கல்முனைமாநகரம் எதிர்நோக்கும் மற்றுமொரு பேராபத்து!

வி.ரி.சகாதேவராஜா, 
காரைதீவு நிருபர்-

ல்முனை மாநகரம் எதிர்நோக்கும் மற்றுமொரு பேராபத்து!
இதற்கு மாநகரசபையும் சுகாதாரத்துறையும் பொறுப்புகூறுமா?

அம்பாறை மாவட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாக விளங்கும் கல்முனை மாநகரம் இன்று மற்றுமொரு பேராபத்தை எதிர்நோக்கி வருவதாக சமுக ஆர்வலர்கள் கருத்துரைக்கின்றனர்.

இப்பிராந்தியத்தில் அகற்றப்படும் மலசலகூட கழிவுகள் மாநகரசபை மற்றும் சுகாதாரத் துறையினருக்குத் தெரியாமல் உரிய அனுமதி பெறாமல் மக்கள் பாவிக்கும் கிட்டங்கி ஆற்றில் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இப்பிராந்திய மக்கள் எதிர்காலத்தில் பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவருமென அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக கல்முனையின் இரு முக்கிய புள்ளிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து புலனாய்வு செய்தித்தேடலும் இங்கு இடம்பெற்றிருக்கிறது. அதாவது அக்கழிவுகள் எங்கெங்கு எடுக்கப்படுகிறது? 
எவ்வாறு கொண்டுசெல்லப்படுகிறது? 
எங்கு கொட்டப்படுகின்றது ? என்ற தகவலை நேரடியாக செய்தி நிறுவனமொன்று சேகரித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் மாநகரசபையாக விளங்குவது கல்முனை மாநகரசபையாகும். இங்கு மூவினமக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இங்குள்ள மாநகரசபை சகல இனமக்களையும் அரவணைத்து பணியாற்றவேண்டியது தார்மீகப் பொறுப்பாகும்.

இன்று அங்கு மலசலகூட கழிவு அகற்றல் விவகாரம் விஸ்வ ரூபமெடுத்து வருவதைக் காணக்கூடியதாயுள்ளது. அதுதொடர்பாக சமுக ஆர்வலர்கள் சொல்லியவற்றை அவதானிப்போம்.

கல்முனை மாநகரசபையின் த.தே.கூட்டமைப்பு உறுப்பினரும் சமுகஆர்வலருமான சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்:

கல்முனை மாநகரசபையில் மலசலகூட கழிவுகளை அகற்றுவதற்கென பிரத்தியேகமான வவுசர்பூட்டிய உழவு இயந்திரமுள்ளது. சாரதியுமுள்ளார். ஆனால் இக்கழிவுகளை கொட்ட உரிய இடம் இல்லை என்ற காரணத்தை வைத்து இவ்வேலை முடங்கிக்கிடக்கிறது. வருடக்கணக்கில் மாநகரசபைக்குட்பட்ட மலசலகூட கழிவுகள் சபையின் ஏற்பாட்டில் அகற்றப்படுவதில்லை. இதனால் சபைக்கான பெரும் வருமானமொன்றும் இழக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதே மாநகரசபைக்குட்பட்ட மக்களின் மலசலகூட கழிவுகளை ஒரு தனிநபர் இதேபோன்றதொரு வவுசர்புட்டிய உழவுஇயந்திரம் மூலம் அகற்றி கிட்டங்கி ஆற்றில் சங்கமிக்கும் சாய்ந்தமருதுப்பரப்பில் கொட்டிவருகிறார். இது பலவருடகாலமாக இடம்பெற்றுவருகிறது. இதற்காக அத்தனியார் மக்களிடம் பெருந்தொகைப்பணத்தை அறிவிட்டுவருவதாகத்தெரிகிறது. இதனால் கிட்டங்கி ஆற்றை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சுகாதார சீர்கேட்டை எதிர்நோக்கவேண்டிவரும் . அங்குள்ள மீன்கள் இக்கழிவுகளை உண்டு அதனை மக்கள் உண்ணுகின்ற சந்தர்ப்பத்தில் எழக்கூடிய விபரீதங்களுக்கு இவர்கள் பதில் சொல்வார்களா?

இது பற்றி கல்முனை மாநகரசபை அமர்வுகளில் பல தடவைகள் எடுத்துக்கூறியுள்ளேன். கவனிப்பதாக மேயர் கூறுவார். ஆனால் எதுவுமே நடைபெறுவதில்லை. இவ்வாறு பலவிடயங்கள் கையாளப்படுகின்றன.
பின்னர்தான் தெரியவந்தது. இந்த குறித்த தனிநபர் மேயரினதும் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினரொருவரின் செல்வாக்கில்தான் இந்த பணம்கறக்கும் வேலையில் ஈடுபட்டுவருவதாகத் தெரியவந்தது.

