இங்கிலாந்து அணிக்கு எதிரான டுவென்டி-20 போட்டியில் தோல்வி அடைந்ததற்கு தானே பொறுப்பேற்பதாக இந்திய அணியின் அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய டுவென்டி-20 போட்டியில், 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
இப்போட்டியின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால் 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதில், 3, 5வது பந்தில் ஒரு ஓட்டம் எடுக்கும் வாய்ப்பு இருந்தும் டோனி எடுக்கவில்லை, கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல தவறினார், இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து டோனி கூறுகையில், பேட்டிங் வரிசையில் 6 அல்லது 7 வது இடத்தில் வரும் வீரர், வந்த வேகத்தில் பந்துகளை வேகமாக அடித்துவிட முடியாது. அம்பதி ராயுடுவைப் பொறுத்தவரையில், அப்போது தான் களமிறங்கி இருந்தார். தவிர 19வது ஓவரில் இவர், பந்துகளை சரியாக எதிர்கொள்ளத் தவறினார்.
பொதுவாக 6 பந்தில் 17 ஓட்டங்கள் எடுப்பது என்பது, எப்போதுமே கடினமானது தான். இதனால் கடைசி ஓவரில் அனைத்து பந்துகளையும் நானே எதிர்கொள்வது என நினைத்து பேட்டிங் செய்ய முடிவு செய்தேன்.
இவற்றை சரியான முறையில் எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால், பேட்டின் நுனியில் சந்தித்ததால், பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை.
கடைசியில் போட்டியை வெற்றிகரமாக முடிக்கவில்லை. இதனால் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். முதல் பந்தில் சிக்சர் அடித்தேன், அடுத்த இரு பந்துகளையும் அடித்து இருக்க வேண்டும். இதை நழுவ விட்டதால் நெருக்கடி அதிகரித்தது என்று தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment