மட்டக்களப்பு கரவெட்டியில் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை (17.01.2017) மாலை கோலாகலமாக இடம்பெற்றதாக எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத் தலைவர் வேலாப்போடி கெங்காதரம் தெரிவித்தார்.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனும் முன்னாள் தமிழக முதல்வரும் புரட்சித்தலைவருமான டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் 100ஆவது பிறந்த நாளையொட்டி கரவெட்டி பலநோக்கு மண்டப வளாகத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் பொன்மனச் செம்மல் எம்.ஜி. ராமச்சந்திரனின் உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டதோடு 100ஆவது பிறந்தநாள் விழா பொறிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு கொண்டாட்டம் இடம்பெற்றது.
மேலும், எம்.ஜிஆர். நற்பணி மன்றத்தினால், கரவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 50 முதியோர்களுக்கு போர்வைத் துணிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கடந்த வருடம் பல்கலைக் கழகம் சென்ற மாணவர்கள் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், வருகை தந்த கலைஞர்களால் எம்.ஜி. ராமச்சந்திரனின் திரைப்படப் பாடல்கள் பாடப்பட்டதுடன் ஏனைய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
எம்.ஜி.ஆர் நற்பணி மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





