பதுளை, பழைமை யுகத்தை மாற்றி, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் நவீன யுகம் ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் இந்நவீன யுகத்துக்கமைய செயற்பட வேண்டியது கட்டாயமாகும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலக புதிய கட்டிடத் தொகுதியை, வைபவ ரீதியாகத் திறந்து வைத்ததன் பின் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;அரச உத்தியோகத்தர்களின் இருண்ட யுகத்தை மாற்றியமைத்து, அனைத்து வசதிகளைக் கொண்ட புதிய கட்டிடத் தொகுதியில் நவீன கதிரைகளில் இருந்து நவீன தொழில்நுட்பங்களுடன் சேவையாற்றக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்.
பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் அரச செயலகங்களை நாடிவரும் பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி, அவர்கள் திரும்பும்போது சிரித்த முகத்துடன் திருப்தியுடன் செல்லும் நிலை ஏற்பட வேண்டும். இதற்காகத்தான் அரச ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு சகல வசதிகளுடன் தொழில் செய்யக்கூடிய சூழலை உருவாக்கி வருகின்றோம். இதனை உணர்ந்து அரச சேவையாளர்கள் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் அவர்கள் ஒரே கூரையின் கீழ் நிவர்த்தி செய்து கொள்ளல் வேண்டுமென்ற என்ற சிந்தனைக்கமையவே இந்த அரச செயலகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகளும், இந்த அரச செயலகங்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்பதற்கான அனைத்து வசதிகளையும் கிராமப்புறங்களுக்கும் வழங்கியுள்ளோம். இவ்வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஈ கவுர்மன்ட் எமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளதன் பேரில் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் மற்றும் மரண சான்றிதழ் ஆகியவற்றை மூன்று நிமிடங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்று புதிய நவீன யுகத்துக்கேற்ப நாமும் எமது நிலையை மாற்றி அமைத்துக்கொள்ளல் வேண்டும் என்றார்.

0 comments :
Post a Comment