ஆசிரியர், அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விதமாக கல்வியமைச்சு மட்டத்தில் தயாரிக்கப்பட்ட சுபோதினி குழுவின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. சுபோதினி அறிக்கையினை செயற்படுத்துவதாயின் மாதத்திற்கு மேலதிகமாக 7,100 கோடி ரூபாவை ஆசிரியர், அதிபர் சேவைக்கு சம்பளமாக ஒதுக்க வேண்டும் என சுற்றாடற்துறை அமைச்சரும் அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் சுபோதினி குழு அறிக்கையை செயற்படுத்துவது சாத்தியமற்றது. அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்படுமென்று அவர் குறிப் பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில்:-
சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சுமார் 50 நாட்களுக்கும் மேலாக நிகழ்நிலை முறைமை ஊடான கற்பித்தலில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போராட்டங்களினால் மாணவர்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர், அதிபர் சேவையில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை ஏற்றுக் கொள்கிறோம். சுமார் 24 வருடமாக தொடரும் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினர் முன் வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண கல்வியமைச்சு மட்டத்திலும், அமைச்சரவை மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் தோல்வியடைந்தன. 2022ம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் ஊடாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று அமைச்சரவை மட்டத்தில் எடுத்த தீர்மானத்தை தொழிற்சங்கத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை.
கொரோனா தாக்கத்தினாலும், ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள கல்வித்துறையை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. ஆகையால் 24 வருட கால பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண அமைச்சரவை மட்டத்தில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. அமைச்சரவை உபகு ழுவினர் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினருடனும், பல்வேறு தரப்பினருடன் விரிவாக கலந்தாலோசித்து 11 யோசனைகள் உள்ளடங்கிய அறிக்கையை அமைச்சரவையில் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்தோம்.
ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை மற்றும் அதிபர் சேவை ஆகியவற்றை ஒன்றிணைந்த சேவையாக்குதல், ஆசிரியர் அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாட்டுக்கு சாதகமான தீர்வு ஆகிய 2 பிரதான கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் முன்வைத்தனர்.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு அமைய ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை, அதிபர் சேவை ஆகிய சேவைகள் ஒன்றிணைந்த சேவையாக்கவும், ஆசிரியர், அதிபர்கள் நிர்வாக சேவைக்கு பிரவேசிப்பதில் இருந்த தடையை நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சம்பள முரண்பாட்டிற்கு கல்வியமைச்சு மட்டத்தில் தயாரிக்கப்பட்ட சுபோதினி குழு அறிக்கையின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது. இக்குழுவின் யோசனையை சம்பள நிர்ணய சபை நிராகரித்துள்ளது. ஆசிரியர், அதிபர் சேவைக்கு ஒரு மாதத்திற்கு மாத்திரம் 11,900 கோடி சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படுகிறது. சுபோதினி குழுவின் அறிக்கையை செயற்படுத்தினால் மேலதிகமாக 7,100 கோடி ரூபா நிதியொதுக்க வேண்டும். தற்போதைய பொருளாதர நெருக்கடிக்கு மத்தியில் அது சாத்தியமற்றது.
அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைக்கமைய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு மாதத்திற்கு மேலதிகமாக 3,200 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட வேண்டும். தொழிற்சங்கத்தினர் முன்வைத்த 2 பிரதான கோரிக்கைக்கு மேலதிகமாக 9 யோசனைகளை அமைச்சரவை உப குழு முன் வைத்துள்ளது என்றார்.

0 comments :
Post a Comment