மூவின மக்களிடையேயும் கட்டிக்காத்து கொண்டு வரப்பட்ட இன ஐக்கியம் மஹிந்த தலைமையிலான ஆட்சியில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ரீதியில் பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை கம்பளை நகரில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்;
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடன் செயற்பட்டமையினாலேயே எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. அந்த ஐக்கியத்தினை கட்டி காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசாங்கம் அதனை சீர்குலைத்துள்ளது. அதனால் இன்று தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து பௌத்தர்கள் வேறுப்பட்டு இருக்கின்றனர். இன்று சர்வதேச ரீதியில் பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும்.
வெளிநாடுகளில் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படும் தருணங்களில் அமைச்சர்களையும் தூதுவர்களையும் அனுப்பி அதனை சரி செய்கின்றனர். ஆனால் ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக இன்று சர்வதேச ரீதியில் பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை நீக்குவதற்கு அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
சிறுபான்மை சமூகங்கள் இன்று எமது நாட்டில் ஒரு அச்சமான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகின்றன. இனங்களுக்கிடையே நிலவும் அச்ச உணர்வினை நீக்கி அனைத்து இனங்களும் ஒற்றுமையுடனும், சுதந்திரமாகவும் வாழ வழிவகை செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.அன்று பிரபாகரன் ஏனைய சமூகங்களிடையேயிலிருந்து பௌத்தர்களை வேறுப்படுத்த முற்பட்டார். ஆனால், அதனை அவரால் செய்ய முடியவில்லை. பிரபாகரனால் அன்று செய்ய முடியாமல் போனதை இந்த அரசாங்கம் இன்று செய்து கொண்டிருக்கின்றது என்றார்.
0 comments :
Post a Comment