எம்.எஸ்.எம்.ஸாகிர்-
முஸ்லிம் ஊடகங்களையும் முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் வளர்ப்பது சமூகத்தின் இருப்புக்கான அடையாளமாகும். முஸ்லிம் ஊடகத்துக்கும், ஊடகவியலாளர்களுக்கும் உதவுவது எனது பார்வையில் ‘ஸதகதுல் ஜாரியா’எனும், நன்மை கிடைக்கும் ஒரு வணக்கமாகும் என கல்விக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.நௌபர்(கபூரி) தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என். எம். அமீன் தலைமையில் அரனாயக்க, ஹெம்மாதகம பிரதேச உயர் வகுப்பு மாணவர்களுக்காக வில்பொலை அஸ்ரப் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்ட‘21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முஸ்லிம் மீடியா போரத்தின் கேகாலை மாவட்ட இணைப்பாளர் ஆதில் அலி சப்ரி, அல்மனார் மஸ்ஜித் மற்றும் திப்பிட்டிய முஸ்லிம் மஸ்ஜித் மகாவித்தியாலயத்தோடு இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், திப்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயம், கடபேரிய அல் ஜலால் மகா வித்தியாலயம், ஹெம்மாதகம அல் - அஸ்ஹர் மகாவித்தியாலயம் ஆகியவற்றிலிருந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து பேசிய அஷ்ஷேக் நௌபல் கூறியதாவது,
நாங்கள் கண்ணியமிக்க எழுத்தாளர்களை தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். நீங்கள் செய்யும் அனைத்தையும் அவர்கள் அறிந்து ஒன்றையும் விடாமல் அவர்கள் பதிந்து கொண்டே இருக்கின்றார்கள். இரு மலக்குகள் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய ஊடகப் பணியை செய்து கொண்டே இருக்கின்றார்கள் என்பதாக அல்குர்ஆனிலே அல்லாஹ் கூறுகிறான்.
‘நூன்’ என்ற எழுத்தின் மீது சத்தியமாக, எழுதப்பட்டிருக்கும் ஏடுகளின் மீது சத்தியமாக! என்று அல்லாஹ் சத்தியம் செய்கிறான். ஒவ்வொரு மனிதனும் தனது தாயின் கருவறையிலே உருவாகி நான்கு மாதங்கள், 3ஆவது நாற்பது அதாவது 120 நாட்களைத் தாண்டியதும் அவர்களுக்காக அல்லாஹ் எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறான். அவர்களுடைய றிஸ்க், காலம், வாழ்நாள், அவர் நல்லவரா? கெட்டவரா? போன்ற எல்லா விடயங்களையும் அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுகிறது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் செய்த வேலை சாதாரண வேலை அல்ல. அல்லாஹ்விடம் இருந்து உலகத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்களுக்கு தூதுச் செய்திகளைக் கொண்டு வந்த உன்னதமான ஊடக சமூகத்துக்கே தலைவராகப் பணியாற்றிய ஒரு மலக்குதான் ஜிப்ரீல் (அலை) என்பதை நாங்கள் மறந்து விடக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் ஓர் ஊடக சந்திப்பைப்போன்று, ஊடக மாநாட்டைப் போன்று, பஜ்ருடைய நேரத்துக்குப் பிறகு உள்ள நேரத்தைப் பயன்படுத்தியதாக வரலாறுகளில் பார்க்கிறோம். முதன் முதலில் உலகத்துக்கு சத்தம் போட்டு உரத்துச் சொல்லும் செய்தியை ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் அபூகுவைஸ் என்ற மலையிலே இப்றாஹீம் நபியவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கட்டிவிட்டு, “மக்களுக்கு ஹஜ்ஜுக்கு வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும்” என நபிகளாரைப் பார்த்து கேட்ட போது, “இப்ராஹீமே! நீ மலைக்கு மேல் ஏறி உலக மக்களுக்கு அழைப்பு விடுப்பீராக! நீ சொல்லும் அழைப்பு யார் யாருக்கெல்லாம் போய்ச் சேர்கிறதோ அவர்களுக்கு ஹஜ்ஜின் பாக்கியம் கிடைக்கும்” என்றார்கள். அன்று ஊடகம் எப்படிப் பயன்படுத்தப்பட்டது என்பதைப் பாருங்கள்.
எனவே இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பிறந்ததிலிருந்து மரணம் வரையும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எங்களை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் மஸ்ஜித் வாயில்களுக்கு மலக்கு கள் வருவார்கள். இமாம் மிம்பருக்கு ஏறுவதற்கு முன் வருகின்ற அனைவரதும் பெயர்கள் பதிவு செய்யப்படுகிறது. இது ஊடகப் பணியா இல்லையா?
எங்களுடைய நன்மை தீமைகள் ஒவ்வொரு நாளும் வலது, இடது பக்கங்களில் பதியப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு ஊடகத்துக்கு அடிப்படை கொடுத்த மார்க்கம் இஸ்லாம்.
ஒவ்வொரு நாளும் இஸ்லாமிய நடைமுறை நம்பிக்கைக் கோட்பாட்டை ஊடகவியலாளர்கள் செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உலகம் தோன்றிய காலத்திலிருந்து அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் பணி ஓர் அமானிதமாகும். இந்தப் பணியை செய்து கொண்டிருப்பவர்கள் மிகப் பெரிய தியாகப் பணியைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதேநேரத்தில் நீதிக்குப் புறம்பாக செயற்படக்கூடாது. யாரையும் தங்களுடைய பணியின் மூலம் சுய சிந்தனைக்காகப் பலிவாங்க முடியாது. நாங்கள் எப்பொழுதும் சமூகம், நாடு, ஒன்றுமை, நேர்மை, சத்தியம் என்ற ரீதியில் அந்த ஊடகத் துறையைச் செய்யும் போது அவர்களுக்குரிய நன்மை நிச்சயம் இருக்கின்றது. அவர்கள் எழுதுகின்ற ஒவ்வொரு சொல்லும் பேச்சும் ‘ஸதகதுல் ஜாரியா’வாக மாற வேண்டுமென்றால் இந்த ஊடகத்துறை புனிதமானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
எனவே எங்களுடைய முஸ்லிம் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பணக்காரர்கள் அல்ல, பெரும் தொழிலதிபர்கள் அல்ல, ஆனால் பலருடைய விமர்சனத்தையும் பெற்று இந்தப் பணியை இந்த நாட்டிலே செய்கிறார்கள் என்றால் அவர்கள் எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் அருள் என்று நினைக்கிறேன். அந்த அருளை நாங்கள் பாதுகாக்க வேண்டுமென்றால் எங்களுடைய அனைத்துத் துரையினரும் ஊடகத்துக்காக அர்ப்பணிப்புச் செய்தே ஆக வேண்டும். எனது பார்வையில் அவர்களுக்கு உதவி செய்வது ‘ஸதகதுல் ஜாரியா’ ஆகும். அவர்களை வளர்த்து விடுவது முஸ்லிம்களின் இருப்புக்கான அடையாளமாகும். இந்த நாட்டில் கட்சி வேறுபாடு, இயக்க, சமூக, மஸ்ஜிதுகளின் வேறுபாடுகள் இன்றி எல்லோரும் இதனை விளங்கி பணியாற்றத் தவறுவோம் என்றிருந்தால் நிச்சயமாக உங்களைப் பற்றி எழுதுவதற்கு கூட ஆள் இல்லாது போய்விடலாம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
எனவே இந்த ஊடக தர்மத்தைப் பாதுகாத்து ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதைப் போன்று ஊடகப் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து உலமாக்களும் முஸ்லிம்களாகிய நாங்களும் பணியாற்ற வேண்டும் - என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வு நான்கு அமர்வுகளாக நடைபெற்றது. முதலாவது அமர்வு தினகரன் பத்திரிகையின் தமிழ்ப்பிரிவு ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாம் தலைமையிலும் இரண்டாவது அமர்வு சிரேஷ்ட ஊடகவியலாளர் ரஷீட் எம். ஹபீல் தலைமையிலும் மூன்றாவது அமர்வு முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அஹ்மத் முனவ்வர் தலைமையிலும் நடைபெற்றது.
விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம். பீ. எம். பைரூஸ், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம். அமீர் ஹுசைன்,நவமணி பத்திரிகையின் ஆசிரியர் பீட உறுப்பினர் கலைவாதி கலீல், ஆகியோர் கருத்தரங்கில் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
தகவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹில்மி முஹம்மட், சுயாதீன ஊடக வலையமைப்பின் வசந்தம் தெலைக்காட்சி செய்தி ஆசிரியர் சித்தீக் ஹனிபா, தினகரன் ஆசிரியர் பீட உறுப்பினர் தௌபீக், நவமணி ஆசிரியர் பீட உறுப்பினரும் ஊடகவியலாளருமான எம். எஸ்.எம். ஸாகிர், மற்றும் அல்மனார் பரிபாலனசபைத் தலைவர் எம்.யூ.பர்ஹான் முஹம்மத், அதிபர் எம். ஐ. எம். எம். ஸாபிரீன், வில்பொலை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ் - ஷெய்க் எம்.எம்.எம். அலி சப்ரி மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கினை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் என்.ஏ.எம். சாதிக் சிஹான் நெறிப்படுத்தினார்.