“வளமான நாடு – வளமான கிராமம்” என்ற தொனிப்பொருளில் Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் நடைபெற்றது.
தேசத்தைக் கட்டியெழுப்பும் வளமான கிராமங்களை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வு, விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன் மத அனுஷ்டானமாக கிராஅத் ஓதலுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் தலைமையேற்றார். இதன்போது தேசிய உற்பத்தித்திறன் கீதம் அடங்கிய காணொளி இலத்திரனியல் திரையில் காண்பிக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்பு உரையை கிராம உத்தியோகத்தர் ஏ.எம். கியாஸ் வழங்கினார். தொடர்ந்து Clean Sri Lanka நிறுவனத்தின் விளம்பரக் காணொளி சபையில் காண்பிக்கப்பட்டது.
அத்துடன் சமூக உற்பத்தித்திறன் தொடர்பான தலைமையுரையை கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் வழங்கியதுடன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட் சமூக உற்பத்தித்திறன் திட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்க உரையாற்றினார்.
மேலும் உற்பத்தித்திறன் தொடர்பான காணொளியும் அவையோருக்கு காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றன. இதில் அல் பஹ்ரியா பாடசாலை மாணவர்கள் ஹஸீதா நிகழ்ச்சியை வழங்கினர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும் கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ். இம்தியாஸ் கலந்து கொண்டார்.
மேலும் Clean Sri Lanka திட்டத்தின் கல்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.ஆர்.எம். ரினாஸ், உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏ.எல். பாஹிஸா, எச்.எம். நிஸ்ரியா, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் கல்முனை பிரதேச செயலகத்தின் கிரீன் பீல்ட் கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட சமூக உற்பத்தித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த அறிக்கை அதிதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திட்டத்தின் மாதிரி பெயர் பலகையும் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








0 comments :
Post a Comment