நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் போராட்டத்திலும் பொது எதிர்க்கட்சியை உருவாக்கியதிலும் ஜாதிக ஹெல உறுமய பிரதான பங்கை வகிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
இதனால், 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து பேசவும் ஜாதிக ஹெல உறுமயவிற்கு அருகதை கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஆரம்ப அடித்தளத்தை இட்டு அந்த வெற்றிப்பயணத்திற்கான சக்தியாக ஐக்கிய தேசியக் கட்சியே இருந்தது.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் அந்த பதவியை எந்த வகையிலும் பெயரளவிலான பதவியாக வரையறுக்க போவதில்லை.
19வது திருத்தச் சட்டம் நிறைவேறினால், அடுத்து பதவிக்கு வரும் ஜனாதிபதி அமைச்சுக்களை தன்வசம் வைத்திருக்கும் சிறப்புரிமை இல்லாமல் போகாது எனவும் கபீர் ஹசீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அத்துடன் 18வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து விட்டு 17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் இந்த சந்தர்ப்பமானது அரசியல் வரலாற்றில் ஒரு பொன்னா சந்தர்ப்பம்.
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதை எதிர்க்கும் சில தரப்பினரின் உள்நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள இது சிறந்த சந்தர்ப்பம் எனவும் கபீர் ஹசீம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