மாநகரசபைக்கு வருமானம் தரக்கூடிய ஒரு வேலை இதற்கான வாகன வசதியிருந்தும் ஒரு தனியார் இவ்வாறு செயற்படுவதை கண்டும் காணாமலிருப்பது விநோதமானது.
மாநகரசபைக்கு அதன் பிரதேசத்தில் இக்கழிவுகளைக் கொட்ட இடம் இல்லையென்றால் இத்தனியாருக்கு சாய்ந்தமருதில் கொட்ட யார் இடம்கொடுத்தது? மாநகரசபை மற்றும் சுகாதாரத்துறைக்குத் தெரியாமல் இத்துறைகளினது அனுமதி பெறாமல் இந்ததனிநபர் எவ்வாறு இத்தொழிலைச் செய்யமுடியும்? என்ற கேள்வியை எழுப்புகிறேன்.

இதனை மாநகரசபை அறியுமா? சுகாதாரத்துறை அறியுமா? கிழக்குமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அறிவாரா? மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

இது தொடர்பாக கல்முனை பிராந்தியத்தில் உள்ள ஒரேயொரு பௌத்த வணக்கஸ்தலமான கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கருத்துரைக்கையில்:

கல்முனை மாநகரசபையின் செற்பாடுகள் தொர்பாக அண்மைக்காலமாக பலரும் பலவித விமர்சனங்களை குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகிறார்கள். பரவலாக ஊடகங்களில் காணமுடிகிறது. ஆராய்ந்துபார்த்தால் அவற்றில் உண்மை இல்லாமலில்லை.

குறிப்பாக கடந்த ஒரு மாதகாலத்துக்கு முன்னர் மின்னல் தாக்கி எமது பன்சல முன்பாகவுள்ள அரச தொடர்மாடிக்குடியிருப்பின் சுற்றுமதில் ஒன்று இடிந்து வீழ்ந்தது. இது எமது பொது பிரதானவீதியில் சிதறிக்கிடந்தது. இதை அகற்றுமாறு மாநகரசபைக்கும் பிரதேச செயலகத்திற்கும் பலதடவைகள் சொல்லியும் எதுவுமே செய்யவில்லை. எமக்கு வேறு வழிதெரியாமல் ஒருமாதத்திற்கு பிறகு நேற்று ஊடகங்களை வரவழைத்து இதுவிடயத்தை பகிரங்கப்படுத்தியபோது இன்று அவசஅவசரமாக அதனைச்செய்கிறார்கள்.  

ஏன் இப்படி அலட்சியமாக ஒருமாதகாலத்திற்கு இழுத்தடிப்பது?

மாநகர எல்லைக்குள் வாழும் அனைவரும் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளே. அனைவரையும் ஒருகண் கொண்டு பார்க்கவேண்டும். குப்பை அகற்றுவதிலும் பாரிய அநீதிகள் பாரபட்சங்கள் இடம்பெறுவதாக மக்கள் அடிக்கடி என்னிடம் முறையிடுகிறார்கள். இந்த தமிழ் உறுப்பினர்கள் வெறுமனே சபையில் அமர்ந்து கதிரையை சூடாக்காமல் மக்களுக்கான சேவையை செய்ய முன்வரவேண்டும்.

அடுத்து இந்த மலசலகூட கழிவுகள் விவகாரம். இக்கழிவுகளை அகற்ற தனியாருக்கு அனுமதி கொடுத்தது யார்? எனக் கேட்கிறேன். மாநகரசபை இச்சேவையை ஏன் செய்யமுடியாது ? மாநகர எல்லைக்குள் கழிவுகொட்ட இடம் இல்லையென்றால் இந்த தனியாருக்கு அந்த இடம் எவ்வாறு கிடைத்தது? கிழக்குமாகாண சுகாதாரத்துறை இச்சீர்கேட்டை அறியுமா? கொரோனா டெங்கு என்றால் உயர்த்திப்பிடிக்கிறீர்கள். ஆனால் மக்களுக்கு நீண்டகாலத்தில் சுகாதாரச் சீர்கேட்டை விளைவிக்கும் இச்செயற்பாட்டிற்கு ஏன் தடைவிதிக்கவில்லை. கண்டுகொள்ளவில்லை.

குறித்த அரசியல்வாதி கல்முனைக்கென எதுவுமே இதுவரை செய்யவில்லை. இனவாதத்தை முன்வைத்து மக்களைப்பிரித்துக் கையாண்டு பதவியை பெறுவதே வேலை. அவர் இவ்வாறான மக்கள்விரோத செயற்பாடுகளிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும்.

மலசலகூடகழிவு விவகாரம் இத்துடன் நிறைவுக்கு கொண்டுவரப்படவேண்டும். இன்றேல் நாட்டின் ஜனாதிபதி கிழக்கு ஆளுநர் ஆகியோரிடம் நேரில் சென்று உரிய ஆதாரங்களுடன் தெரிவிப்பேன் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தொடர்பாகவும் தெரிவிப்பேன். இதனை முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்கு அறியத்தருகின்றேன்.என்றார்.

இதே பிரச்சினையை பொதுமக்கள் பலரும் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மௌனம் கலைத்து பொதுமக்களுக்கான ஆபத்தை தணிக்கவேண்டும் ஆரோக்கியமான சமுகத்தை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என்பதே எமது அவா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :