கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாட்டில் அனைத்து இடங்களிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலன்கருதி பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் சமுர்த்தி கொடுப்பனவு பெறும் பயனாளிகள், மற்றும் பிரதேச செயலகங்களில் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றவுள்ளோர்கள் அலுவலகங்களுக்கு வருகை தரவேண்டாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பொதுமக்களின் அலுவலகத் தேவைகளை அவர்களின் பகுதி கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாறாக அவர்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய காரியங்கள் அனைத்தும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மூலம் அவர்களது வீடுகளுக்குச் சென்று நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வீதி அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீடுவீடாக வந்து தேவையான பொருட்களை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
