முபாறக் அப்துல் மஜீத்,தலைவர் உலமா கட்சி
பலர் அடுத்தவன் விடயத்தில் பிரதேச வாதம் என்போர் தமது பிரதேச வாதத்தை விட தயாரில்லை.இன்னும் சிலருக்கு பிரதேச வாதம் என்பதற்கும் பிரதேச பற்று என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை.
கொழும்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு இன்று வரை தென்னிலங்கையை சேர்ந்த ஒருவர் அல்லது பலர் எம் பீக்களாக உள்ளனர். ஒரு கிழக்கு மகனை கொழும்பின் எம் பியாக்கி பிரதேசவாதத்தை ஒழிப்போம் என்றால் கொழும்பு முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா? அவர்கள் அவ்வாறு ஏற்கமாட்டார்கள் என்பது பிரதேச வாதம் அல்ல, அம்மக்களின் பிரதேச பற்றுதான் காரணம். அதனை பாராட்டத்தான் வேண்டும்.
ஆனால் மட்டக்களப்பு முஸ்லிம்கள் பாக்கீர் மாக்காரை வெல்ல வைத்தனர்.
அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் ரவூப் ஹக்கீமை வெல்ல வைத்து தாம் பிரதேச வாதிகள் அல்ல என்று நிரூபித்தனர். அத்தகைய அந்த மக்களுக்கு ஹக்கீம் செய்த கைமாறு என்ன?
இத்தகைய துரோகங்கள் காரணமாகத்தான் கிழக்கானை கிழக்கான் ஆள வேண்டும் என்ற விழிப்புணர்வாகும்.
தமது பிரதேசத்தை தாமே ஆள வேண்டும் என்பது பிரதேச வாதம் அல்ல; அது பிரதேச பற்று. நம் நாட்டை நாமே ஆள வேண்டும் என்பது போல். ஆனால் அடுத்தவன் பிரதேசத்தையும் நானே ஆள வேண்டும் என்பதுதான் பிரதேசவாதம்.
வரலாற்றை பார்க்கும் போது பெரும்பாலான தெற்குத்தலைமைகள் கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கு வேட்டு வைத்தே வந்துள்ளனர். கல்முனை மாவட்டத்தையும் தடுத்துள்ளார்கள்.
தென்னிலங்கை முஸ்லிம்கள் பொதுவாக மிகவும் நல்லவர்கள். ஆனாலும் அரசியல் தலைவர்கள் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் வேட்கைக்கு ஆப்பு வைத்தே வந்துள்ளார்கள். இதன் ஒரு கட்டம்தான் கெபினட் அமைச்சர்கள் இருந்த கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் என்பன இன்று அவற்றை இழந்து ஹக்கீமுக்கு பின்னால் நாக்கை தொங்கப்போட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையை உண்டாக்கியவர் ஹக்கீம்.
இந்த நாட்டின் வரலாற்றில் கிழக்கு தலைமையினால் தென்னிலங்கைக்கும் சேவை செய்ய முடியும் என்பது காட்டப்பட்டுள்ளது. அதுதான் தலைவர் அஷ்ரப். ஆனால் தென்னிலங்கை தலைமைகளால் கிழக்கில் பாரிய சேவைகள் நடக்கவில்லை.
உழைப்பவனின் உழைப்புக்கேற்ற கூலி தரப்படவேண்டும் என்கிறது இஸ்லாம். கிழக்கு மக்கள் தமது ரத்தம் சிந்தி தமது வாக்குகளால் மு. காவை வெல்ல வைத்தும் அம்மக்களுக்குரிய கூலி கிடைத்துள்ளதா?
ஆனாலும் ரிசாத் பதியுதீன் களத்தில் இறங்கியதன் பின் அவர் மீதான நம்பிக்கை காரணமாக கிழக்கு மக்களுக்கு கிழக்கு வடக்கு தலைமை என்று மாற்றியுள்ளோம். அந்த நம்பிக்கை வீண் போகாது என்றே தெரிகிறது. வடக்கும் கிழக்கும் நிர்வாக ரீதியில் இரண்டாக இருந்தாலும் உணர்வாலும், மொழியாலும், உரிமைகளாலும் ஒரே பிரதேசமாகும்.
அந்த நம்பிக்கைக்கு மாற்றமாக ரிசாத் பதியுதீன் நடந்தால் கிழக்குக்கு கிழக்கு தலைமையிலான கட்சியே தேவை என்ற கோஷத்தை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம்.
இன்றைய சூழ் நிலையில் கிழக்கு முஸ்லிம்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தலைமையில் ஒற்றுமைப்படுவது காலத்தின் தேவையாகும்.