இந்தியப் பிரதமராக நான் இருப்பதுடன் யாழ்ப்பாணத்திற்கு முதற்றடவையாக வந்ததையிட்டு முதலில் மகிழ்ச்சியடைகின்றேன். நான் இங்கு வந்தது வேறெந்த காரணத்துக்காகவும் அல்ல.
யாழ்ப்பாணத்தில் காலடி வைக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். யாழ்ப்பாணம் ஓர் புதிய அடையாளத்தை காட்டி நிற்கின்றது. யாழ்ப்பாணத்தின் இன்றைய நிகழ்வின் மூலம் உலகிற்கு புதியதோர் வாசனையை அது தரக்கூடியதாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்வு எனக்கு புதிய உணர்வையும் சிந்தனையையும் தருவதுடன் மனதுக்கு திருப்தியையும் சகோதரத் தன்மையையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நேற்று யாழ்.நூலகத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான் யாழ்ப்பாணத்திற்கு வந்த போது வித்தியாசமான உணர்வை அடைந்தேன். நான் வேறு எதற்காகவும் இங்கு வரவில்லை. யாழ்ப்பாணத்தில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன். இந் நிகழ்வு மிகுந்த மனத் திருப்தியை அளிக்கின்றது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பௌதீகமான தொடர்புகள் மாத்திரமன்றி கலாசார ரீதியான விடயங்களும் ஒன்று பட்டுள்ளன.
நான் யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபத்திற்கான நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படும் கலாசார நிலையம் மிகவும் புராதன நுட்பம் வாய்ந்ததுடன் கலாசார விடயங்களை அடையாளப்படுத்தப் போகின்றது. இது உலகின் மிகவும் தரம் வாய்ந்த ஒன்றாக அமையப்போகின்றது.
