அரசியல் அமைப்பு திருத்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: SMM. முஷாரப்

இர்ஷாத் ஜமால்-

1978 ஆம் ஆண்டு 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு, பாராளுமன்றில் நிறை வேற்றப்பட்டது. 13ஆம் திருத்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டதா? என்ற கேள்வி எழுகின்றது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்படுகின்ற திருத்தச் சட்டங்களுக்கு மதிப்பளித்து, அவைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான SMM. முஷாரப் பாராளுமற்றில் தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக பாராளுமன்றில் நேற்று (22.10.2020) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுமகா இருந்தால் 13 ஆம் திருத்தச் சட்டம் போலல்லாது, அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும் அவர் பேசுகையில், இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக இருந்தால், அதிகாரப்பகிர்வு,தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்ற மூன்று விடயங்களை முன்னிறுத்தி எப்போதும் பேசுவது வழக்கமாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறைமையை 1978 ஆம் ஆண்டு JR ஜெயவர்த்தன கொண்டு வந்ததன் பிற்பாடு வந்த எல்லோரும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்றுதான் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர்.

ஆனால் ஜனாதிபதியாக இருந்தவர்கள் யாரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் விடயத்தில் அதிகம் அக்கறை காட்டவில்லை.இப்படியான சூழலில் கடந்த நல்லாட்சியில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்றவர்கள், அதற்கான முயற்சிகளை எடுத்தார்கள் என்ற வகையில் அதன் பங்காளிகளாக இருந்தவர்களுக்கு எனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

19ஆவது திருத்தச் சட்டம் மூலமாக இவ்வளவு அதிகாரக் குறைப்பு ஏற்பட்ட போதும், 225 உறுப்பினர்களை கொண்ட இந்த பாராளுமன்றத்தில் 210 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஒரே ஒருவர் எதிர்த்து வாக்களித்திருந்தார். எனவே 210 பேர்களது ஆதரவோடு வந்த 19 ஆவது திருத்தமானது, ஒரு பிழையான திருத்தமாக இருக்க முடியாது. ஆனாலும் 19ஆம் திருத்தத்தின் ஊடாக இந்த நாடு பின்னடைவுகளை எதிர்கொண்டதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதனால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் மேலெழுந்ததையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமான பிரச்சினைகள் ஏற்பட்ட போது அதனை கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் அதிகார மையங்கள் போட்டியிட்டதன் விளைவாக, சமூகமொன்று தொடர்ந்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக சொல்வதாக இருந்தால் முஸ்லிம் சமூகம் இந்தளவு தூரம் பின்னோக்கி பார்க்கப் படுவதற்கு காரணம் 19ஐ சரிவர நிறைவேற்ற வில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

நிறைவேற்று அதிகார ஒழிப்பு தொடர்பில் பேசி வந்த எல்லா ஜனாதிபதிகளுக்கும் மத்தியில் தற்போதைய ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை மேலும் அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியை செய்து வருகின்றார். எனவே எல்லோரையும் போல் பொதுவாக நான் விமர்சிக்க வரவில்லை. ஒரு நாட்டில் ஸ்திரமான ஆட்சியை கொண்டு வருவதற்கு நிறைவேற்று அதிகாரம் வேண்டும் என்று சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும். அதற்காக ஜனாதிபதியை நான் பாராட்டுகின்றேன்.

லீகுவான்யூ சிங்கப்பூரையும், மஹாதீர் முஹம்மத் மலேசியாவையும் வளர்த்தது போல, ஏன் தென்னாசியப் பிராந்தியத்தில் வளர்ந்த நாடுகள் எல்லாம் நிறைவேற்று அதிகாரத்துடன் கூடியதான ஒரு சக்தியைக் கொண்டுதான் நாட்டை கட்டியெழுப்பி இருக்கின்றது, என்பதை நான் அறிந்தவன். அதற்காக அந்த நோக்கங்களைக் கொண்டதாக 20ஆவது திருத்தம் வந்து இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

20ஆவது திருத்தம் இங்கு முன்வைக்கப்படுகின்ற போது 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் பற்றிய விடயங்கள் பேசப்படுகின்றன. 19ஆவது திருத்தத்தின் போதும் இதே நிறைவேற்று அதிகாரம் பற்றி பேசப்பட்டது. அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படுகின்ற போது பேசப்படுகின்ற முக்கிய மூன்று மையங்களில், அதிகாரப்பகிர்வு பற்றி யாரும் பேசாமல் இருப்பது கவலையளிக்கின்றது. அதனை புதிய யாப்பு ஒன்றில் கொண்டு வருவோம் என்றுதான் எல்லோராலும் சொல்லப்படுகின்றது.

ஆனால் இந்த அதிகாரப் பகிர்வை ஏன் ஒரு திருத்தத்தின் ஊடாக கொண்டு வருவதற்கு இந்த பாராளுமன்றம் தயாராக இல்லை? அல்லது எந்த அரசாங்கமும் தயாராக இல்லை என்பதே மிகப் பெரும் வினாவாக எழுகின்றது.

சோல்பரி அரசியல் யாப்பின் ஊடாக சிறுபான்மைக்கான காப்பு நீக்கப்பட்டதிலிருந்து சிறுபான்மை சமூகம் அழுது கொண்டே இருக்கின்றது. எப்போது ஒரு அதிகாரப்பகிர்வு இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டு மூன்று இனமும் ஒன்றாக இணைந்து ஒரு சமத்துவமான ஆட்சி உருவாகும் என்ற கனவு நீண்டகாலமாக சிறுபான்மை சமூகத்தில் இருந்து வருகின்றது.

யாருமே இந்த சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வை அதிகாரப் பகிர்வின் மூலம் கொடுப்பதற்கான எந்த ஒரு திருத்தச் சட்டத்தையும் கொண்டுவருவதாக இல்லை. ஆனால் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசப்படுகின்ற போது புதிய அரசியல் யாப்பை உருவாக்குவோம், என்கின்ற முன்மொழிவு இங்கு சொல்லப்படுகின்றது.

கடந்த ஆட்சிக் காலத்திலும் கூட புதிய அரசியல் யாப்புக்காக பல்வேறு விடயங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்களது கருத்துக்கள் கூறப்பட்டன. கட்சிகள், சிவில் சமூக அமைப்புகளது கருத்துகளும் பெறப்பட்டன. அதற்கான வரைபுகளும் வரையப்பட்டன. ஆனால் எல்லாமே அப்படியே நின்றுவிட்டன. இப்போது அதே படம் மீண்டும் ஓடுகின்றது.

மீண்டும் மக்களது கருத்துக்கள் கூறப்படுகின்ற நிலை உருவாகி உள்ளது என்றால், ஒரு நாடாக இதனை நாம் பார்க்கின்ற போது, நமது நாட்டில் அரசியல் யாப்பு மாற்ற முயற்சி என்பது கால விரயமாகவும், இந்த சமூகத்திற்கு எவ்வித பயனையும் தராத பணவிரயமாகவும் இருக்கின்றதே அல்லாமல் இந்த நாட்டில் உள்ள மக்களை ஒன்றுபடுத்தி நாட்டை கட்டி எழுப்புவதற்கான முயற்சி இல்லை என்கின்ற எண்ணம் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் வந்திருக்கின்றது.

20ஆம் திருத்தச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில், வர்த்தமாணி அறிவித்தல் இன்றி மற்றும் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படாமல் நீதிமன்ற செயற்பாடுகளை தவிர்த்து அவசர சட்டங்களை கொண்டு வரக்கூடிய ஏற்பாடுகள் காணப்படுகின்றது.15 ஆம் பிரிவில், சட்டமூல அறிவித்தல் ஒன்று வர்த்தமாணி அறிவித்தலின் பின்னர் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்க இருந்த ஆகக் குறைந்த காலப் பகுதியான 14 நாட்கள் ஏழு நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கின்றது.

எனவே இவை குறித்து எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகின்றேன். கடந்த காலங்களில் சில வர்த்தமாணி அறிவித்தல்கள் வந்தது கூடத் தெரியாமல் பல்வேறு காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. சில சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. சில சட்டங்களின் ஊடாக சிறுபான்மைச் சமூகங்கள் பாதிக்கப்பட்டன. இவைகள் தவிர்க்கப்பட, இந்த நிறைவேற்று அதிகாரம் அமைய வேண்டும் எவும் தனது உரையில் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :