இளசுகளின் மொழி பெயர்ப்பு விழாவும் பொறுப்புதாரிகளின் அசமந்தப் போக்கும்!

சப்ராஸ் அர்ஹம்-
டந்த 2015.11.08ஆம் திகதி ஞாயிற்றுக் கிழழை சிங்கள மொழி மூல அல்-குர்ஆன் வெளியீட்டு விழாவை இணையதளங்களும், தகவல் ஊடகங்களும் வெளியிட்டன. SLTJ என்ற குழுவின் ஆதரவாளர்களும் பெரிதாகப் பேசப்பட்ட PJ என்பவரைக் காணாதோரும், அவரைப் பாராட்டச் செய்வோரும் முஸ்லிம்களும் காபிர்களுமாக நிறையப்பேர் இருப்பதை காணக்கிடைத்தது.

பாவம் இந்த இளசுகள் சில ஏதேதோ கூறி அவர்களால் தான் நம்நாடே இஸ்லாம் ஆனது போலும் அவர்கள் தான் காதியானிகள், சியாக்கள், குராபிகள் எல்லோரையும் மாற்றிவிட்டது போலும் யாருமே வயது முதிர்ந்தவர்கள் விசேடமாகவும் உலமாக்கள் ஒன்றுமே செய்யவில்லை என்ற பொருள்பட பேசி தமது நாடகத்தையும் முடித்து விட்டார்கள். உரத்த குரலில் பேசியதாலும் பதில் யாருமே சொல்லாததனாலும் அங்கு கூறப்பட்டதே உண்மையென பொதுமக்கள் நம்புவார்களோ என்ற சந்தேகம் எழும்புவதாலும் இதனை எழுதுகிறேன்.

ஆரம்பகாலத்தில் PJ என்பவரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் சிறப்பாக இருந்ததாக ஏற்றாலும் அவரது பிற்கால விளக்கங்களும் நடைமுறையுமே அவர் பற்றிய நல்லெண்ணத்தில் கறை பூசி விட்டது. அவரது கொள்கையை கருத்தை ஏற்காதோரை காபிர்கள் என்று சொல்வதற்கு அவர் துணிந்ததே முதல் காரணமாகும். எது எப்படியாயினும் SLTJ மூலம் சன்டைசச்சரவுகள் நிகழ்ந்ததை மறக்க முடியாது. தன் கொள்கைபடி பெருநாள் தொழுகையில் ஈடுபடாமைக்கு தந்தைக்குப் பொல்லால் அடித்தது SLTJ யின் முக்கிய உறுப்பினரே! இன்னும் பல உண்டு. எனவே இந்த குழுவினருக்கு முன்னரே தவ்ஹீதில் வளர்ந்த உலமாக்களை மறந்து இவர்கள் தான் சகலதையும் சாதித்தவர்கள் எனக் கூறப்பட்டது முழுப் பூசனிக்காயையும் சோற்றில் மறைத்த கதையேயாகும்.

SLTJ எனப்படுவோரின் வயது என்ன? P J என்பவரின் வயது என்ன? இவர்களுக்கு முன்பே இந்த நாட்டில் இருந்த உலமாக்கள் செய்த தியாகத்தினால் தான் இந்தளவு ஒரு தெளிவான நிலைப்பாட்டில் மக்கள் இருக்கின்றார்கள். P J யின் ஊரிலே கப்ருவணக்கம், கப்ரு இஃதிகாப் போன்ற வணக்கங்கள் உண்டு. அதைப் பார்த்து அவர்கள் அங்கு எதிர் பிரச்சாரம் செய்வது போல இங்கும் தம்பிமார்கள் யோசிக்கின்றனர்.

காலா காலத்தில் தேவைப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுத்த மௌலவி ஏ.ஆர். நிஸார் குவ்வதீ, தமீம் ஆலிம், மஸ்ஊத் ஆலிம் போன்றோரை இவர்கள் கண்டதுண்டா? அவர்களது முயற்சிக்கு அல்லாஹ்வின் நல்லுதவி கிடைத்தது. எத்தனை அனாச்சாரங்கள், குருட்டு நம்பிக்கைகள், கப்ருவணக்கங்கள் ஒழித்துக்கட்டப்பட்டன. இந்த இளசுகள் ஏசிக் கொண்டிருப்பதையே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர். உலமாக்களை துச்சமாக மதிக்கும் இவர்கள் தமக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

எனவே SLTJ யினர் மாலிகி யவ்மித்தீனின் வேலையை பார்க்க வேண்டியதில்லை, உலமாக்களைத் திட்டவும் வேண்டியதில்லை. தவ்ஹீத் பேசினாலும் தமது ஈமானை அவர்கள் சரிசெய்து கொள்ள வேண்டும். எமது பேச்சை அல்லாஹ் அவதானிக்கிறான் என்ற உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். எழுதிய எழுத்தும் பேசிய பேச்சும் பொதுமக்களை திசை திருப்பும் வண்ணம் ACJU வை திட்டித் தீர்த்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பேசுவதையும் எழுதுவதையும் விட்டுவிடுவதே SLTJ க்கு ஆரோக்கியமாகும்.

இவர்கள் பிறக்க முன்பே P J அண்ணனின் கொள்கைக்கு எதிர்ப் பிரச்சாரம் செய்த அறிஞர்களான அப்துல்லாஹ் ஹஸரத், உமர் ஹஸரத், அப்துல் ஹமீத் பக்ரி, செய்னுல் ஆப்தீன் ஹஸரத், மஹ்மூத் ஹஸரத் போன்றவர்களைத் தெரியுமா? காதியானிகள் இலங்கை வந்த போது அதனை எதிர்த்து நின்ற உலமாக்களைத் தெரியுமா? காதியானிகளின் முயற்சிகள் தொடர்ந்தபோது அதனை நேரடியாக எதிர்த்த அப்துல் ஹமீத் ஹஸரத், உமர் ஹஸரத், அப்துல் ஹமீத் பக்ரி, போன்றோரை இந்த வசை பாடிகளுக்குத் தெரியுமா? காதியானிகளுக்கு எதிர்க் குரலாக 'காதியானிப் பிரச்சினைகள்' என்ற நூலை எழுதிய நளீமிய்யாவின் முன்னாள் அதிபரும் ACJU வின் முன்னாள் தலைவரும் யூ.எம். தாஸீம் பஹ்ஜி அஸ்ஹரிய்யை இவர்களுக்குத் தெரியுமா? 1970ஆம் ஆண்டு காதியானிகளுக்கெதிராக நீர்கொழும்பில் மாநாடு நடாத்தி அப்போதைய ஜனாதிபதியிடம் நேரடியாகவே சென்று காதியானிகளுக்கு தடைவிதிக்கக் கோரியது யார்? இந்த கொள்கை பேசுவோர்களுக்கு இது தெரியுமா?

காத்தான்குடியில் தோன்றிய அத்வைதக் கொள்கையை 1979இல் நேராக எதிர்த்தது ACJU வா? SLTJ யா? சும்மா பொய்க்கு உரத்துப் பேசி மக்களை பிழையாக வழி நடாத்த வேண்டியதில்லை. அதே ஊரில் பயில்வானிஸம் தோன்றிய போது எதிர்த்து நின்றவர்கள் உலமாக்களே என்பதை இச்சிறுவர்களுக்குத் தெரியுமா? 2007இல் மஹ்தி பவுன்டேசன் இலங்கை வந்தபோது எதிர்த்து நின்று அதை நாட்டை விட்டே வெளியேற்றியது யார்? ACJU வா? SLTJ யா? இன்னும் பல உண்டு. கூலி தரும் அல்லாஹ்வே சகலதையும் நன்கு அறிந்தவன். 

சீயாக்கள் பிரச்சினைக்கு இவர்கள் தான் தலையிட்டதாகச் சொல்வது எவ்வளவு பொய்யெனப் பாருங்கள். இந்தப் பிரச்சினை 1979 இல் இருந்து ஆரம்பித்தபோது அதற்கு எதிராக சகல நடவடிக்கைகளையும் ACJU மேற்கொண்டது. அதன் பொருளாளராக இருந்த மௌலவி ஏ.ஆர்.எம். றூஹுல் ஹக் 'சீயாவும் ஸுன்னாவும்' என்ற நூலை 1982இல் வெளியிட்டது. இவர்களுக்குத் தெரியுமா? இன்னும் பல உலமாக்களும் மக்களுக்கு தெளிவுபடுத்தியது மாத்திரமின்றி சீயாக்கள் வேரூன்றியுள்ள கல்குடாவில் ACJU சென்று மாநாடு நடாத்தியதை மறுக்க முடியுமா? அசின் விராதுவின் வருகையோடு சம்பந்தமாக என்ன ACJU செய்தது என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவையில்லை.

தவ்ஹீத் கொள்கைக்காகப்பாடுபடும் அன்ஸாருஸ் ஸுன்னா இயக்கத்தினரின் பாரிய சேவையை மழுங்கடிக்கப் பார்பப்து பாவமாகும். இந்த நாட்டிலே தவ்ஹீதின் வளர்ச்சிக்காக ஆரம்ப வித்தை நாட்டியது இவர்கள் தான். இவர்கள் கடந்த ரமழானுக்கு முன் புனித அல்-குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை எழுதி வெளியிட்டதும் இங்கு கூறப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். ஏனெனில் இந்த இளசுகளின் செயல்கள் கோழி முட்டையிட்டு கத்துவது போன்றல்லவா இருக்கின்றது.

மேலும் அவர்கள் குறித்த இவ்வைபவத்தில் தனது அண்ணனை இந்நாட்டுக்குள் பிரவேசிக்க விடாமல் தடுத்ததற்கு முஸ்லிம்கள் சார்பாக இந்நாட்டு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாகவும், அராசங்கத்தைக் கூடிய சீக்கிரம் மாற்றி விடுவோம் என்றும் சிறுபிள்ளைத்தனாமாகக் கத்தியுள்ளார்கள்.

இறுதியாக! இந்நாட்டு முஸ்லிம்களுக்கு அண்மைக் காலத்தில் ஏற்பட்ட தம்புள்ளை பள்ளிவாயல் முதல் அளுத்கம கலவரம் வரை ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலைகளில் ACJU வின் நிதானமான தூர நோக்குடைய வழிகாட்டல்கள் எமக்கு வெற்றியை பெற்றுத்தந்ததை யாராலும் மறுக்க முடியாது. இதன் அடிப்படையில் எம்மை வழிநடாத்துவதில் முன்னிற்கும் ACJU விடமும், ஏனைய இஸ்லாமிய அமைப்புகளிடமும், மற்றும் துறைசார்ந்தோர்கள், நலன் விரும்பிகள் தனவந்தர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவர்களிடமும் உருக்கமாக வேண்டிக்கொள்வதாவது. இந்த SLTJ என்ற அமைப்பு விடயத்தில் மௌனிகளாக இருப்பதை இத்துடன் களைந்து விடுங்கள். அந்த இளசுகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அதற்கு அவர்கள் இணங்கவில்லையாயின் அவர்கள் விடயத்தில் கூடிய சீக்கிரம் பகிரங்க அறிவித்தல் ஒன்றை மக்களுக்கு வெளியிடுங்கள். அதாவது அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் மத்தியில் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களோ P J யானிஸ கொள்கையை பின்பற்றக் கூடியவர்கள் என்பதாகும்.

நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காலான்களைப்போல் துள்ளிக்கொண்டிருக்கும் இந்த இளசுகளின் விடயத்தில் சம்மந்தப்பட்ட பொறுப்புதாரிகள் அசமந்தப் போக்கில் இருப்பார்களாயின் இவர்களின் தூரநோக்கற்ற செயல்களால் பாரிய பிரச்சினைகளுக்கு இந்நாட்டில் நாம் அனைவரும் முகம்கொடுக்க வேண்டிவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.அல்லாஹ் நாளை மறுமை நாளில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட பொறுப்புகளைப் பற்றி விசாரிப்பான் என்ற விடயத்தை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதற்கில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்டிக் கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -