கல்குடா விவசாய சமூகம் எதிர்நோக்கும் சவால்களும், அதற்கான தீர்வுகளை நோக்கிய பார்வைகளும்..!

அஹமட் இர்ஷாட் -
ல்குடாத் தேர்தல் தொகுதி கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்டதும்,கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்டதுமான புணாணை மேற்கு ஆறு விவசாயக் கண்டங்களையும் நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் இணைத்துக் கொள்ளுதல் தொடர்பில்....

புணாணை மேற்கு விவசாயக் கண்டங்களான:

1.மினுமினுத்தவெளி மேற்கு
2.மினுமினுத்தவெளி கிழக்கு
3.அக்கிறாணை
4.முருங்கையடிப்பட்டி
5.களுவாமடு,காரையடிப்பட்டி
6.கிடச்சிமடு,புணாணை, மயிலந்தனை
மேற்படி ஆறு கண்டங்களில் 10.000 ஏக்கர் நெற்காணிகள் உள்ளன.3000க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் இதனை நம்பி வாழ்க்கை நடாத்துகின்றனர்.மூன்று இனத்து விவசாயிகளும் மேற்படி கண்டங்களில் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.

மாதுறு ஓயா குளத்தையும் அதனை அண்டிய குளங்களான என்.டி.கே குளம்,விம்புறுத்தாவ குளம்,குடாவெவ குளம் ஆகிய குளங்களில் வடிச்சல் நீரை அணைகட்டியே நீர்ப்பாசனம் செய்து மேற்படி நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றன.

பருவப் பெயர்ச்சி மாரி காலங்களில் மேலே சொல்லப்பட்ட குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்படுவதால் பெரும்போகச் செய்கை வெள்ளத்தால் முற்றாகப் பாதிக்கப்படுகின்றன.பல தடவைகள் பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளார்கள். மேற்படி காலங்களில் நெற்காணிகளிலிருந்து விவசாயிகள் இராணுவத்தின் உதவிகளுடன் வள்ளங்களில் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுகாலவரை மேற்படி விவசாயிகளுக்கு எந்தவிதமான இழப்பீடுகளும் கிடைக்கவில்லை.

மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாகவும் இப்பகுதி அமைந்துள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த நாமல்கம, வெலிக்கந்தை, அசேலபுர, கடவத்தமடு, புணாணை, சி.ஐ,சி பாம் விவசாயிகள் மேற்படி நீரை அணைகட்டி நெற்செய்கை, சேனைப்பயிர்ச்செய்கை, செங்கல்வாடி, மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்புக்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு விவசாயி 5 ஏக்கர் நெற்காணிக்கு மாத்திரமே உரிமையாளராவார். மேற்படி ஆறு விவசாய கண்டங்களும், மாதுறு ஓயா வடிச்சல் நீரை அணை கட்டி நீர்ப்பாசனம் செய்வதில் கோங்குள, சுரிச்சவத்தி, கல்லடிவெட்டை, முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் நெற்செய்கைகளில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

மேற்படி ஆறு விவசாயக் கண்டங்களும் வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்தில் காணிப்பதிவேட்டுப் புத்தகத்தில் பி.எல்.ஆர் பதிவு செய்யப்பட்டு விவசாய அறிமுக அட்டை புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. உரமானியமும் வழங்கப்படுகின்றன, ஏக்கர்வரி அறவீடுகளும் செய்யப்படுகின்றன, கமத்தொழில் திணைக்களத்தின் கீழ் ஆறு விவசாயக் கண்டங்களின் ஆறு விவசாய அமைப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் பெரும்பாக உத்தியோகத்தர் தலைமையில் நிருவாகத் தெரிவுகளும் கண்டத்து வட்டவிதானை-கமக்காரப் பிரதிநிதிகள்-விவசாய அமைப்பு நிருவாகத் தெரிவுகளும் நடைபெறுகின்றன.

விவசாய சங்கங்களின் நடைமுறைக்கணக்குகளும் வங்கிகளில் திறக்கப்பட்டு அபிவிருத்தி உத்தியோகத்தரால் பரிசீலனை நடைபெறுகின்றன.விவசாய மாநாட்டில் நமது பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

மேற்படி பிரதேசங்களில் அரசாங்கத்தால் பல இலட்சம் ரூபாய் செலவுகளில் பல நீர் அணைத்தடுப்புக்கள் (ரெகுலேட்டர்கள்) கட்டப்பட்டு நீர்ப்பாசனங்களுக்கு வழி வகுத்துள்ளார்கள். வாய்க்கால்கள் வெட்டப்பட்டுள்ளன, பாதைகள் செப்பனிடப்பட்டுள்ளன, பிரித்தானிய ஆளுனர்களால் வழங்கப்பட்ட கிராண்ட் உறுதிகளும் உள்ளன. மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப் பத்திரங்களும்,நிவாரண முத்திரைகளும் விவசாயிகளிடம் உள்ளன.

புணாணை மேற்கு ஆறு விவசாயக் கண்டங்களுக்காக அரச அதிபர் தலைமையில் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தப்பட்ட நெற்செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் தற்போது காரணமின்றி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்த விவசாய மக்களை சட்டப்படி நீர்ப்பாசன திணைக்களத்தின் நிருவாக ரீதியாக சேர்த்துக் கொள்ளுமாறு மக்கள் தொடர்ந்தேர்ச்சியாக கோரிக்கைகள் முன் வைக்கின்றனர்.

விவசாய மக்களின் கோரிக்கைகள்:

1.அரச அதிபர் தலைமையில் நடாத்தப்பட்டு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்ட புணாணை மேற்கு விவசாய கண்டங்களுக்கான விவசாய நெற்செய்கை ஆரம்பக் கூட்டம் ஒவ்வொரு போகத்திற்கும் நடாத்தப்பட வேண்டும்.

2.புணாணை மேற்கு விவசாய கண்டங்களுக்கான திட்ட முகாமைத்துவக் குழு அமைக்கப்பட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

3.புணாணை மேற்கு ஆறு விவசாயக் கண்டங்களும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும்.

4.வாகனேரிக் குளத்திற்கு நீர் தேவையான காலங்களில் மாதுறு ஓயா குளத்திலிருந்தும் அதனை அண்டிய குளங்களிலிருந்தும் நீர் திறந்து விடுவதைப்போன்று புணாணை மேற்கு விவசாயக் கண்டங்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

5.கள்ளிச்சைக் குளத்தை அகலமாக்கி,ஆழமாக்கி புனர்த்தானம் செய்யப்பட்டால் மாதுறு ஓயா வடிச்சல் நீரை சேமித்து வைத்து தேவையான காலங்களில் நீர்ப்பாசனம் செய்வதற்கு உதவியாக இருக்கும்.புணாணை மேற்கு விவசாயக் கண்டங்களுக்கு மேற்குப் புறத்தில் கள்ளிச்சைக் குளம் அமைந்துள்ளது.

6.மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் அமைந்துளள குளங்கள்:

1.உன்னிச்சைக்குளம்
2.உறுகாமம் குளம்
3.கித்துல்வெவ குளம்
4.மங்களகம குளம்
5.வாகனேரிக் குளம்
6.புணாணை அணைக்கட்டு
7.வடமுனைக்குளம்
8.கட்டுமுறிவுக் குளம்

இவ்வனைத்துக் குளங்களும் மத்திய நீர்ப்பாசனத் திணைக்கள காரியாலய நிருவாகத்தின் கீழுள்ளன. வாகனேரிக் குளம், புணாணை அணைக்கட்டு, வடமுனைக்குளம், கள்ளிச்சைக்குளம் ஆகிய நான்கும் கிரான் பிரதேச செயலக நிருவாக எல்லைக்குள்ளும். கட்டுமுறிவுக்குளம் வாகரை பிரதேச நிருவாக எல்லைக்குள்ளும் அமைந்துள்ளன. 

இந்நான்கு பிரிவு நீர்ப்பாசனத் திட்டங்களையும் பிரித்து ஓட்டமாவடி நீர்ப்பாசனக் கூறுக் காரியாலயத்தை தரமுயர்த்தி தனியாக இயங்கச் செய்வதன் மூலம் விவசாயிகள் பலத்த நன்மையடைவார்கள். வேலை வாய்ப்புக்களும் கிடைக்கும்.கூடிய துர்ரம் பிரயாணம் செய்வதும் தடுக்கப்படும். எனவே மேற்படி நீர்ப்பாசனத் திட்டங்களையும் உள்ளடக்கி ஓட்டமாவடி நீர்ப்பாசனக் கூறுக் காரியாலயத்தை தரமுயர்த்தல்.

7.ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு கமநல கேந்திர நிலையம் என்ற ரீதியில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கும், வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்திற்கும் கமநல கேந்திர நிலையம் இல்லாதது பெரும் குறைபாடாகும். எனவே இரு பிரதேச செயலகங்களுக்கும் பொதுவாக ஒரு கமநல கேந்திர நிலையம் அமைத்துக் கொடுத்தல்.

8.ரெதிதென்ன புகையிரத நிலையத்திற்கு தெற்குப புறம்பாக முன்பாகச் செல்லும் விவசாயப் பாதை முடிவில் காணப்படும் ஆற்றுக்கு பாலம் அமைத்தல் இவ்வாறு கண்டங்களின் விவசாயிகளும் பெரும் நன்மையடைவார்கள்.

விசேடமாக புணாணை மேற்கு விவசாயக் கண்டங்களுக்காக மாதுறு ஓயா கிழக்கிலிருந்து தண்ணீர் திற்ந்துவிடப்பட்டால் இத்தண்ணீருக்கான கட்டணங்களை விவசாயிகள் செலுத்தத் தயாராகவுள்ளனர்.

மேற்படி எட்டுக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் மொத்தத் தேசிய நெல் உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு அடையுமென்பதில் சந்தேகமில்லை.

எனவே மேற்படி திட்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அதிகாரமுள்ள தலைமைத்துவமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருத்தமான நகர்வுகளை முன்நோக்கி நகர்த்துவார்கள் என கல்குடா முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றனர்.

மீள் வாசிப்புக்கும்,ஓருங்கிணைப்புக்குமாக.
வை.எல்.மன்சூர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -