முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜ பக் ஷவை எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கியமை மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக சாட்சியத்தை பெற்றுக்கொள்ளவே இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதே வேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக் ஷவையும் எதிர்வரும் 23 மற்றும் 27 ஆம் திகதியும் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவன்காட் மற்றும் ரத்ன லங்கா பாதுகாப்பு சேவை தொடர்பாக சாட்சியங்களை பெற்றுக் கொள்வதற்கே அழைக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்குமான அழைப்புக்கள் எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தனது விசாரணை திகதிகளை பிற்போடுமாறும் குறித்த திகதிகளில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தன்னால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாதென்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
