சந்தேகம்:
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஜெ., மரணம் குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி, வழக்கு விசாரணையின் போது சந்தேகம் எழுப்பியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அவர் மரணமடைந்த அதிகாரப்பூர்வத் தகவலைக் கூட மருத்துவமனை நிர்வாகம் தான் முதலில் வெளியிட்டது. அதன் பிறகே, தலைமைச் செயலாளரிடமிருந்து அறிக்கை வந்தது. மூடுமந்திரமான இத்தகைய செயல்பாடுகள் தான் மறைந்த முதல்வர் குறித்த மர்மங்களுக்கும், பலத்த சந்தேகங்களுக்கும் மக்கள் மத்தியில் இடமளித்துள்ளது.
கடமை:
மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான படங்களை வெளியிட வேண்டும் என கருணாநிதி கோரிக்கை விடுத்த போது, அதனை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், உண்மை நிலையை ஆளுந்தரப்பினர் விளக்கியிருந்தால் இன்று பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றிருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இப்போதும் கூட காலந்தாழ்த்தாமல் முழுமையான மருத்துவ அறிக்கைகள், சிகிச்சை முறைகள், மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ-புகைப்பட ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியது ஆளுந்தரப்பின் கடமையாகும். அதுமட்டுமின்றி, மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் சிகிச்சை அளித்ததால், அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டிய கடமை மத்திய அரசுக்கும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், ஜெ.,மரணம் குறித்து உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.dinamalar
