த.நவோஜ்-
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு வருடா வருடம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்படும் ஆன்மீக பாதயாத்திரையானது இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமான யாத்திரையானது ஐந்து நாட்களைக் கொண்டதாக இடம்பெறுகின்றது.
செவ்வாய்க்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது யாத்திரை எதிர்வரும் 13ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் வேளை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை சென்றடையவுள்ளது.
முதலாம் நாள் ஆன்மீக பாத யாத்திரையில் இருநூறுக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்து கொண்டு நந்திக் கொடிகளை ஏந்தியவாறும், அரோகரா என்ற நாமத்தை உச்சரித்து தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றிச் செல்கின்றனர்.
இப்பாதயாத்திரையானது மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி குறுமண்வெளி, எருவில், பட்டிருப்பு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா, ஆரையம்பதி, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, கல்லடி, மட்டக்களப்பு, மாமாங்கம், ஊறணி, பிள்ளையாரடி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, மயிலம்பாவெளி, ஏறாவூர், செங்கலடி, கொம்மாதுறை, வந்தாறுமூலை, மாவடிவேம்பு, சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கோரகல்லிமடு, கிரான், கும்புறுமூலை, கறுவாக்கேணி, வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, மயிலங்கரச்சை, மாங்கேணி, மாவடியோடை, பனிச்சங்கேணி, வாகரை, புளியங்கண்டலடி, கண்டலடி, அம்பந்தனாவெளி, பால்ச்சேனை, புச்சாக்கேணி, கதிரவெளி ஆகிய இடங்களில் பிரதான வீதி வழியாக உள்ள ஆலயங்களுக்கு சென்று தரிசித்து வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற யாத்திரையின் போது தங்களுக்கு சில அற்புதங்கள் இடம்பெற்றதாகவும், மற்றும் தங்களுடைய நேர்த்திக் கடன்கள் நிறைவு பெற்றதாகவும் யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்கள் சிலர் தெரிவித்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மற்றும் சைவப்புலவர் திருமதி.எஸ்.ஞானசூரியம் ஆகியோர் சமய நற்சிந்தனை வழங்கினர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)