ஆய்வுகளும் அதுசார்ந்த வெளியீடுகளும் முக்கியமானவை. தென்கிழக்குப் பல்கலைக்கழக வெள்ளி விழா நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ்லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு தேசியப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டு இருபத்தைந்து வருடங்களைக் கடந்துள்ளன. இவ் இருபத்தைந்து வருட நிறைவினைக் குறிக்கும் வெள்ளி விழா நிகழ்வும் இப்பல்கலைக்கழகத்தின் வருடாந்த ஸ்தாபகர் தின உரையும் 23.10.2021 அன்று சனிக்கிழமை பல்கலைக்கழகத்தின் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. முற்றிலும் கொவிட்-19 சுகாதார வழிமுறைகளைத் தழுவி இடம்பெற்ற இந்நிகழ்வில், சமகாலத்தில் பல்கலைக்கழகமொன்றின் தரத்தினையும் வளர்ச்சியினையும் நிர்ணயிப்பதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவற்றுள் ஆய்வுகளும் அதுசார்ந்த வெளியீடுகளும் முக்கியமானவை. என்று உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு தேசியப் பல்கலைக்கழகமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, 25 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்நிறைவினை ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடுவதும், இவ்விழாவிற்கு இந்தப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனாகிய நான் தலைமை தாங்குவதும் மிகுந்த மகிழ்ச்சியினைத் தருகின்றது.

இப்பல்கலைக்கழகத்தின் ஆரம்ப வரலாற்றில் பலரது தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் நிறைந்துள்ளன. இவ்விடத்தில் முன்னாள் அமைச்சர், மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவுகூறப்பட வேண்டியவர். அவருக்குப் பக்கபலமாக நின்றவர்களும் நலன்விரும்பிகளும் இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர், பதிவாளர், நிதியாளர், ஏனைய கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்களது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகமொன்றுக்குரிய வளங்கள் எதுவும் இன்றியே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று கல்வியிலும் ஆராய்ச்சியிலும் குறிப்பிடும்படியான வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் பசுமை நிறைந்த உட்கட்டமைப்பு எம்மை பிரமிக்கச் செய்யுமளவிற்கு மாற்றம் கண்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். தொழில் உலகில் அவர்கள் நல்ல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இன்று இந்தப் பல்கலைக்கழகம் நமது நாட்டில் தலைமைநிமிர்ந்து நிற்கின்ற ஒரு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து, பாதுகாப்பான ஒரு சூழலில் ஒற்றுமையுடன் கல்வி கற்கும் நிலை இங்கு உருவாகியுள்ளது. முற்றிலும் நவீனமயப்டுத்தப்பட்ட பாடத்திட்டங்களுடன் மாணவர் மைய கல்வியினை வழங்குவதற்கு எமது விரிவுரையாளர்கள் குழாம் எடுத்துவரும் பிரயத்தனங்கள் பாராட்டத்தக்கதவை. அதற்கு எமது நிருவாகத்தினரும் ஏனைய ஊழியர்களும் வழங்கிவரும் ஒத்துழைப்புக்களும் அபரிமிதமானவை.

சமகாலத்தில் பல்கலைக்கழகமொன்றின் தரத்தினையும் வளர்ச்சியினையும் நிர்ணயிப்பதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவற்றுள் ஆய்வுகளும் அதுசார்ந்த வெளியீடுகளும் முக்கியமானவை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வு வெளியீட்டில் பெரும் இடைவெளி காணப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. வருடாந்தம் 100 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவருகின்றன. அவ்வெளியீடுகள் மூலம் எங்களது விரிவுரையாளர்களும் சர்வதேச தரப்படுத்தல் நிரல்களுக்குள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பலர் தமது கலாநிதிக் கற்கையினை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். 18 பேர் தற்போது பேராசிரியர் தரங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுள் 06 பேர் இந்தப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள். இன்னும் பலர் பேராசிரியர் பதவியுயர்வினை எதிர்பார்த்துள்ளனர்.

இளமாணிப் பட்டப்படிப்புக்கள் மட்டுமன்றி, கலாநிதிக் கற்கை உள்ளடங்கலாக பல பட்டப்பின்படிப்புக் கற்கைகளும் இப்பல்கலைக்கழகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் எமது பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு மாணவர்களாக இணைந்துள்ளனர். இதனை எமது பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே நான் பார்க்கின்றேன்.

