பொதுபல சேனா என்ற குழுவின் நடவடிக்கைகள் தடைசெய்யப்படுவதுடன், அரசாங்கம் இது விடயத்தில் நியாயமான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் - பிர்தௌஸ்


(கல்முனை நிருபர்)
நாட்டின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்தி, பௌத்த மதத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் பொதுபல சேனா என்ற குழுவின் நடவடிக்கைகள் தடைசெய்யப்படுவதுடன், அரசாங்கம்  இது விடயத்தில்  நியாயமான தீர்வினை ஜனநாயக ரீதியில் பெற்றுத்தர  வேண்டும் என்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். பிர்தௌஸ்  மாநகர சபை அமர்வில் இது விடயமாக தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.


கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு கடந்த (27) புதன்கிழமை மாநகர சபா மண்டபத்தில் முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிர்தௌஸ் மேலும் குறிப்பிடும்போது,

இலங்கை பல்லின் மக்கள் வாழ்கின்ற பல இனத்தவர்களுக்கும் சொந்தமான நாடு என்பதை இலங்கை பிரஜைகள் யாவரும் நன்கு அறிவோம். இலங்கையில் பௌத்த மதத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றார்கள் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். சிறுபாண்மையாக இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஏனையோர் இந்த நாட்டில் அவரவர் மதப்பிரிவுகளைப் பின்பற்றிக்கொண்டு ஒற்றுமையாக இந்த நாட்டின் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருவதை நாம் அறிவோம்.
மிக நீண்ட 30 வருடகால இனவன்முறையின் கொடூரம் யுத்த வெற்றியின் மூலம் அண்மையில்தான் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

 இன்று முஸ்லிம் சிறுபான்மையினர் மேற்படி வன்முறை இயக்கமான பொது பல சேனவினால் அனுராதபுரம் சிக்கந்தர் ஸியாரம், தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல், கொழும்பு, தெஹிவளை, குருநாகல் பகுதிகளில் பல மத்ரஸாக்களின் தாக்குதல் கெடுபிடிகள் என பல பிரச்சினைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. 

ஹலால் பிரச்சினையை பெரிதுபடுத்தினார்கள். இன்று முஸ்லிம்களின் ஈமான் எனும் நம்பிக்கையிலும் கை வைக்க ஆரம்பித்துள்ளார்கள். இதன் மூலம் பௌத்த மறுமலர்ச்சி ஒன்று இந்நாட்டில் ஏற்படுத்தப்படலாம். என்று நினைப்பது முட்டாள் தனமாகும். நிச்சயமாக இது இந்த நாட்டில் மீண்டும் ஒரு இன, மத வன்முறைக்கே வழிவகுக்கும். 1915, 1983 ம்  ஆண்டுகளின் வன்முறைகளைப்போல் இலங்கையில் மீண்டும் ஒரு வன்முறை உருவானால் விளைவு விபரீதமாகும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

அண்மைய ஹலால் விடயத்தில் எமது மீயுயர் சபையான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பெரும்பாலான முஸ்லிம்களின் விருப்பத்திற்கு மாறாக நாட்டின் ஒருமைப்பாடு, நல்லிணக்கம், சமாதானம், ஒற்றுமை  என்பவற்றை கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புகளுடனான ஓர் தீர்வை முன்வைத்தது. அதனையும் பொருட்படுத்தாது பொதுபல சேனா எமது உலமா சபையையும் விமர்சிக்கின்ற அளவுக்கு ஈவிரக்கமற்றதாக செயற்பட்டு வருகின்றது. இதனை இப்பிரேரணையின் ஊடாக வன்மையாக  கண்டிக்கின்றோம்.

இந்த உலமா சபையின் விட்டுக்கொடுப்பின் பின்னர் முஸ்லிம் பெண்களின் பர்தா விடயம் மாத்திரமல்ல, எமது வங்கி முறை, காழி நீதி நடைமுறை விடயம், தொப்பி போடுதல், தாடிவைத்தல் போன்ற விடயங்களிலும் தலையிடுவோம் என்று கூறுகின்றார்கள்.

அது மட்டுமல்ல, கொழும்பு தெமடகொட, பேருவளை போன்ற இடங்களில் காவியுடை அணிந்து கொண்டு பொலிசார் போன்று  நாட்டின் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டதுபோல் அனுமதிபெற்ற இறைச்சிக்கடைகளை பரிசோதிக்கும் நேரம் பொலிசார் பார்வையாளர்களாக மாறும் அளவிற்கு இவர்களுக்கு இலங்கையின் சட்டத்தைக் காக்கும் பொறுப்பைக்கொடுத்தவர் யார் ? இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இல்லையா ? இவர்கள் புலிப்பயங்கரவாதிகளை விடக் கொடியவர்கள். ஹிட்லர், முசோலினி போன்ற ஆட்சியாளர்களுக்கு ஒப்பானவர்கள்.

இவர்கள் விடயத்தில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படத்துகின்ற அனைத்து அரசில்வாதிகளும் இனியும் உறங்கிக் கிடக்காமல் விழித்தெழுந்து தைரியமாக குரல்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

எனவேதான், இலங்கையின் அமைதி, ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் பொதுபலசேனா என்ற குழு தனது செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்யாதவிடத்து,  நாட்டின் நன்மை கருதி அரசு இந்தக்குழுவின் நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும்.  எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் இந்த பிரேரணையை முன்வைக்க உள்ளதாகவும் மேலும் பிர்தௌஸ் தெரிவித்தார்.

இந்த பிரேரணை சபை உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர் சகல சபை உறுப்பினர்களாலும் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டதுடன், ஜனாதிபதிக்கும் இந்த விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபையினால் அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப்பினால்  தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :