அபு தாஹிர்-
கடமை நேரத்தில் அரச ஊழியர்கள் சிலர் காரியாலயத்தில் கையொப்பம் வைத்து விட்டு சொந்த வேலைகளில் ஈடுபடுவதாக ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஊழியர்கள் சிலர் கையொப்பம் வைப்பதற்கு மட்டுமே காரியாலயம் செல்வதாகவும், சிலர் சக ஊழியர்களுக்கு தொலைபேசியில் தனது கையொப்பத்தையும் வைக்குமாறும் கூறிவிட்டு ஒவ்வொரு நாளும் தங்களின் சொந்த வேலைகளில் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த வாரம் அக்கரைப்பற்றில் நடந்த ஒரு சம்பவத்தில் அரச கடமை நேரத்தில் துண்டுப்பிரசுரம் பகிர்ந்த நபர் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் அவருக்கெதிராக பொலிசில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் பலர் அரசியல்வாதிகளைக் காரணம் காட்டி முறையான விடுகையில்லாமல் வீதிகளிலும் மைதானங்களிலும் உலாவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கடிதம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் அனுப்பிவைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட அரச ஊழியர்களின் புகைப்படங்களையும் வெளியிடவுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
