சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும் ஆ பெரியபள்ளிவாசலின் தலைவரும், பைதுஸ் ஸகாத் நிதியத்தின் தலைவரும், வர்த்தக சங்கத்தின் தலைவருமான எம்.எஸ்.எம். முபாறக் அவர்கள் இதனைத் தெரிவித்தார். 2026 ஏப்ரல் 4ஆம் திகதி சாய்ந்தமருது கடற்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இக்கருத்துகளை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதியும் சீரமைப்பு தேவைப்படும் நிலையில் உள்ளதாகவும், அதனை முன்னேற்றுவதற்காக தாங்கள் இரவுபகல் பாராது தங்களது நேரத்தையும் பொருளாதாரத்தையும் அர்ப்பணித்து செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இவ்வாறான சூழலில் சிலர் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட வழிகளில் மட்டுமே விமர்சனங்களை முன்வைப்பது கவலைக்குரியது என்றும், அவர்கள் நேரில் வந்து நிலவரங்களை அறிந்து கொண்டு கருத்துக்களை பகிர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தாம் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிவாசல் உள்ளிட்ட ஊரின் பல நிறுவனங்களை திறம்பட செயல்படும் அமைப்புகளாக மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு ஊரின் மீது பற்றுக்கொண்ட பலர் ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவித்தார். அதேவேளை, நிலைமைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாது விமர்சனங்களை முன்வைக்கும் சிலர், தங்களிடம் உள்ள சிறந்த யோசனைகளை வெளிப்படையாக முன்வைத்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கடந்த வாரம் ஜும் ஆ பெரியபள்ளிவாசலின் மேற்குப் பகுதியில் உள்ள வீதி சீரமைக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இவ்வாரம் கடற்கரை வீதியையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் செப்பனிட்டு, வெளிச்ச வசதிகளை ஏற்படுத்தி, அழகுமரங்கள் நட்டு, கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கான தொட்டிகளை அமைத்து, பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் வண்ணம் பூசி அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஜெ. சில்வா உள்ளிட்ட அதிகாரிகள், கரையோரப் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், பொதுநிறுவன பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த வேலைத்திட்டம் சாய்ந்தமருது கடற்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாகவும் அழகாகவும் மாற்றுவதோடு மட்டுமல்லாது, மக்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.










0 comments :
Post a Comment