இளவயது மரணங்களை கட்டுப்படுத்த தேசிய ஒருங்கிணைந்த திட்டம் அவசியம் – றிகாஸா ஷர்பீன்



நாட்டில் அதிகரித்து வரும் இளவயது மரணங்களை கட்டுப்படுத்துவதற்காக உடனடி மற்றும் ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் அவசியம் என வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது வொலிவேரியன் எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்திற்காக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள் வழங்கும் நிகழ்வு 2026.04.28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் நிதியுதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட றிகாஸா ஷர்பீன் உரையாற்றும் போது மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 83 சதவீதம் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன என்பது கவலைக்கிடமான நிலைமையை வெளிப்படுத்துகிறது என்றார். மாற்றமடைந்த உணவு பழக்கவழக்கங்களும், சந்தையில் அதிகரித்து வரும் கலப்பட உணவுப் பொருட்களும் மக்களை நீரிழிவு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நீண்டகால நோய்களின் பாதிப்புக்குள் தள்ளிவருகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களை இத்தகைய தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்க விசேட செயல் திட்டங்கள் அவசியம் என வலியுறுத்திய அவர், ஒவ்வொரு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் பெண்களுக்கான தனிப்பட்ட உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் விரைவில் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

இளவயது மரணங்களை குறைக்கும் முயற்சிகளில் பாடசாலைகளின் பங்களிப்பு இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட அவர், மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு கல்வி முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பாடசாலை வளாகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் கடுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் மாணவர்களில் சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க உதவும் என்றும், எதிர்காலத்தில் தொற்றா நோய்களின் தாக்கத்தை கணிசமாகக் குறைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், சந்தையில் அதிகரித்து வரும் கலப்பட உணவுப் பொருட்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நுகர்வோர் அதிகார சபை மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மேற்கொண்டு வரும் திடீர் பரிசோதனைகள் பாராட்டத்தக்கவை எனக் குறிப்பிட்ட அவர், அவை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் செயலாளர் எஸ்.எம். முபிதா, உறுப்பினர் ஆசிரியை ஏ. எம். அஸ்மினா, பாடசாலை பிரதி அதிபர் எம்.ஆர். றினுபா உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக, இளவயது மரணங்களை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, சமூக அமைப்புகள், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படும் விரிவான தேசிய வேலைத்திட்டம் அவசியம் என வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :