இந்நாட்டில் வாழும் தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும் என பொதுபல சேனையின் பொதுசெயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு அனுப்புவதானால், இங்கே வாழும் சிங்களவர், தமிழர் எல்லோரும்தான் இந்தியா போக வேண்டும். நான் போக தயார். ஆனால், தனியாக போக மாட்டேன். இவரையும் கூட அழைத்துக்கொண்டுதான் இந்தியா போவேன். விஜய இளவரசன் மத்திய இந்தியாவிலிருந்து இலங்கையின் மேற்கு கரைக்கு வந்தார். அவருடன் அவரது நண்பர்களும் வந்தார்கள். இங்கு வந்த அவர் வேடர் குல அரசை குவேணியை மனம் புரிந்தார். பின்னர் வேடர் குல அரசியை விரட்டிவிட்டு, தென்னிந்தியாவில் இருந்து தமிழ் இளவரசியை அழைத்து வந்து திருமணம் புரிந்து கொண்டார்.
தமிழ் பெண்களையும் அழைத்து வந்து தன் நண்பர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார். எனவே பெண்களை தென்னிந்தியாவுக்கும், ஆண்களை மத்திய இந்தியாவுக்கும் அனுப்பி நாட்டை வேடர்களுக்கு கொடுத்துவிடுவோமா, என நேற்றிரவு பிரபல தொலைக்காட்சியிலும், இன்று காலை பிரபல தனியார் வானொலியிலும், உரையாற்றிய தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
எடுத்ததுக்கு எல்லாம் தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டுவோம் என சொல்வது ஏன்? இந்த நாடு தமக்கு மட்டுமே சொந்தம். ஏனைய எல்லோரும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை இவர்கள் கைவிட வேண்டும். வடமாகாண முதல்வருடன் சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் மோதுங்கள். அதற்காக அனைத்து தமிழரையும் விரட்டுவோம் என்று கூக்குரல் இட முடியாது. மீண்டும் நாம், கடந்த இருண்ட காலத்துக்குள் முடியாது.
இதேவேளை அமைச்சருடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொது எதிரணியை சார்ந்த இரத்தினபுரி எம்பி ரஞ்சித் சொய்சாவும், பொதுபல சேனையின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கண்டித்தார். இவர் ஒரு இனவாத பாவ பூதம். இவரினால்தான் அன்று இனவாதம் அதிகரித்து அதன் காரணமாக எம் தலைவர் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தார். அமைச்சர் மனோ கணேசன் இவரை எங்கள் கட்சி பட்டியலில் போடக்கூடாது. இவரை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நாட்டில் வாழும் எல்லோருக்கும் இந்த நாடு சொந்தம். இங்கே வாழும் எவரையும் எவரும் வெளிநாடுகளுக்கு விரட்ட முடியாது என எம்பி ரஞ்சித் சொய்சா பதில் கூறினார்.