எம்.எம்.ஜபீர்-
மாகாண சபை உறுப்பினராக நான் தெரிவு செய்யப்படுவதற்கு நீங்கள் வழங்கிய ஒவ்வொரு வாக்கும் தற்போது பெறுமதியுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை மேற்கொள்ளவுள்ளேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
சம்மாந்துறை கல்லரிச்சல்-01, மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் நேற்று ஏற்பாடு செய்த வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சம்மாந்துறை கல்லரிச்சல்-01, மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி எஸ்.பாயிஸா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை ஜனீஸ் வித்தியாலய அதிபர் எம்.எல்.நபீலா உம்மா, கல்லரிச்சல் சமுர்த்தி வங்கி சங்க தலைவர் கே.முஹம்மட் தம்பி, மாதர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாகாண சபை உறுப்பினர் பதவி எனக்காக கிடைத்த பதவியல்ல இது உங்களுக்காக நீங்கள் அழித்த வாக்குகளுக்கான ஒரு பெறுமானம் கிடைத்திருக்கின்றன. இதற்காகவே நான் மாகாண சபை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டு முதல்முதலாக சம்மாந்துறை பிரதேச செயலகத்திலுள்ள அனைத்து பிரிவுகளிலும் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களையும் சந்தித்து உங்களுடைய பிரதேசத்திலுள்ள குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டேன்.
பாடசாலைகளின் அபிவிருத்திகளை அதிபர் மற்றும் கல்வியியலாளர்களை சந்தித்து அறிந்து கொண்டேன். இவையெல்லாம் நீங்கள் எனக்கு வழங்கிய அரசியல் அதிகாரத்தினை கொண்டு பெறப்படும் நிதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவர்களின் ஊடாக கண்டறிந்துள்ளேன். இதனை கொண்டு பிரதேச அபிவிருத்திக்கு என்னை முழு மூச்சாக அர்ப்பணித்து செயற்படுவேன் என தெரிவித்தார்.