பல்கலைக்கழக கல்வி தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு, பட்டம் பெற்று வெளியேறுகின்ற மாணவர்களது தொழில் நிலை சார்ந்ததாக உள்ளது. எனினும் எமது பல்கலைக்கழகம் மாணவர்களது தொழில் நிலைத் தராதரங்களைக் கூட்டுவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2012 இல் எமது மாணவர்களின் தொழில் நிலை சராசரியாக 36 சதவீதமாக இருந்தது. ஆனால் 2018 இல் அது 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஒரு மிகப் பெரிய சாதனை.
இன்று இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் மற்றும் சட்ட பீடம் என்பவற்றினை அமைப்பதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை சாத்தியப்படுத்துவதற்கு தொலைநோக்குடன் கூடிய அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் அவசியமானவை. அதற்காக எமது பல்கலைக்கழக சமூகத்தினர் வழங்கிவரும் ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது.

எமது பல்கலைக்கழத்தின் சர்வதேச தரப்படுத்தல் நிலையினை மேலும் முன்னேற்றம் பெறச் செய்யவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு எம்மிடமுள்ளது. இதனோடு இணைந்ததாக எமது பல்கலைக்கழகத்தின் சமூகப் பங்களிப்பினை அதிகரிக்க வேண்டியுள்ளது. உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் பல அந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்களோடு மக்களாக இருந்து ஆற்றிவரும் பங்களிப்புக்கள் மகத்தானவை. அவ்வாறானதொரு நிலை இந்தப் பல்கலைக்கழகத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக நாம் நமது வெளிக்களத் தொடர்பினை அதிகரிக்க வேண்டியுள்ளது.

எமது நாட்டு ஜனாதிபதியின் தொலைநோக்கிற்கு அமைய எமது பல்கலைக்கழகம் முயற்சியாளர்களையும் தொழில்நுட்பவியலாளர்களையும் உருவாக்கும் ஒரு உயர் கல்வி கேந்திர நிலையமாக மாறவேண்டும். அதன் மூலம் எமது பல்கலைக்கழகத்தின் தேசத்திற்கான பங்களிப்பினை அதிகரிக்க முடியும்.
இறுதியாக எமது பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வினைப் பற்றி சில விடயங்களைக் கூறவேண்டியுள்ளது. எமது பல்கலைக்கழகத்தின் வரலாறு 25 வருடங்களைக் கடந்துள்ள போதிலும், குறுகிய நாட்களுக்குள் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் நினைவு மலர் ஒன்றினை வெளியிட வேண்டும் என்ற கடினமான தீர்மானத்தினை நாம் எடுத்தது மட்டுமல்லாது மிகுந்த அர்ப்பணிப்புக்களுடன் அதனை சாத்தியப்படுத்தியும் உள்ளோம். அதற்கு எமது நினைவு மலர் குழு பல தொடரான சந்திப்புக்களை மேற்கொண்டு, பலரது ஒத்துழைப்புக்களைப் பெற்று, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வெள்ளி விழா மலரினைத் தொகுத்துள்ளது. அவர்களது இடையுறாத முயற்சி பாராட்டப்பட வேண்டியது.

அதேபோன்று, இப்பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வினையும் ஸ்தாபகர் தின உரை நிகழ்வினையும் ஒருங்குசேர ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கும் நன்றிகள். இந்நிகழ்வின் ஒரு அங்கமாக வருடாந்த ஸ்தாபகர் தின உரையினை நிகழ்த்திய, இப்பல்கலைக்கழக ஸ்தாபகரின் மருமகன் வைத்தியர் எம்.ஏ.எம். ஜெஸீம் அவர்களுக்கும் நன்றிகள். இந்நிகழ்வில் பங்கேற்று இந்நிகழ்வினை சிறப்பிக்கச் செய்த ஸ்தாபகர்களுக்கும் பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள்.

இந்தப் பல்கலைக்கழத்தின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பல அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்த பலர் வெளியில் உள்ளனர். அவர்களையும் அழைத்து, இந்த விழாவினை மிகப் பிரமாண்டமான ஒரு விழாவாகக் கொண்டாடுவதற்கு நாம் எண்ணியிருந்தோம். ஆனால் நாட்டில் நிலவுகின்ற கொவிட்-19 அசாதாரண சூழ்நிலை காரணமாக அது கைகூடாமல் போயுள்ளது. இந்த அசௌகரிய நிலையினை அவர்கள் அனைவரும் மனங்கொள்ளுவார்கள் எனக்கூறி எனது உரையினை நிறைவு செய்தார்.

ஊடகப் பிரிவு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
ஒலுவில்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :