அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் எஹெட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கிய 25,000 ரூபாய் அவசரநிலை நிவாரண உதவித்தொகை இன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இந்த நிதி வழங்கல் இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், வீடுகளில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதற்கும், அவசியமான வாழ்வாதாரப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் இந்த உதவித்தொகை உதவுவதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார். வெள்ளத்தினால் அப்பகுதியில் பல வீடுகள் நீரில் மூழ்கி, வீட்டு உபயோகப் பொருட்கள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமடைந்தன.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிவாரண நிதி வழங்கல் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிகா, நிர்வாக உத்தியோகத்தர், நிதி உதவியாளர், நிர்வாக கிராம நிலதாரி, பிரதம முகாமைத்துவ சேவை அதிகாரி உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிரமங்களை குறைக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மீதமுள்ள பகுதிகளில் மதிப்பிடல் பணிகளும் அதனடிப்படையிலான நிவாரண உதவிகளும் தொடரும் எனவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவியை வழங்க அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கை, சமூக நலனுக்கான முக்கிய முயற்சியாகப் பாராட்டப்படுகிறது.

0 comments :
Post a Comment