ஆசைகளைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக அமைதியான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும்! –வர்தகசங்க தலைவர் முபாறக்.

எம்.வை.அமீர்,பாறுக் ஷிஹான்-

நோன்பு மனிதர்களது ஆசைகளை கட்டுப்படுத்த சிறந்த பயிற்சியை வழங்குகின்றது  என்றும் ஆசைதான் அநேக அனர்த்தங்களுக்கு அடிப்படையாக அமைவதாகவும் இந்த விடயத்தை அனைவரும் சாதாரணமாக உணர்ந்துகொள்ள முடியும் என்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக அமைதியான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் பிரபல வர்த்தகரும் சமூக சிந்தனையாளருமான அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகசங்கம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் இப்தார் நிகழ்வு லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றபோது நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட 24 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மஹிந்த முதலிகே நிகழ்வுக்கு பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல் பண்டாரநாயக்க மற்றும் அம்பாறை மாவட்ட விஷேட அதிரடிப்படைகளின் கட்டளைத்தளபதி ஆர்.ஏ.ஏ.கே.ரத்நாயக்க ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மதத்தலைவர்கள், கல்முனை மாநகர முதல்வர் உள்ளிட்ட அரசியல்வாதிகள், பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகள், அரச அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தக பிரமுகர்கள் என பலரும் குழுமியிருந்த குறித்த சபையில் தொடர்ந்து உரையாற்றிய வர்த்தக சங்கத்தலைவர்,
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பின் இறுதிப்பகுதியில் உள்ளம் நொந்த நிலையில், அனைவரையும் ஒருங்கே சந்திப்பதற்குக் கிடைத்த வாய்ப்பைத் தந்த வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்
ரமழான் என்கிற இந்தமாதமானது முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அதிகமான நன்மைகளைச் சம்பாதிக்கக்கூடிய ஒரு மாதமாக கருதப்படுகிறது. பசித்தும், தாகித்தும் இருப்பதனூடாக ஏழைகளின் பசியை உணரக்கூடியதையும் அதிக தான, தர்மங்கள் செய்யக்கூடிய பக்குவத்தையும் இந்தமாதம் வழங்குகின்றது. என்றும் பொறுமை சகிப்புத்தன்மை போன்ற பாடங்களையும் கற்றுத்தரும் மாதமாகவும் திகழ்கின்றது. என்றும் விஞ்ஞான ரீதியாக நோக்கும் போது ஹாபர்ட் பல்கலைக்கழகமும் WHO எனப்படும் சர்வதேச சுகாதார அமைப்பும் நோன்பு நோற்பதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பட்டியலிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுகர் நோயாளிகளுக்கு அற்புதமான நிவாரணம் இருப்பதாகவும் இதய நோய்க்கும் புற்றுநோய்க்கும் கூட ஆச்சரியமான நிவாரணங்கள் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளனர் என்றும் நோன்பு நோற்பதால் உடலியல் ரீதியில் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் பல கல்வியாளர்கள் ஆராச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர் என்றும் ஒரு கல்வியாளர் நோன்பு தொடர்பில் ஆராய்ந்து அண்மையில் நோபல்பரிசைகூட பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
சில அரசியல்வாதிகளும் தீவிரப்போக்குக் கொண்டோரும் ஆசையின் காரணமாகவே நாட்டில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்துகின்றார்கள் என்பது சாதாரண மக்களும் அறிந்த உண்மையாகும். என்று தெரிவித்த முபாறக்,

இஸ்லாம் மனிதகுலத்துக்குத் தேவையான அநேக விடயங்களை கூறிக்கொண்டிருக்கும்போது சில ஊடகங்கள் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கின்றன என்றும் தான் கூறுவதெல்லாம் அவர்கள் கூறுவதை விடுத்து இஸ்லாத்தைப்பற்றி தேடுங்கள் என்பதுதான்என்றும் உரையாற்றினார்.
இந்த நிகழ்வை தான், சமாதானத்துக்கான ஒன்றுகூடலாகவே பார்ப்பதாகவும் இங்கு கூடியிருக்கும் வர்த்தகப் பிரமுகர்களும் ஏனையோரும் எதிர்பார்ப்பது சமாதானத்தைத்தான் என்றும் இதற்காக தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தெளிவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு முஸ்லிம் அல்லாத நிறைய சகோதர்கள் குழுமியிருகின்றீர்கள் தயவுசெய்து எங்களது சமாதானத்துக்கான செய்தியை உங்களது சமூகம் சார்ந்தோருக்கு எத்திவைக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் ஒற்றுமையே பலம், அதனூடாகவே சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியம். அவ்வாறேதான் தான் தனது தந்தையின் சிறந்த வழிகாட்டலின் காரணாமாக இவ்வாறானதொரு நிலைக்கு வந்தேன் என்பதைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

நமது தாய்த்திருநாட்டை எங்களது தாயாகவும் சிங்கள சகோதரர்களை மூத்த சகோதரர்களாகவும் ஏனைய சமூகம் சார்ந்தோரை இளைய சகோதரர்களாகவும் மதித்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தே ஆகவேண்டும் என்றும் அதனூடாகவே நமது இளம் சிறார்களுக்காக சிறந்த நாட்டை விட்டுச் செல்ல முடியும் வீண் வைராக்கிய போக்கு எங்களது எதிர்கால சந்ததிகளையே பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு சூழலில், இலங்கையில் ஏனைய சமூகங்களுடன் மிகுந்த அன்யோன்யமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் நின்மதியை இல்லாமல் செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத தாக்குதலானது மனிதநேயமுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும்

இலங்கையில் உள்ள இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தோரும் அவர்களைப் பின்பற்றிய 150 முஸ்லிம் பெயர் தாங்கிய சிறுகுழுவினராலும் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலானது இஸ்லாம் அனுமதிக்காத இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்ட யாரோ ஒருவரினதோ அல்லது குழுவினதோ பின்னூட்டலின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கருதுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
குறித்த 150 பேர்களின் பயங்கரவாத போக்கினால் நாட்டிலுள்ள 22 லட்சம் முஸ்லிம்கள் பாரிய பழிச்சொல்லுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். ஆயிரம் வருடங்கள் கட்டிக்காக்கப்பட்ட முஸ்லிம்களின் கௌரவம் ஒரே நாளில் இல்லாமலாக்கப்பட்டத்தை நினைத்து மிகவும் மனம் நொந்துபோய் உள்ளோம்.சிலர் குறித்த நிகழ்வை அரசியலாக்க நினைப்பதன் காரணமாக நாட்டில் அமைதியற்ற சூழல் ஏற்படுகின்றது.

குறித்த பயங்கரவாத கும்பலை இலங்கை முஸ்லிம்கள் அவர்களது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளவுமில்லை என்றும் அதேவேளை பயங்கரவாதிகளது சடலங்களைக்கூட முஸ்லிம் மையவாடிகளில் அடக்கம்செய்ய அனுமதிக்கவுமில்லை. அத்தோடு மட்டும் நின்றுவிடாது அரசாங்கத்துக்கும் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளையும் அவர்களது மறைவிடங்களையும் இலகுவில் இனம்காட்டிக் கொடுத்ததும் முஸ்லிம்கள் என்பதை யாரும் மறுதலிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம்கள், தாங்களை சந்தேகக்கண்கொண்டு பார்க்கப்படுவதாக உணர்கின்றனர். இவ்வாறான ஐயப்பாட்டை இல்லாமல் செய்ய அரசாங்கமும் மதத்தலைவர்களும் பாதுகாப்புப்படையினரும் முன்வரவேண்டும். நாட்டில் விரைவில் இன ஒற்றுமையுடன்கூடிய அமைதிச்சூழல் ஏற்பட வேண்டும்.

இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி, வல்லரசுகள் தாங்களது செல்வாக்கை நமது நாட்டில் நிலைநாட்ட எடுக்கும், ஒரு யுக்தியாகக்கூட குறித்த தாக்குதல் சம்பவங்களை நாங்கள் நோக்க முடியும் என்றும் இவ்வாறானதொரு சூழல் நீடிக்குமானால், நாட்டின் பொருளாதாரம் மிகுந்த பின்னிலைக்குத் தள்ளப்படும் எனவே அரசு குறித்த விடயத்தில் மிகுந்த கருசனை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் பாரதூரமான சம்பவங்கள் நடந்தபோதும் சில ஊடகங்கள் சம்பவத்தை ஊதிப்பெருப்பித்தபோதிலும், பெரும்பான்மை சிங்கள மக்கள் பொறுமையாக இருப்பதையிட்டும் குறுநாகல் போன்ற இடங்களில் சிலர் முஸ்லிம்களின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்த முற்பட்டபோது சிங்கள மக்கள் முன்வந்து தடுத்ததையும் மறக்கமுடியாது என்றும் அவர்களது பொறுமைக்கு தலைப்பதாகவும் தெரிவித்தார்.
முஸ்லிம் பெயர் தாங்கிய சிறுகுழுவால் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலைக் காரணம்காட்டி ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிராக விரல் நீட்டுவதை சம்மந்தப்பட்டவர்கள் மீள்பரிசலனை செய்ய வேண்டும். இந்த நாட்டுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புக்குறித்தும் கருசணை செலுத்த வேண்டும். இந்தநாட்டை துண்டாட வேண்டும் என்றோ, அல்லது நாட்டை தாங்களே ஆழ வேண்டும் என்றோ, அல்லது ஏனைய சமூகத்தினரது மதங்களை நிந்திக்கவேண்டும் என்றோ, இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் நினைத்ததில்லை என்றும் மாறாக எல்லா சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்கு முதலிடம் கொடுத்தே வாழ்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கும் ஏனைய தேவைகளுக்கும் தங்களது சொந்த காணிகளை முஸ்லிம்கள் வழங்கியுள்ளதையும் நிகழ்வுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவியுள்ளதையும் மறந்துவிட முடியாது. நாட்டின் தேசிய வருமானத்துக்கு முஸ்லிம்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் முஸ்லிம் நாடுகள் நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கிவரும் பங்களிப்புகளையும் மறந்துவிட முடியாது.
அண்மையில் 3963 மில்லியன் ரூபாய்களை சவூதி அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வலிப்பு நோய்க்கான வைத்தியசாலை நிர்மானிக்கப்பட்டதினையும் அநேக முஸ்லிம் நாடுகள் பல்வேறு நன்கொடைகளையும் வட்டியற்ற இலகு கடன்களையும் இலங்கைக்கு வழங்கி வருவதையும் நாங்கள் மறந்துவிட முடியாது என்றும் கூறினார்.
சாய்ந்தமருதைப் பொறுத்தமட்டில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ள அதேவேளை தேசிய பாதுகாப்பை நிலைநாட்டும் விதத்தில் ஒத்துளைத்தே வந்துள்ளது என்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தற்கு பிராயச்சித்தமாக சாய்ந்தமருது பள்ளிவாசல், நாங்கள் உபயோகிக்கும் ஆயிரம் ரூபாய் பணநோட்டிலும் பாடப்புத்தகத்திலும் பொறிக்கப்பட்டதையும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அவர்கள் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் சாய்ந்தமருதில் பங்குகொண்டதையும் என்னால் பெருமையுடன் கூறிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

தாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் சமாதானமும் இன ஒற்றுமையும்தான் என்றும் எல்லோருடனும் இணைந்தே வாழ விரும்புவதாகவும் தாங்களை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றும் சமயக்கடமைகளில் தடங்கலின்றி ஈடுபடவும் எங்களது முன்னோர்கள் பெற்றுத்தந்த சட்ட அடிப்படையில் மார்க்க செயற்பாடுகளில் ஈடுபடவும் அரசும் ஏனையவர்களும் உதவ வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட 24 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மஹிந்த முதலிகே, கௌரவ அதிதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல் பண்டாரநாயக்க, அஷ்செய்க் முனீர் முளவ்பார் (நளீமி), சட்டத்தரணியும் சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமா சபையின் முன்னாள் தலைவருமான என்.எம்.ஏ.முஜீப் (நளீமி) கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் ஆகியோரும் உரையாற்றினர்.


































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -