பாகிஸ்தான் அரசுடன் மத்திய அரசு நடத்திய சுமூக பேச்சுவார்த்தைக்கு பின்னர் சந்து பாபுலால் சவான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா வந்தடைந்தார். இந்நிலையில், தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலத்தில் உள்ள பூர்விகிர் கிராமத்திற்கு வந்துள்ள சந்து பாபுலால் சவான் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட நிகழ்வு குறித்து அவர் பேசியதாவது ,” என்னை அவர்கள் கைது செய்தவுடன் என்னுடைய வாழ்க்கை முடிந்து விட்டதாகவே கருதினேன். தனி இருட்டு அறையில் அடைத்து வைத்து என்னை கொடுமை படுத்தினர். தூக்க மருந்துகளை ஊசிகளின் வழியே என் உடம்பில் செலுத்தினார்கள். அப்போது என்னுடைய நெற்றியை அவர்களிடம் காட்டி, என்னை கொன்று விடுமாறு கெஞ்சினேன். என்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பி செல்வேன் என நான் எதிர்பார்க்கவே இல்லை” என தெரிவித்தார்.
மேலும், “ காஷ்மீர் மாநிலம் ஊரியில் நடத்திய தீவிரவாத தாக்குதலுக்கு பழிவாங்கவே பாகிஸ்தானுக்கு எல்லை தாண்டி நான் வந்தேன் என, பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் தெரிவித்தேன்” எனவும் கூறியுள்ளார். கடந்தாண்டு காஷ்மீர் மாநிலம் ஊரியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 19 ராணுவத்தினர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ’சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.