சம்பூர் அனல் மின் நிலைய கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு!

ஜஸ்ரி ஜவாப்தீன்-
மார்ச் மாதத்திற்கான அமர்வு மூதூர் பிரதேச சபையின் புதிய கட்டிடத் தொகுதியில் 2015.03.31ம் திகதி காலை சுமார் 10.00 மணிக்கு ஆரம்பமாகிய வேளை மூதூர் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் ஜஸ்ரி ஜவாப்தீன் அவர்களாள் அனல் மிண்சார கட்டுமாண பணிகளை உடன் நிறுத்தக் கோரிய கண்டணத் தீர்மானத்தை மூதூர் பிரதேச சபை நிகழ்வின் போது சமர்ப்பிக்கப்பட்டது. 

இது குறித்து வாதப் பிரதிவாதங்களின் இறுதியில் கௌரவ உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு மீள் பரிசீலித்து ஏப்ரல் மாத அமர்வில் எடுத்துக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. சம்பூர் மக்களின் வாழ்வாதாரம், கல்வி போன்றன மிகவும் பாதிக்கப்பட்டு சொல்லெனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.இந் நிலை மாற்றம் காண வேண்டும் என்பதனை உள்ளடக்கியதாகவே இவ் வறிக்கை வரையப்பட்டுள்ளது. 

சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டுடிருக்கும் போது சம்பூர் அனல் மின் நிலையம் குறித்து சம்பூரில் பிறந்த மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் மௌனம் சாதிக்கிறது? என்ற வாய் மூல வினா தொடுக்கப்பட்ட வேலையில் த.தே.கூ பிரதேச சபை உறுப்பினர் நாகேஸ்வரன் பதிலலிக்கையில்;

இந்நிய அரசு மூலம் தமிழ் மக்கள் நிறையவே பயன் பெற உள்ளோம். மேலும், எமது பகுதி அபிவிருத்தி அடைய இருக்கிறது. இது குறித்து வாதிட்டு இந்திய அரசோடு நல்லெண்ணத்தை குறைத்துக் கொள்ள நாங்கள் தயாரில்லை என்றார்.இருப்பினும் சிறுபான்மை முஸ்லிம்கள் தான் அபிவிருத்திக்கு தடையானவர்கள் என்ற செய்தியை இந்தியாவிற்கு சூட்சகமாக சொல்லுவதை அவதானிக்கிறோம். 

இது ஒரு சமூகப் பிரச்சினை என்ற அடிப்படையில் முஸ்லிம் உறுப்பினராகிய நாம் பூரண ஒத்துழைப்பு வழங்கிய போதும் த.தே.கூ உறுப்பினர்களால் முறை கேடான செயற்பாட்டினால் இவ்வறிக்கை பிற்போடப்பட்டது. சமூகத்திற்கு விழுமிய அரசியல் போசித்திரும் சாரார் இவற்றினூடாக குளிர்காய நினைப்பது அவர்களது இயலாமையை எடுத்துக்காட்டுகிறது. 

இருப்பினும் அண்மைய ஊடக செய்திகளை நோக்குமிடத்து ஊரார் கோழியை உம்மாவின் பெயரால் கத்தம் ஓதியதைப் போன்ற செயலை மூதூர் முறாசில் செய்து வருகிறார்.பிரதேச சபை அமர்வுகளின் போது சம்பூர் அனல் மின் நிலையம் குறித்த பேசப்பட்டவைகளை சரியாக சொல்ல தவறிவிட்டார். இது தானா ஊடக தர்மம்? ஒரு விடயத்தை தன்னால் சரியாக தொகுத்து கூற முடியாவிட்டால் ஊடகப் பணியில் இருந்நு ஒதுங்கி விட வேண்டும்.


(பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது) 



                                                                                                                                             2015.03.31


கௌரவ: தவிசாளர்/உதவி தவிசாளர்/உறுப்பினர்கள்

சம்பூர் அனல் மின் நிலைய கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூதூர் பிரதேச உறுப்பினர் ஜஸ்ரி ஜவாப்தீனின் கண்டண தீர்மாணம்.


திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் மூன்று இனங்களையும் சேர்ந்த மதத்தலைவர்கள், மக்கள் பிரதி நிதிகள் முக்கியஸ்தர்கள் பலரோடு இணைந்து கருத்துக்களைப் பெற்று இவ்வறிக்கையை வெளியிடுகிறேன்.

இலங்கை நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற மின்சார தேவையை ஈடுசெய்யும் வகையில்; மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவுவதானது தவிர்க்க முடியாத தேவையாக இருந்து வருவதை நாம் உணர்கின்றோம். 

இந்தவகையில், அனல் மின்சார உற்பத்தியின் போது வளி மாசுபடுவதை தடுப்பதற்கான பல்வேறு உத்திகளும் வெப்ப நீரை குளிரூட்டி மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கான பொறிமுறைகளும் தூசுகளையும் சாம்பலையும் சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் கையாள்வதற்குமான வழிமுறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே, இலங்கை போன்ற தொழில் நுட்பப் பயன்பாட்டில் வளர்ந்து வரும் நாட்டில் அனல் மின்சார உற்பத்தியின் போது தாக்கத்தை குறைப்பதற்காக செய்யப்படும் வழிமுறைகள் எந்தளவு பாதுகாப்பை வழங்கும் என்பது கேள்விக் குறியானதேயாகும்.

எனவே, தொழில் நுட்பத்தில் வளர்ந்த நாடுகளை ஒத்த தொழில் நுட்பத்தையே நாம் எமது நாட்டில் பயன்படுத்தப் போகின்றோம் என்றிருந்தாலும்கூட அதன் மூலம் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எற்படும் ஆபத்திலிருந்து தடுக்க முடியுமென ஒரு போதும் நிச்சயப்படுத்த முடியாது.

எனவே, உலகில் பெயர் பெற்ற இயற்கைத் துறைமுகம் அமைந்திருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் கிழக்கே அமைந்திருக்கும் சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. இந்த இடவமைவானது பொருத்தமற்றதாகும்.

பொருத்தமற்றது என்பதற்கான காரணங்கள்;

01) அனல் மின்சார உற்பத்தி இடம்பெறும் இடமொன்றை தெரிவு செய்யும் போது மக்கள் குடியிருப்புக்களிலிருந்து ஒதுக்குப்புறமான பகுதியே தெரிவு செய்யப்படுவது பொதுவாகப் பின்பற்றப்படுகின்ற ஒரு முறையாகும். அனல் மின்சாரத்தின் நேரடிப் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே இம்முறை பின்பற்றப்படுகின்றது.

02) சம்பூர் அனல் மின்சார நிலையத்தை அமைப்பதற்கான இட ஒதுக்கீட்டின் போது இம்முறை பின்பற்றப்படவில்லை. குறித்த இப்பகுதி மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையாக அமைந்துள்ளது. அனல் மின்சார நிலையத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து சுமார் 500 மீற்றரிலும் குறைந்த தொலைவில் மக்கள் குடியிருப்புக்கள் இருக்கின்றன. சுமார் 4..5 கிலோ மீற்றருக்கும் குறைந்த தூரத்தில் மூதூர் நகரம் அமைந்துள்ளது.சுமார் 11.5 கிலோ மீற்றரிலும் குறைந்த தூரத்தில் கிண்ணியா நகரம் உள்ளது. அதேபோல கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலை நகரம் சுமார் 11 கிலோ மீற்றருக்கும் குறைந்த தொலைவில் காணப்படுகின்றது. இதனால் குறித்த பகுதி அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கு பொருத்தமற்றதாகும். 

03) அனல் மின்சார நிலையத்தை அமைப்பதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதியானது கொட்டியாரக்குடா கடலை அண்மித்து அமைந்திக்கின்றது. கொட்டியாரக்குடா கடலானது அதன் ஆழமற்ற அமைப்பினாலும் மீன்கள் மற்றும் இறால் நண்டு முதலான கடல்வாழ் உயிர்கள் தமது இனப் பெருக்கத்திற்கேற்ற சூழுமைவினாலும் தனித்துவமானதாகும். 


04) மூதூர் மற்றும் மூதூரை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமானோரது ஜீவனோபயத்திற்கு இக்குடாக்கடல் நேரடியாக உதவி வருகின்றது.

இதேவேளை குறித்த இடத்தில் அனல் மின்சார நிலையம் நிறுவப்படுமாயின் அதன் தேவைக்காக துறைமுகம் அமைக்கப்படுவதும் அனல் மின்சார நிலையத்திற்குத் தேவையான பெருமளவான நீரை கடலில் இருந்து பெற்றுக் கொள்வதும், கொட்டியாரக் குடாக்கடலின் கட்டமைப்பிலும, உணவுச் சங்கிலியில் பாரிய மாற்றத்தை ஏற்படும்.

அத்தோடு, அனல் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்திய நீரை அதன் முன்னைய இயல்பில் இல்லாமல் மீண்டும் கடலுக்கு இடுவதன் மூலம் கடல்வாழ் உயிர்கள் அழிவடையவோ அல்லது தமது வாழிடத்தை மாற்றிக் கொள்ளவோ முடியும். 

இதனால் மூதூர் பிரதேசத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதோடு மீனவர்களின் ஜீவனோபாயத்திற்கும் பெரும் ஆபத்தும் ஏற்படும்.

05) அத்தோடு அனல் மின்சார உற்பத்தியின் போது வெளிவரும் பாதரசம் முதலான இரசாயனங்கள் கடலில் கலக்கும் போது அதன் மூலம் மீன்கள் பாதிக்கப்படவும் பின்பு அதனைப் பிடித்து உண்ணும் மக்கள் நோய்வாயப்படவும் வாய்ப்பிருக்கின்றது. இதனால் குறித்த பகுதி அனல் மின்சார நிலையம் அமைப்பதற்குப் பொருத்தமற்றதாகும். 

திருகோணமலை மாவட்டம் தொழில் ரீதியில் ஒரு விவசாய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பிரதானமான தொழில் துறையாக விவசாயம் விளங்குகின்றது.

அனல் மின்சார நிலையத்திற்கென தெரிவு செய்யப்பட்ட பகுதியில் விவசாய நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட மூன்று குளங்கள் காணப்படுகின்றன. குறித்த பகுதிக்கு அண்மையாக மக்கள் தோட்டச் செய்கையிலும் நெற்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது இப்பகுதி மக்களது ஜீவனோபாயமாக உள்ளது. சம்பூர் பகுதிக்கு அண்மையாகவும் பெருமளவில் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனல் மின்சார நிலையம் குறித்த பகுதியில் அமைக்கப்படும் போது அதிலிருந்து வெளியேறும் வாயுக்களும் தூசும் வெப்பமும் விவசாயத்தில் பெரும் தாக்கத்தைச் செலுத்தக் கூடியதாக அமைந்து விடும். அவ்வாறு தாக்கம் ஏற்படுகின்ற போது விவசாய அறுவடைகள் பாதிக்கப்படுவதனால் அது அவர்களது வாழ்வாதாரத்தைக் கெடுத்துவிடும் என்பதோடு பிரதான விளைபொருளான நெல்லுக்கு தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி விடும். இதனால் குறித்த பகுதி அனல் மின்சார நிலையம் அமைப்பதற்குப் பொருத்தமற்றதாகும்.

மூதூர் பிரதேசத்திலும் அண்டிய பிரதேசத்திலும் குடிநீராக பெரும்பாலானேர் திறந்த நிலையில் இருக்கும் கிணற்று நீரையும் கணிசமானோர் ஆறு மற்றும் குளத்து நீரையும் பயன்படுத்தி வருகின்றனர். 

அத்தோடு அனல் மின்சார கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் நிலக்கீழ் நிலக் கீழ் நீர் பிரித்தெடுக்கப்படவுள்ளதால் அது கிணற்று நீரில் (இம்மக்களின் குடி நீரில்) தாக்கத்தை ஏற்படுத்தும். 

அனல் மின்சார உற்பத்தியின்போது வெளியேற்றப்படும் கழிவு நீரினால் நிலக்கீழ் நீர் மாசுபடுவதற்கும் வாய்ப்பிருக்கின்றது. இதனால் குறித்த பகுதி அனல் மின்சார நிலையம் அமைப்பதற்குப் பொருத்தமற்றதாகும்.

மக்களின் வாழிடத்திற்கு மிக அண்மையாக அனல் மின்சார நிலையம் அமைக்கப்படுமாயின் அதிலிருந்து வெளியாகும் வாயுக்களும் தூசும் பரவிச் செல்வதன் மூலம் மக்களுக்கு சுவாச நோய், இதய நோய்,புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும்.

இப்பகுதி மக்கள் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் உடல் ரீதியிலும் உள ரீதியிலும் பலத்த தாக்கத்திற்கு உள்ளான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதேவேளையில் அனல் மின்சாரத்தினால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவாகக் காணப்பட்டால் கூட அது பெரும் ஆபத்தை இம்மக்களுக்கு உண்டாக்கிவிடும்.

பொதுவாக அனல் மின்சார நிலையத்திலிருந்து 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் வரை அதன் தாக்கம் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதேநிலையில் மக்களின் வாழிடத்திலிருந்து வெறும் 500 மீற்றரிலும் குறைந்த தொலைவில் அனல் மின்சார நிலையத்தை அமைப்பதென்பது எத்தகைய தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் என்பது தெளிவான விடயமேயாகும். இதனால் குறித்த பகுதி அனல் மின்சார நிலையம் அமைப்பதற்குப் பொருத்தமற்றதாகும்.

எனவே, எந்த வகையிலும் பொருத்தமில்லாத சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையத்தை நிறுவும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முறைப்பாடு செய்வதோடு , இது சமூகக் கடமை என்பதனை ஞபகமூட்டி அனல் மிண்சார கட்டுமான பணிகளை நிறுத்துவதற்கு உதவி ஒத்தாசைகள் புரியுமாறு தயவாய் வேண்டுகிறேன். 

நன்றி
ஜஸ்ரி ஜவாப்தீன்
பிரதேச சபை உறுப்பினர்
மூதூர்


உசாத்துணை : 

01) பீஸ் கோம்
02) பாதிக்கப்பட்ட மக்கள்
03) மூதூர் சமூக தொண்டு நிறுவனம்
04) கிராம அபிவிருத்தி சங்கம் சம்பூர்,கட்டை பறிச்சான்
05) அபிவிருத்தி உத்தியோகத்தர்
06) கிராம சேவகர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -