மக்கள்–அரசு–சமூக அமைப்புகள் இணைந்தால் மட்டுமே பாதுகாப்பு சாத்தியம் –அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ்



சாய்ந்தமருது போன்ற கடலோரப் பிரதேசங்களில் இயற்கை அனர்த்தங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மக்கள், அரசு, மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க முடியும்,” என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு சுனாமி, 2010 வெள்ளம், மற்றும் அண்மையில் 2024–25ல் ஏற்பட்ட வெள்ளம் ஆகிய அனர்த்தங்களில் சாய்ந்தமருது கடுமையாக பாதிக்கப்பட்டதை நினைவூட்டிய அவர்,
“இந்த அனுபவங்களே எங்களுக்கான விழிப்புணர்வையும், வலுவான முகாமைத்துவத் திட்டங்களையும் உருவாக்க வழிவகுத்தனஎன்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் அனர்த்த முகாமைத்துவ வேலைக்குழு (Working Committee) ஒன்றை அமைப்பது தொடர்பான நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் 2025.11.12 ஆம் திகதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் மேற்ப்படி கருத்துக்களை முன்வைத்தார்.

நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள், அனர்த்த நிவாரண சேவைகளை பொறுப்பாக மேற்கொண்டு வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், ஜனாசா கமிட்டி பிரதிநிதிகள், சமூக சேவை அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய றியாஸ், உண்மையாகவே அனர்த்த முகாமைத்துவப் பணிகளில் ஈடுபடுவது எமது இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும். 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி முதல் 2010ஆம் ஆண்டு வெள்ளம், மேலும் அண்மையில் 2024–25ல் ஏற்பட்ட வெள்ளம் வரை சாய்ந்தமருது பிராந்தியம் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது கவனம் தொடர்ந்து இப்பிராந்தியத்திலேயே மையப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், இளைஞர்களை மையப்படுத்தி அனர்த்த அபாயக் குறைப்பு வேலைத்திட்டங்களை 2019ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 250 இளைஞர்கள் 200 மணிநேர பயிற்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, அரசுத் துறைகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சிகள் இளைஞர்களின் திறனையும், அவசரநிலைகளில் செயல்படும் திறத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. கடந்த 2024ல் ஏற்பட்ட காரைதீவு சம்பவத்திற்குப் பின்னர், பிராந்திய இளைஞர்களுக்கு “Swimming and Diving” பயிற்சிகள் ஆறு மாத காலம் வழங்கப்பட்டன. அதில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெற்றிகரமாக பயிற்சி பெற்றனர். தற்போது அவர்கள் தேவையான சமயங்களில் கடற்படையுடன் இணைந்து பணிபுரியக்கூடிய திறனை பெற்றுள்ளனர்.

இத்தகைய திறமைகளை விரிவுபடுத்தும் நோக்கில் சாய்ந்தமருதியிலேயே புதிய பயிற்சித் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம். தொடக்கமாக சுமார் 130 பேர் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களில் இருந்து விண்ணப்பித்துள்ளனர். இப்பயிற்சி கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

எந்தவொரு அனர்த்த நிலையிலும் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பது மிக முக்கியம். அதற்காக (flood protection bund) வன்ட் ஒன்றை உருவாக்குவதும், தேவைக்கேற்ப திறக்கவும் மூடவும் கூடிய sluice gate அமைப்புகளை நிறுவுவதும் அவசியமாகும்.

இது பிராந்திய மக்களுக்கு நிலையான பாதுகாப்பை வழங்கும் என்றும் அண்மைக்காலமாக சாய்ந்தமருது பிரதேச மக்களின் இடம் இல்லா பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படுவதாகவும் அந்தமக்களின் தேவையை நிவர்த்திக்க எடுக்கப்படும் முயச்சியில் அனர்த்தங்களைக் கட்டுப்படுத்த வோலிவேரியன் பிரதேச எல்லையில் பாதுகாப்பு வன்ட் (bund) அமைப்பது அவசியம் எனவும் வன்ட் அமைக்கும் பணிகள் Irrigation Department, Coast Conservation Department, மற்றும் Municipal Council ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த பணிகள் அனைத்தும் சமூக அமைப்புகள், உள்ளூர் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே சாய்ந்தமருது போன்ற பகுதிகளில் அபிவிருத்தி நிலையானதாக அமையும் என்றும் இதற்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டு, உரிய அதிகாரிகளின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அவசரநிலை நடவடிக்கைகளில் early warning system மற்றும் தகவல் பரிமாற்ற முறைகள் சிறப்பாக செயல்படுதல் அவசியம். கடந்த சில சம்பவங்களில் ஏற்பட்ட தொடர்பு குறைபாடுகள் பெரிய இழப்புகளுக்குக் காரணமாகியுள்ளன. அவை மீண்டும் நிகழாத வகையில் இளைஞர்களுக்கு rescue operation, swimming, communication skills ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

இதனுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சமூக மட்டப் பயிற்சிகளும், ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் பற்றிய பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. அண்மையில் நடத்தப்பட்ட diving பயிற்சியில் பங்கேற்ற இளைஞர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் ஒரு திறமையான, பயிற்சியுற்ற தொண்டர்களை உருவாக்கி, சாய்ந்தமருது பிரதேசத்தை அனர்த்த முகாமைத்துவத்தில் முன்னோடியாக மாற்றுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் எம். எம். ஆஷிக், அனர்த்தங்களைக் கையாண்டு பாதிப்புக்கள் குறைத்து பாதுகாப்பான சாய்ந்தமருது எங்கள் இலக்கு என்று தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் எங்களுக்குக் கடும் சோதனையாக இருந்தது. ஆனால் மக்களும் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து விரைவாக செயல்பட்டதால் பெரும் சேதத்தைத் தடுக்க முடிந்தது,” எனக் கூறினார்.

அவர் மேலும், ஜனாசா கமிட்டி, பள்ளிவாசல் நிர்வாகம், சங்கங்கள், ஜமியத்துல் உலமா, இளைஞர் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியே சாய்ந்தமருதை பாதுகாத்ததாக தெரிவித்தார்..

“இனிமேலும் இதுபோன்ற அனர்த்தங்களுக்கு முன்னேற்பாடாக அரசு மற்றும் மக்கள் இணைந்து ஒருங்கிணைந்த ‘Working Committee’ மூலம் செயல்படுவோம். இதன் மூலம் பிரதேசத்தின் பாதுகாப்பு மட்டுமல்ல, சமூக ஒற்றுமையும் வலுப்படும்,” எனவும் தெரிவித்தார்.

“தோணா மற்றும் கான்கள் சுத்தப்படுத்தப்படுவது அவசியம். Coastal Conservation Department, Municipal Council மற்றும் Irrigation Department ஆகியவை இணைந்து பணியாற்றினால் இப்பகுதி வெள்ளத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படும்.”

பிரதேசத்தின் இயற்கை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மாஸ்டர் பிளான் ஒன்றை வடிவமைத்து, அதனடிப்படையில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

“சாய்ந்தமருது மக்களின் ஒத்துழைப்பே எங்களுடைய வலிமை. பாதுகாப்பான, முன்னேற்றம் நோக்கிய சாய்ந்தமருதை உருவாக்குவது நமது பொறுப்பு,” என பிரதேச செயலாளர் ஆஷிக் கூறினார்.

நிகழ்வின்போது பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கு அங்கத்தினர்களும் நியமிக்கப்பட்டனர்.






 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :