரண்டிருந்தனர்.
தலைவர் வெள்ளை நிற இரட்டை பைகளுடன் கூடிய இராணுவ அதிகாரிகளின் சீருடையை ஒத்த ஒரு சட்டையை அணிந்திருந்தார். அது அவரது கம்பீரமான தோற்றத்துக்கு மேலும் வலுசேர்த்தது. நூற்றுக்கணக்கான இந்திய இராணுவத்தினர் மத்தியில் அவர் வந்திறங்கிய காட்சி, ஒரு படைத்தளபதி களமிறங்குவதைப் போன்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்தியது.
அவரைக் கண்ட கணமே மக்களிடையே தைரியம் பெருகியது. மரண அச்சமும் பயமும் மறைந்து போனது.
ஆனால் தலைவர், பள்ளிவாசலுக்குள் இந்திய இராணுவத்தினரை அனுமதிக்கவில்லை. அவருடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்பு வழங்கினர்.
அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பின்னால் இருந்த காரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வரலாற்றுப் பின்னணிகளை அடுத்த தொடரில் விரிவாகப் பார்ப்போம்.
சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்
முன்னாள் இராஜாங்க அமைச்சர்

0 comments :
Post a Comment