எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கிழக்கு மாகாணத்தில் கலை, இலக்கியம், ஊடகம், சமூகவியல் போன்ற துறைகளில் அதீத திறமையை வெளிப்படுத்தி பிரகாசிக்கும் கிழக்கு மாகாண இளம் கலைஞர்களை பாராட்டிக் கௌரவிக்கும் எண்ணக்கருவில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முதன் முறையாக வழங்கப்படும் 2016 ஆம் ஆண்டிற்கான “அரச இளம் கலைஞர்” விருதினை பல்துறைக்கலைஞர், கவிஞர் எஸ்.ஜனூஸ் பெற்றுக் கொள்கிறார். இவ்விருது விழா இம்மாத இறுதிப்பகுதியில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
இவ்வருடம் கிழக்கு மாகாண அரச இளம் கலைஞர் விருது பெறும் கலைஞரான எஸ்.ஜனூஸ் 2005 தொடக்கம் 2009 வரை இலங்கையின் தனியார் வானொலியான சக்தி எப்.எம்.இல் இணைந்து கொண்டு அறிவிப்பாளராக, நாடக எழுத்தாளராக, பிரதி எழுத்தாளராக கடமையாற்றினார். பின்னராக சுடர் ஒளி ஆசிரிய பீடத்திலும், அதனைத் தொடர்ந்து 2010 தொடக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பகுதி நேர அறிவிப்பாளராகவும் பணி புரிந்து வருகிறார். கலை இலக்கியம் ஊடகத்துறை சார்ந்து ஒரு முழு நேரச் செயற்பாட்டாளராக இவரது பணி தொடர்கிறது.
எஸ்.ஜனூஸ் கவிஞர், இயக்குனர், நாடக எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர், என கலை இலக்கியம் ஊடகத்துறை சார்ந்து பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கரவாகு கலை இலக்கியச் சந்தியின் நிறுவுனராகவும், அகர ஆயுதம் இலக்கிய அமைப்பின் செயற்பாட்டாளராகவும், துருவம் ஊடக வலையமைப்பின் செயலாளராகவும்,ஊவா சமூக வானொலியின் கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் இவர் பணியாற்றி வருகிறார்.
துருவம் ஊடக வலையமைப்பு ஊடாக கலை இலக்கியம் ஊடகம் சார்ந்த செயலமர்வுகள், கல்விசார் செயற்பாடுகள் ,மாணவர் பரிசளிப்புகள், சமூக நலத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்ததில் எஸ்.ஜனூஸின் பங்கு அளப்பரியது.
கலை இலக்கியத்துறை பங்களிப்புக்காக சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் பல்வேறு விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றிருக்கும் ஜனூஸ், அண்மையில் தேசம் தாண்டி இந்தியா, கட்டார் போன்ற நாடுகளில் தனது கலை இலக்கியப் படைப்புகளை வெளியிட்டு வைத்தமை இலங்கை கலைஞர்கள் மத்தியில் முன்மாதிரியாய் அமைந்தது விசேட அம்சமாகும்.
ஜனூஸ் கவிதைகள் ஊடாகவே கலையுலகில் கால்தடம் பதித்தார். “தாக்கத்தி”இவரது முதலாவது கவிதை நூலாக 2012 இல் வெளிவந்தது. 2014 இல் இவரது புதுமை முயற்சியாக வெளிவந்த “குரலாகி” கவிதை ஒலி-ஒளி இறுவட்டு இலக்கியப் பரப்பில் பலரது பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்தது முத்தாய்ப்பான விடயமாகும். இலங்கையின் அனைத்து தேசிய பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் பத்திகள் வெளிவந்திருகின்றன. இந்தியா மற்றும் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் பத்திரிகைகள் மற்றும் இணையங்களிலும் இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் தேசிய வானொலி, தொலைக்காட்சிகளில் எஸ்,ஜனூஸின் பங்களிப்புடனான பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலி,ஒளிபரப்பாகி வருகின்றன. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா முஸ்லிம் பிரிவின் தயாரிப்பில் உருவான சமூக நாடகங்கள் பலவற்றிலும் எஸ்.ஜனூஸ் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கின்றார். மேலும், நேத்ரா டிவியின் பல சிறப்புக் கவியரங்குகளிலும் தனது சிறப்பான கவியாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருப்பதும் இவரின் தனித்துவமாகும். இத்துடன் வசந்தம் டிவியின் தூவானம் நிகழ்ச்சியில் “அடையாளம்”நேர்காணலில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எஸ்.ஜனூஸ் கலந்து சிறப்பித்து தனது கலை இலக்கிய உணர்வுகளை கருத்தாடல்களை முன்வைத்திருக்கின்றார். வசந்தம் வானொலியிலும் இவரது கவிதை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி இருக்கின்றன. தலைநகரில் புகழ்பெற்ற வகவம் இலக்கிய அமைப்பின் மாதாந்த பௌர்ணமிக் கவியரங்கு மேடைகளிலும் இவரின் கவித்திறன் வெளிப்பட்டிருக்கிறது.
நேத்ரா டிவி வழங்கும் “பிலிம் சிட்டி” குறும்பட நிகழ்ச்சியின் விளம்பர முன்னோட்டம் இவரது இயல்பான நடிப்பை பறை சாற்றிய படைப்பாக விமர்சகர்களால் பாராட்டுப் பெற்றது. மேலும், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் இயக்குனரான சுபா இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் HOUSE OF MY FATHER எனும் மும்மொழியிலான சர்வதேச திரைப்படத்திலும் ஜனூஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்திருக்கின்றார். இதுவும் இவரது கலைப்பயணத்தில் முக்கிய மைல் கல்லாகும்.
இத்துடன் அதிகளவிலான குறு நாடகங்களும், 15 இற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களும், 12 பாடல்களும் எழுதி இருக்கின்றார். இலங்கையின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான சவாஹிர் மாஸ்டர், டோனி ஹசன், கலைக்கமல், நசார்,மதீசன், செந்தூரன் உள்ளிட்ட பலரின் இசையமைப்பில் இவர் எழுதிய பாடல்கள் வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலி ஒளிபரப்பாகி இருக்கின்றன.“சவால்” அல்பத்தில் எஸ்.ஜனூஸ் எழுதிய “முக நூலே முக நூலே” பாடல் நவீன இளைஞர்களால் அதிகம் விரும்பப்பட்ட பாடலாக கருதப்படுகிறது. மேலும், எஸ்.ஜனூஸ் எழுதிய “குரலாகி” கவிதை ஒலி ஒளி இறுவட்டில் இடம்பெற்ற பல கவிதைகள் WHATSAPP, FACEBOOK, YOUTUBE போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிரப்பட்டு உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்களால் பார்வையிடப்பட்டிருப்பது இவரின் முயற்சிக்கு கிடைத்த பாரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இவர் இந்த ஆண்டில் வெளியிட்ட “மூசாப்பும் ஒரு முழ வெயிலும்” கவிதை நூலுக்கு தென்னிந்தியாவின் பிரபல கவிஞரும், புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவருமான மு.மேத்தா ஆசியுரை வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும். இந்நூலின் அறிமுக விழாக்கள் இந்தியா,கட்டார் போன்ற நாடுகளில் இடம்பெற்றன.
இதுவரை கலை, இலக்கியச் செயற்பாட்டுத் தளத்தில் எஸ்.ஜனூஸின் ஆக்க இலக்கிய, படைப்புகளாக “பெத்தம்மா” சுனாமியைச் சித்தரிக்கும் திரைப்படம் (2009), “பதியம்” குறும்படம்(2012), “தாக்கத்தி” கவிதைத் தொகுதி(2012), “வை திஸ் கொலவெறி” குறும்படம்(2012), “குரலாகி” கவிதை ஒலி-ஒளி இறுவட்டு (2014), “மூசாப்பும் ஒரு முழ வெயிலும்” கவிதை நூல்(2016) என்பன வெளிவந்திருக்கின்றன. இத்துடன் விரைவில் எறும்புகள் பதிப்பகத்தின் வெளியீடாக இவரின் “இதயத்தின் இடுகைகள்” முகநூல் கட்டுரைகளின் தொகுப்பு மற்றும் பெயர் தீர்மானிக்கப்படாத நாவலும், கவிதை நூலும் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். எஸ்.ஜனூஸின் கலை இலக்கிய செயற்பாடுகள் தொடரவென நாமும் வாழ்த்துவோம்.