எம்.வை.அமீர் -
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதிவியை முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ள இந்தசந்தர்ப்பத்தில், குறித்த பதவியை மட்டக்களப்பைச் சேர்ந்த ஹாபீஸ் நஸீர் அவர்களுக்கு வழங்க அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் தீர்மாநித்துள்ளதாகக் கூறப்படும் இச்சந்தர்ப்பத்தில், அவசர அவசரமாக ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது மத்தியகுழு விசேட கூட்டம் ஒன்றை சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் 2015-02-05 ல் கூட்டியது.
குறித்த கூட்டத்தில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முதலமைச்சர் பதவி மற்றும் கல்முனை தொகுதிக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்படாமை தொடர்பில் முன்வைக்கப்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் அமைதியற்ற சூழ்நிலையும் ஏற்பட்டது. இங்கு ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும் செயலாளர் நாயகத்துக்கும் அனுப்புவதற்காக தீர்மானங்கள் அடங்கிய கடிதங்களும் வரையப்பட்டதுடன், கட்சியின் தலைமை முஸ்லிம் காங்கிரசின் மாபெரும் கோட்டையான கல்முனைத் தொகுதியை புறம்தள்ளுவதாகவும், மறைந்த தலைவரின்வாக்குக்காக ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரசிக்கு வாக்களிக்கும் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளுக்கு தற்போதைய தலைவர் மதிப்பளிக்க வேண்டும் என்றும், சம்மாந்துறையும் அக்கரைப்பற்றும் கட்சிக்கு சவாலாக இருப்பதாக கூறுபவர்கள் கல்முனையை முஸ்லிம் காங்கிரசுக்கு சவாலாக மாற்ற எத்தனிக்கக் கூடாது என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஸீர், மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக கல்முனை தொகுதி மக்கள் அவர்களது ஏனைய அரசியல் கோட்பாடுகளில் இருந்து விலகி செயற்பட்டு வருவதாகவும், இலங்கை முஸ்லிம்களின் தாயகமான கல்முனை மக்களின் அரசியல் இயக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் அம்மக்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் முஸ்லிம் காங்கிரசை வளர்த்தவர்களும் தற்போதைய தலைவரை பிரகடனப்படுத்திய மக்களும் வசிக்கும் சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளையும் நிறைவேற்ற தலைவர் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கிழக்குமாகாணசபையின் அமைச்சரை தீர்மானிக்கும் விடயத்தில் கடந்த சந்தர்ப்பம் ஒன்றில் சாய்ந்தமருது மக்களை கௌரவித்து மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களுக்கும் மாகாணசபை உறுப்பினர் அன்வர் அவர்களுக்கும் உங்களுக்குத்தான் அமைச்சுப்பதவி தரவிருக்கின்றேன் எனக்கூறி ஏமாற்றப்பட்டதாகவும் இவ்வாறான சூழ்நிலை ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இப்படியான ஏமாற்றுக்களை இனிமேலும் கல்முனை மக்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் தொடர்ச்ச்யாக கல்முனை தொகுதி புறக்கணிக்கப்படுமாக இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய பின்னடைவை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் சபையில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்த மக்கள் பிரதிநிதிகளுக்கும், பள்ளிவாசல் தலைமைகளுக்கும் தலைவரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தாங்கள் தற்போதும் நம்புவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவரையும் உருவாக்கிய மக்கள் கிழக்கில் இருக்கத்தக்கதாக தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்குள் அடங்கும் நிறுவனங்களுக்கான தலைவர்களாக கிழக்குக்கு வெளியே இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது தொடர்பிலும் சபையில் கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)