மறிச்சுக்கட்டி- வில்பத்து தொடர்பாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் முன்வைத்த பிரேரணை!

21.05.2015 அன்று வடக்கு மாகாணசபையின் 29வது அமர்வின்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அ.அஸ்மின் அவர்கள் முன்வைத்த மறிச்சுக்கட்டி- வில்பத்து தொடர்பான பிரேரணை மற்றும் அதன் பின்னணி விளக்கம்

பிரேரனை: மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேச காணிகளை வில்பத்து விலங்குகள் சரணாலயத்திற்கு உரிய காணிகளாக காட்டும் ஊடக செயற்பாடுகளைக் கண்டிப்பதோடு, குறித்த மக்கள் குடியிருப்புக் காணிகளை, விவசாயக் காணிகளை, மேச்சல் நிலங்களை தொடர்ந்தும் அப்பிரதேச மக்களுக்கு உரித்தான காணிகளாகவே இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாகாண காணித்திணைக்களம் மேற்கொள்ளவேண்டும் என இச்சபை கோரிக்கை விடுக்கின்றது. அத்தோடு குறித்த அரசியல் மற்றும் இனவாத நோக்குடனான பிரச்சாரங்களுக்கு பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தல் என்னும் பிரிவின் கீழ் அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் இச்சபை அதிமேதகு ஜனாதிபதி அவர்களைக் கோரி நிற்கின்றது.

பின்னணி விளக்கம்: ஒரு குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அண்மையில் வில்பத்துவின் காடுகளை அழித்து உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுகின்றார்கள் என்றும் அதற்கு வன்னிப் பிரதேச முஸ்லிம் அமைச்சர் ஒருவரே பொறுப்பு என்றும் ஒரு ஆவணத்தொகுப்பை வெளியிட்டிருந்தது. இன்னும் சில பத்திரிகைகளும் இவ்வாறான செய்திகளை முக்கியத்துவத்தோடு பிரசுரித்திருந்தன, ஒரு சில இனவாத அமைப்புகள் இது விடயத்தில் பூதாகரமான தகவல்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களிடத்தில் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன்.

உங்களுடைய கருத்துக்களை முறையான ஆய்வுகளின் பின்னர் வெளியிடப்பட்டவை அல்ல, அல்லது குறிப்பிட்ட காணி விவகாரத்தோடு தொடர்புடைய காணித்திணைக்களம், வனபரிபாலனத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் போன்ற நிறுவனங்களைக் குற்றச்சாட்டுவதாகவும் இருக்கவில்லை, மாறாக அச்சுறுத்தலை உருவாக்கி அதன்மூலம் மக்களை குழப்புவதே உங்களது நோக்கமாக இருக்கின்றது எனவே உங்களது உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்த முடியுமா ? என்று கேட்க விரும்புகின்றேன்.

குறித்த காணிகள் காலாதிகாலமாக அந்த மக்களுக்கு சொந்தமான காணிகள். முசலி பிரதேச முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முன் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் ஆதாரமற்றவை. இவ்விடயத்தை இனவாத கண்ணோட்டத்தோடு நோக்குவதைத் தவிர்த்து மனிதபிமான கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும். அங்கே இருக்கின்ற மக்கள் வடக்கு மாகாணத்து மக்கள், அவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினால் அதுவிடயத்தில் வடக்கு மாகாணம் தனது முழுமையான கவனத்தைச் செலுத்தும்.

குறித்த குற்றச்சாட்டிலே பின்வரும் மூன்று விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
வில்பத்து வனவிலங்கு சரணாலயப்பகுதி மீள்குடியேற்றத்திற்காக அழிக்கப்படுகிறது
சட்ட விரோதமாக இந்த மீள்குடியேற்றங்கள் செய்யப்படுகின்றன
மீள்குடியேற்றத்திற்கு உரித்தில்லாத பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் மீள் குடியேற்றப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே ஆதாரமற்றவை வில்பத்து வடக்கு மாகாண எல்லைக்குட்பட்டதல்ல, ஆனால் முசலில் பிரதேச செயலகப்பிரிவு வடக்கு மாகாணத்தின் ஒரு பகுதியாகும். மோதறகம ஆறு, வில்பத்து சரணாலயத்தின் வடக்கு எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி வில்பத்து எல்லைப் பகுதிக்குள் முஸ்லிம்களின் எந்தவொரு குடியேற்றமும் காணப்படவில்லை. மோதறகம ஆற்றின் வடக்குக் கரையினை எல்லையாக கொண்டு முசலிப் பிரதேச செயலகப்பிரிவின் தெற்கு நிர்வாக எல்லை அமைந்திருக்கிறது.

இந்தப் பிரதேசத்தில் மரைக்கார் தீவு, பாலைக்குழி, மறிச்சிக்கட்டி, கரடிக்குழி மற்றும் கொண்டச்சி ஆகிய கிராமங்களில் முஸ்லிம்கள் நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் இவர்களும் அடங்குகின்றனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களே தமது பூர்வீக இடங்களில் தற்போது மீண்டும் குடியேற்றப்படுகின்றனர்.

25 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட போது ஒரு குடும்பமாக இருந்தவர்கள் இன்று ஏறத்தாழ ஐந்து குடும்பங்களாக இயற்கையாக அதிகரித்திருக்கின்றனர். 1990களில் வெளியேற்றப்பட்ட குடும்பங்களின் நேரடி சந்ததிகளான இவர்களுக்கும் தமது பரம்பரை பூர்வீக இடங்களில் மீளக்குடியேறுவத்கும் அங்கு வாழ்வதற்குமான அனைத்து உரிமைகளும் இருக்கின்றன.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த வடமாகாண சபைத்தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைபினரோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது அதிலே “ வடக்கிலே இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கும், அவர்களது சந்ததியினருக்கும் வடக்கு மண் உரித்தானது என்கின்ற ஒரு முக்கிய அம்சத்தை குறித்த ஒப்பந்தத்தில் நாம் உள்ளடக்கியாரந்தோம், என்பது இங்கு நினைவு படுத்த தக்கதாகும்.

இந்தக் குடும்ப எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக முசலி பிரதேசத்தில் காணப்பட்ட அரச காணிகள் மீளக் குடியேறுவதற்கு காணிகளில்லாத 2743 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 தொடக்கம் 80 வரையிலான பேர்ச் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலகத்தின் ஊடாகவும் அதன் மேற்பார்வையிலுமே காணிக் கச்சேரிகள் நடாத்தப்பட்டு முறையான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டே இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிப்பகிர்வுக்கு வன இலாகா திணைக்களத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியை நோக்கும்போது முசலி பிரதேச மீள்குடியேற்றம் தொடர்பாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை பொய்யானவை என்பது தெளிவாகின்றது.

மீள் குடியேற்றத்தை எதிர்பார்த்திருக்கும் மக்களில் இன்னும் ஏராளமானவர்கள் காணிகள் வழங்கப்படாமல் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் மரைக்கார் தீவு மக்களின் பிரச்சினை இங்கு முக்கியமாக சொல்லப்பட வேண்டும்.

இந்த மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த, இவர்களுக்குச் சொந்தமான பாரிய நிலப்பரப்பு கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதனை மீளத்தருமாறு கோரி மரைக்கார் தீவு மக்கள் நீண்ட நாட்கள் போராட்டங்களை நடாத்தினார்கள். ஆனால் இதுவரை அந்த மக்களுக்கான தீர்வுகள் எதுவும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஏறத்தாள 150 குடும்பங்கள் தீர்வுகள் எதுவுமின்றி மீளக்குடியேற முடியாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

இக்குடியேற்றம் தொடர்பில் தற்போது முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களின் அமர்க்களத்தில் இம்மக்களின் உண்மையான பிரச்சினைகளும்ம் அவலங்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏற்கனவே வீடுகளைப் பெற்றுக் கொண்ட மக்களும் கூட நீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிக் குறைவுகள் காரணமாக தமது இயல்பு வாழ்க்கையை நிறுவிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை நாம் நேரில் கண்டோம். இதற்கான தீர்வுகளும் இம்மக்களுக்கு விரைவாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

யுத்த காலத்தின்போது இன மத மொழி வேறுபாடின்றி அனைத்து சமூகங்களுமே பாதிக்கப்பட்டன. கொல்லப்பட்ட, அகதிகளாக்கப்பட்ட சம்பவங்களை எல்லா சமூகங்களுமே சந்தித்திருக்கின்றன. விசேடமாக இன சுத்திகரிப்பு என்ற ஒரு படுமோசமான அவலத்தை வடக்கு முஸ்லிம்கள் சந்தித்தனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த சமூகங்கள் அனைத்துமே மீள்குடியேற்றத்தையும் புனர்வாழ்வையும் நஸ்டயீட்டையும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இதனை அரசாங்கம் ஒரு தேசியக் கடமையாகக் கருதி நிறைவு செய்ய வேண்டும்.

முசலி பிரதேச காணிகள் விடயத்தில் இவ்வளவு சிக்கல்கள் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் அந்தப் பிரதேசத்தில் காணபடும் வளங்களேயாகும், குறிப்பாக ஆற்றுபப்டுக்கைகள், அதிலே வருடந்தோறும் விளைகின்ற மணல் முக்கியமான காரணியாகும், காடும் காடு சார்ந்த நிலமும், அதுமட்டுமன்றி கடலும் கடல்சார்ந்த நிலமும் என்கின்ற மூன்றுவகையான நிலங்கள் ஒன்றித்துக்காணபடுகின்ற பிரதேசமாக முசலி காணபடுவதே அங்கே நிலத்துக்கான போட்டி நிலவுவதற்கு முக்கிய காரணமாகும்.

எனவே பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்காமல், வடக்கு மாகாண மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதற்கு ஏற்றவகையில் மத்திய அரசு நாம் மேலே குறிப்பிட்ட பிரேரனை விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -